ஒரு கிடாயின் கருணை மனு / விமர்சனம்

0

‘விழுங்கறது ஆட்டுக்கறியா இருந்தாலும், முழங்கறது ஜீவகாருண்யமா இருக்கணும்’ என்று நினைக்கிற முட்டாள் தேசத்துக்கு முன், ஒரு கிடாயின் பார்வையில் ‘உயிரை’ பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ‘எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா?’ என்று வியக்கிற அளவுக்கு வித்தைக்கார மனுஷன். உலக விருதுகளை வென்று விட்டு உள்ளூருக்கு வந்திருக்கும் இப்படம், தெருவுக்கு தெரு வியக்கப்படுவது நிச்சயம்!

குக்கிராமத்திலிருந்து குல தெய்வ வழிபாட்டுக்கு கிளம்புகிறது சுமார் ஐம்பது பேர் கொண்ட சொந்தபந்த கூட்டம். ஒரு வாடகை லாரியில், வெட்டப்படும் கிடா ஆட்டுடன் கிளம்பும் அந்தக் கூட்டத்தில் புதுமண தம்பதி ஒன்றும் அடக்கம். போகிற வழியில் பொட்டல் காட்டில் ஒரு ஆக்சிடென்ட். குறுக்கே விழுந்து உயிரை விடும் ஒருவனை அப்படியே விட்டுவிட்டு கிளம்புவதா? ஓரமாக புதைத்துவிட்டு கிளம்புவதா? பெரும் குழப்பத்தில் அந்த நடுவழியிலேயே தங்கும் உறவுகளுக்கு நேரும் இன்னல்களும், இடுக்கணும்தான் முழு படமும்! ‘அடேய்… ஒரு மனுஷ உயிருக்காக இவ்வளவு துடிக்கிறீங்களே. எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஒரு ஆட்டை பலி கொடுக்குறீங்களே?’ என்பதுதான் இந்தக் கதையின் உள் தத்துவம்!

ஓப்பனிங் காட்சியே ஒரு கிடா, தன் கண் கொண்டு இந்த மனிதர்களை நோக்குவதுதான். ஆட்டின் கண் வழியே பார்த்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்ற அந்த முதல் காட்சியே, இந்தப்படம் வழக்கமான உப்புமா கிண்டல் இல்லை என்பதை சொல்லிவிடுகிறது. அதற்கப்புறம் படத்தில் வரும் ஈர்க்குச்சி, எறும்புகள் கூட என்னமாய் நடித்திருக்கிறார்கள்! சிலபல முகங்கள் சினிமாவில் ஏற்கனவே வந்தவை. சில முற்றிலும் புதுசு. பேசுகிற ஸ்லாங், பாடி லாங்குவேஜ், சின்ன சின்ன பிரசன்டேஷன்கள் என்று அசர விட்டிருக்கிறார்கள் அத்தனை பேரும். அவ்வளவு ஏன்? ஒரு படத்தின் ஹீரோயின் என்றால், இப்படிதான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தையெல்லாம் போட்டு நொறுக்கியிருக்கிறார் சுரேஷ் சங்கய்யா. அறிமுக நாயகி ரவீணா, அப்படியொரு சுமார் ரகம்! பட்… நச்சென்று மனசுக்குள் தைத்துக் கொள்கிறார்.

ஒருவன் மீது லாரியை ஏற்றிவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சியில் வாழ்நாள் முழுக்க தவிக்கும் கேரக்டரில் விதார்த். நடிப்பில் நூறு சதவீதத்தை தொட்டுவிட்டாலும், அந்த அழுக்கு கூட்டத்தில் தனியாக துருத்திக் கொண்டு இருப்பவர் இவர் மட்டுமே!

அரும்பாடு, கொண்டி, இன்னும் விதவிதமாக ஊருக்குள் புழங்கும் பெயருடன் திரியும் இவர்கள், பேசுகிற ஒவ்வொரு டயலாக்குக்கும் தியேட்டரில் பேரிரைச்சல், கரகோஷம்! சமயங்களில் டபுள் மீனிங்கில் போட்டுத் தாக்கும் இவர்களில், தாய்குலமே அந்த ‘டபுள்களை’ எடுத்துக் கொடுக்கிற விஷயமெல்லம் கிராமங்களுக்கேயுரிய குறும்பு, கொப்பளிப்பு!

ஒரு வக்கீல், எப்படியெல்லாம் தன் குறுக்குப் புத்தியால் சின்ன பிரச்சனையை பெரிதாக்குகிறார் என்பதை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துகிறார் ஜார்ஜ். இப்படி இந்தப்படத்தில் வருகிற கேரக்டர்களை பற்றி பேச ஆரம்பித்தால், பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்.

ஒரு சாதாரண கதை. சுவாரஸ்யமான டயலாக்குகள். ஆனால் படம் ஒரு வனாந்திரத்தை விட்டு வெளியே நகரவேயில்லை. இந்த சிக்கலான சுச்சுவேஷனிலும், நம்மை படத்தை விட்டு நகர விடாத திரைக்கதைக்கு, முழு சப்போர்ட்டாக இருக்கிறது துல்லியமான எடிட்டிங். ஒரு காட்சி கூட, நீளத்தை மீறியோ குறைத்தோ இல்லை.

படத்தோடு படமாக ஒன்றியிருக்கிறது ரகுராமின் இசை. பாடலாசிரியர்கள் வேல்முருகன், குருநாதனின் வரிகளும் தனியாக கேட்டு ரசிக்கிற அளவுக்கு ஸ்பெஷல்.

அதிக செலவில்லை. பதிலாக, தன் மூளையை மட்டுமே அதிகம் செலவு செய்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா! நிறைய பேர் இப்படி வாங்கய்யா… சினிமா பிழைக்கும்!

வெட்டாத கிடா! வெந்தது போல் ருசி!!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.