நிபுணன் விமர்சனம்

0

கையில கிடைச்ச துப்பாக்கிய வச்சு கருவாடு சுடுகிற டைரக்டர்களெல்லாம், ஒருமுறை ‘நிபுணன்’ பார்க்க வேண்டும்! ‘துப்பறியும் கதை என்பது வெறும் டுமீல் டுமீல் அல்ல… மூளை’ என்பது புரியும். ஒவ்வொரு திருப்பங்களையும் உணர உணர எழுதி, திணற திணற ரசிக்க வைத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். சீரியல் கில்லர் யார்? ஏனிந்த கொலை வெறி? இவ்விரண்டும்தான் முழு ஓட்டமும். தியேட்டரிலிருக்கிற மொத்த சனமும் கதையின் பின்னாலேயே ஓடுகிறது. முடிவு? அப்பாடி…. ஆபத்தில்ல!

சென்னையில் அடுத்தடுத்து கொலை நிகழ்க்கிறது. சிஐடி ஆபிசரான அர்ஜுனும், அவரது அசிஸ்டென்டுகள் பிரசன்னா, வரலட்சுமியும் கொலையாளி யார் என்று மேயக் கிளம்புகிறார்கள். கொலையாளி விட்டுப் போகும் தடயங்கள், அடுத்த கொலை இதுதான் என்ற குறிப்புகள், இவ்விரண்டும் ஒரு கொடிய கிளைமாக்சுக்கு கொண்டு செல்கிறது. அவனின் கடைசி இலக்கு… வேறு யாருமல்ல. அதிகாரி அர்ஜுன்தான் என்பது தெரியவர… அவர் எப்படி தப்பித்தார்? கொலைகாரன் எப்படி சிக்கினான்? முதல் பாதி, இரண்டாம் பாதி இவ்விரண்டையும் இரட்டை குதிரையாக பூட்டிக் கொண்டு வண்டியை ராக்கெட் வேகத்தில் ஓட விட்டிருக்கிறார் அருண் வைத்யநாதன். தமிழில் இப்படியொரு படம் வந்து எவ்வளவு நாளாச்சு!

கிழட்டு சேவலாயிருந்தாலும் அந்த முரட்டு லுக் போகவேயில்ல அர்ஜுனுக்கு. அவருக்கு வரும் அந்த திடீர் வியாதி, முக்கியமான கட்டங்களில் எல்லாம் முரண்டு பண்ணுகிறது. கையில் கிடைத்த கொலையாளியை இரண்டு முறை தப்பிக்கவிடுகிறார் அர்ஜுன். மேலதிகாரி தடுத்தும், மருத்துவமனையிலிருந்து இவர் கிளம்புகிற நேரத்தில், தேசிய கீதத்தை இன்னொரு முறை போடுங்கப்பா… என்கிறது ரசிகனின் மனசு! மனைவி ஸ்ருதி ஹரிகரனுக்கும் இவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் பிரமாதம். ஆனால் ஆக்ஷன் கிங்கின் நரை விழுந்த மீசை தாடிதான் நெருட விடுகிறது சாமீ. (அதிருக்கட்டும்… அர்ஜுனின் மனைவியையும் குழந்தையையும் பின்னி மில்லில் கொண்டுபோய் வைத்து மிரட்டாமல் விட்டீங்களே… அதுக்கே ஒரு ராஜ நமஸ்காரம் டைரக்டர் சார்)

வரலட்சுமிக்கு யூனிட் சாப்பாட்டை ஒரு ‘வேளை’ ஆக்கியிருந்தால், ஒருவேளை பிட் ஆகியிருப்பாரோ என்னவோ? இருந்தாலும் சுஜாதாவின் கதைகளில் வருவது போல, இவரை வச்சு காமெடி பண்ணியிருக்கிறார்கள். அவ்வளவு சீரியஸ் நேரத்திலும் பிரசன்னாவின் நக்கல் மொழிக்கு வரலட்சுமி ரியாக்ஷன் கொடுப்பதெல்லாம் தியேட்டரை ரிலாக்ஸ் பண்ணுகிறது.

பிரசன்னாவை சூரி லெவலுக்கும் கீழே லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார் டைரக்டர். ஒரு முக்கியமான போலீஸ் அதிகாரி, ஒரு இடத்தில் கூட தன் புஜபலம் காட்டாமல் போனது துரதிருஷ்டமே? அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் புஸ் ஆகிவிடுகிறார் பிரசன்னா. (அர்ஜுனின் உள் பாலிடிக்ஸ் தெரிந்திருந்தால் இந்தப்படத்தில் கமிட் ஆகியிருக்க யோசித்திருப்பாரோ? எனிவே… அடுத்த படத்திலேயாவது ஆறுதல் கொடுங்க அருண்)

அந்த பிளாஷ்பேக் அலட்சிய பெற்றோர்களுக்கு ஒரு அழுத்தமான எச்சரிக்கை!

சீரியல் கில்லர் யார் என்பதை சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். அதனால் கோ அஹெட். (போஸ்டர்ல கூட அவர் போட்டோவை தவிர்ப்பது நல்லது. ஐடியா ஐடியா)

இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிஷ உதறல் மற்றும் பதற்றத்தை தன் கேமிராவில் உள்வாங்கி வெளிக் கொண்டு வந்திருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா. அரையிருட்டு சென்னையையும், ஏரியல் வியூக்களையும் இவரின் கண் கொண்டு பார்ப்பது அலாதி அழகு!

பின்னணி இசை அவ்வளவு பொருத்தம். நவீனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். ஒரு காட்சி கூட நீளமில்லை. வேஸ்ட் இல்லை. வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றுகிறது எடிட்டிங்!

எழுத்தையே ஸ்டன்ட் ஆக்கி, இன்சிடென்டுகளையே குத்துகளாக்கியிருக்கும் இந்தப்படத்தின் டைரக்டர் அருண் வைத்யநாதன்தான் ‘ஆவி’ போன தியேட்டர்களுக்கும் உயிர் கொடுத்திருக்கும் ‘நிபுணன்’! அடுத்த படம் எப்ப சார்?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.