குஷ்புவே நமஹ! ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர் விரைவில்!

0

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு கருப்பு புள்ளியை மட்டும் வைத்து, இது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்… என்று கேளுங்களேன். நீங்கள் போதும் போதும் என்று சொல்கிற வரைக்கும் எழுதித் தள்ளுவார் ஸ்டான்லி ராஜன். வானத்திற்கு கீழேயிருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அலசி கிழித்து விடுகிற அபாரமான எழுத்தாற்றல் கொண்டவர்.

ஊரே ஒன்று சேர்ந்து ஒருவரை போராளி என்று கொண்டாடினால், “அவரை ஏன்யா போராளின்றீங்க? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று கேள்வி கேட்டு, மேற்படி போராளியின் இன்னொரு முகத்தை எழுதுவார். அந்த கட்டுரையை அவர் முடிக்கும் நேரத்தில், அந்த போராளியின் வாழ்த்து கோஷங்களில் பல ‘வருத்த’ கோஷங்களாக மாறியிருக்கும்.

ஒருவரின் நம்பிக்கையையும் பிடிவாதத்தையும் எழுத்தால் கரைக்கிற திராவகம் அவர். வெறும் எழுத்தாக மட்டும் அது இருக்காது. சமயங்களில் கேள்வியாக இருக்கும். சமயங்களில் பதிலாக இருக்கும். சமயங்களில் தத்துவமாக இருக்கும். பேஸ்புக்கில் இவர் எழுதுகிற எல்லாவற்றுக்கும் பின்னூட்டங்கள் நிறையும். பாராட்டுகள் கொட்டும்.

இப்படியெல்லாம் ஒருபுறம் கவனிக்கப்படுகிற இந்த எழுத்தாளர், நம்ம குஷ்புவின் அதிதீவிர ரசிகர் என்பதுதான் ஆச்சர்யம். மீத்தேன் பற்றி சீறிக் கொண்டிருப்பார். நடுவில் யாரேனும் குஷ்பு… என்று கோர்த்துவிட்டால் போதும். அப்புறம் மீத்தேன் வெறும் தேன் ஆகிவிடும். அவ்வளவு பெரிய ரசிகனை, அதே குஷ்புவை எழுத்தால் அர்ச்சனை செய்யச் சொன்னாலென்ன என்று தோன்றியது. நாம் பேசிய ஐந்தாவது நிமிஷத்தில் ஒரு எபிசோடை அனுப்பி வைத்தார். “ஒரே நாளில் பத்து எபிசோட் கூட அனுப்ப ரெடி. நீங்க போடுவீங்களா?” என்றார்.

அந்த அடங்காத ரசிகனின் தீராத வேத மந்திரம்தான் இந்த தொடர். பிடித்திருந்தால் படியுங்கள். பிடிக்கா விட்டாலும் படியுங்கள். அதற்கு ஒரு ரசிகனின் விசில் சப்தத்தை கடந்து போகிற பக்குவம் மட்டும் இருந்தால் போதும்.

நன்றி

அன்புடன்
ஆர்.எஸ்.அந்தணன்
ஆசிரியர். நியூதமிழ்சினிமா.காம்.

Leave A Reply

Your email address will not be published.