மாத்திரைக்குள் இருக்கு மனுஷனோட யாத்திரை! புரிய வைக்கும் ஔடதம்!

0

கோ, அயன் என்று தன் பாட்டுக்கு தமிழ் வளர்த்து வருகிறார் கே.வி.ஆனந்த். வாரணம் ஆயிரம் என்று தன் படத்திற்கு தலைப்பு வைத்த கவுதம் மேனனுக்கும் ஒரு நன்றி. இவையெல்லாம் கமல் ஸ்டைல் தமிழிலிருந்தாலும், “அப்படின்னா என்னங்க?” என்று அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்ளும் மக்கள், அதற்கப்புறம் அதுபோல வரும் எந்த வார்த்தைக்கும் அர்த்தம் கேட்க ஆர்வம் கொள்ளும் வழக்கம், தமிழுக்கும் நல்லது. மிச்ச மீதி உசிரோடு இருக்கும் தமிழ் வாத்தியார்களுக்கும் நல்லது.

அந்த வகையில் தமிழில் வெளிவரப் போகிறது ‘ஔடதம்’! அப்படீன்னா? ‘மருந்து’ என்று பொருள்!

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் இறக்குமதி செய்து, “இதற்கு நல்லது. அதற்கு நல்லது” என்று விற்பனை செய்யும் மருந்துக் கூடங்களை பற்றிய கதை. இத்தகைய மருந்துகளை உண்டால், உயிர் தண்டால் எடுக்க வேண்டியதுதான்! கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம், கல்லீரல் என்று காலி பண்ணிவிடுமாம் இந்த மருந்துகள். கருத்தை அப்படியே சொன்னால், கொல்றான்டா… என்று ஒரு வரியில் படத்தையே முடித்துக் கட்டிவிடும் அபாயம் இருப்பதால், காதல், ஆக்ஷன், த்ரில் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் இப்படத்தில்.

நேதாஜி பிரபு கதை எழுதி தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சமைரா நடித்திருக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் சி.வி.சந்திரனின் உதவி இயக்குனர் ரமணி, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒரிஜனல் மருந்து கம்பெனி ஒன்றில் படமாக்கியிருக்கிறார்கள். முதலில் நம்ம தலையிலேயை கை வைச்சுருவாங்களோ… என்று அச்சமுற்ற கம்பெனி, அப்புறம் கதையின் நேர்மைக்காக ஷுட்டிங் பர்மிஷன் கொடுத்ததாம்.

படம் வந்தால், நாட்டில் மருந்துகள் பற்றிய விழிப்புணர்ச்சி வரும். யாரும் மருந்தை மாத்திரைகளை வாங்கி அப்படியே முழுங்காமல், அதன் “காம்பினேஷன் என்ன? எக்ஸ்பயரி என்ன? கம்பெனி என்ன?” என்றெல்லாம் கேட்பார்கள் என்கிறார் படத்தின் ஹீரோ நேதாஜி பிரபு.

கேட்டுட்டாலும்…!

Leave A Reply

Your email address will not be published.