மருத்துவமனையில் ஓவியா! மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்?

0

ஒரு சேனலில் வெளியாகும் நிகழ்ச்சி பற்றி இன்னொரு டி.வி சேனலில் வெளிப்படையாக விவாதிக்கவே மாட்டார்கள். ‘வேறொரு சேனல் நிகழ்ச்சிக்கு நாம் ஏன் பப்ளிசிடி தருவானேன்?’ என்கிற எண்ணம்தான் காரணம். ஆனால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பற்றி பேசாத சேனல்கள் இல்லை. இதுகுறித்து சூடான விவாதங்களும் நடந்து வருவதுதான் வியப்பு. ஆனால் பிரமாண்டமாக ஊதப்பட்ட இந்த பலூனின் மொத்த காற்றும் ஓவியா என்கிற ஒரு ஃபேஸ் வேல்யூவை வைத்துதான் என்பதை சேனலும் புரிந்தே வைத்திருக்கிறது.

நேற்று நடந்த கசமுசா கலவரங்கள், அந்த பிரமாண்ட பலூனில் பொசுக்கென ஓட்டையை போட்டுவிடுமோ என்கிற விமர்சனம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. யெஸ்… ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து விடுபடுவார் என்கிற எண்ணத்தை விதைத்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல… ஓவியா தன் மேனேஜருடன் காரில் செல்லும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. ‘வெளியேறும் ஓவியா’ என்று குறிப்புடன் உலா வரும் அந்த புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஓவியா ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட, சமூக வலைதளங்களில் “இனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்” என்று சூடமடித்து சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் தோல்வியாலும் அடுக்கடுக்கான மன அழுத்தத்தாலும் தாறுமாறாக நடந்து வந்த ஓவியாவை சமாளிக்க முடியாமல் தவித்த சேனல் நிர்வாகம், அவரது தற்கொலை முயற்சிக்குப் பின் சில சங்கடங்களை சந்தித்தது. லோக்கல் போலீஸ் அதிகாரிகள் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து விசாரணை நடத்தினார்கள். அது மட்டுமல்லாமல் ஓவியாவை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துமிருக்கிறார்கள்.

அவர் ஒரேயடியாக வெளியேற்றப்பட்டுவிட்டாரா? சிகிச்சை முடிந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியை தொடர்வாரா? இதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. சேனல் நிர்வாகம் இது குறித்த விஷயங்களை மிக மிக ரகசியமாக வைத்திருப்பதால், திக்கு தெரியாமல் தத்தளித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

ஓவியா மீண்டும் வருவதை பொறுத்துதான் அது பிக் பாஸ்சா? பிக் புஸ்…சா? என்பது தெரிய வரும்!

Leave A Reply

Your email address will not be published.