பகிரி விமர்சனம்

0

மனசுக்கு நெருக்கமா மது பாட்டிலும், கைக்கு நெருக்கமா கடை வாசலும் இருந்தால் தமிழ்நாடு உருப்படுமாடா? ‘நாடு நல்லாயிருக்கணும்’ என்று நினைக்கிற ஒவ்வொருவரும் ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ் அவது போல கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் கனவை திரையில் இறக்கி வைத்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்! வசனங்கள் ஒவ்வொன்றும், ஊறப்போட்ட ஒரிஜனல் சாராயம் போல செமக் காரம்! அரசியல்வாதிகளை இஷ்டத்திற்கு திட்டித் தீர்ப்பதும் ஒருவித போதைதானே? ஃபுல்லாக்கி அனுப்புகிறார் இசக்கி. (அம்புட்டு கட்சிக் காரங்களையும் இப்படி கசக்கி கதற விட்டுட்டீங்களே இசக்கி…)

அக்ரி படித்த பையன் விவசாயத்தை கவனிக்கணும் என்று நினைக்கிறார் அப்பா. ஆனால், ‘மதுக்கடை வாசல்லதான் போலீஸ் நின்று பாதுகாப்பு கொடுக்குது. கடையில மது விற்கிறவனுக்கு சல்யூட் அடிக்குது. அதனால் நாஸ்மாக்லதான் வேலைக்கு சேரணும்’ என்று தவியாய் தவிக்கிறான் மகன். யார் ஆசை நிறைவேறியது என்பதுதான் பகிரி. (மப்பு, மந்தாரம், வாந்தி, போதைன்னு ஏதாவது ஒரு தலைப்பை வச்சுருக்கலாம். ஏன்தான் பகிரின்னு வச்சாரோ? ஒட்டலயே டைரக்டரே)

ஈசியா மதுக்கடைன்னு சொல்லிட்டீங்க? அதை அமைக்கறது எவ்ளோ கஷ்டம்? அதில் வேலைக்கு சேர்வதற்கு எவ்ளோ பார்மாலிடிஸ்? எவ்ளோ கட்டிங்? என்றெல்லாம் புட்டு புட்டு வைக்கிறது படம். சாதாரண குவார்ட்டர் பாட்டிலில் ஆரம்பித்து, மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர் வரைக்கும் எல்லா ஏரியாவிலும் வூடு கட்டி அடித்துவிட்டார் டைரக்டர். அதுவும் மதுபான மந்திரியே, ரகசியமாக எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து “கலவரத்தை தூண்டாதீங்க” என்று கோரிக்கை வைக்க, “நான் எங்கய்யா தூண்டுறேன். சரக்கே என் பேக்டரியிலிருந்துதானே போவுது” என்று அவர் சொல்ல, பல்லிளிக்கிறது நடைமுறை நிஜம்! இருந்தாலும் மஞ்சள் துண்டையும் கரகர குரலையும் திரையில் காட்டுவதெல்லாம் ஓவர் சார்.

சரி… ஹீரோவின் பர்பாமென்சுக்கு வருவோம். ரணவீரன் என்ற புதுமுகம். ஏற்கனவே சின்னத்திரையில் நடித்த அனுபவம் இருப்பதால், அப்படியே மதுக்கடை பையனாகவே மாறியிருக்கிறார். டோர் டெலிவரி ஐடியா, சைட் டிஷ் விற்பனை என்று அவர் போட்டுத் தாக்கும் புதுப்புது ஐடியாக்கள், வரும் வருஷ வியாபாரத்திற்கு புது ரூட் போட்டுக் கொடுக்கும் போல! முதல் பார்வையிலேயே பிளாட் ஆகி, ஹீரோயினை மடக்க இவர் போடும் ரூட்டுகளும், பொசுக்கென லவ்வை ஓப்பன் செய்யும் காட்சிளும் செம லைவ்! ஹீரோவாச்சே… ஒரு பைட் வேண்டும் என்றெல்லாம் அச்சுறுத்தாமல் விட்டாரே, அதற்கே ஒரு நமஸ்காரம்!

சண்டைக்கோழியின் காலில் கத்தியை கட்டி விட்ட மாதிரி களேபரப்படுத்துகிறார் ஹீரோயின் ஷ்ரவியா. கண்ணும் வாயும் பொல பொலவென பேசிக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தன்னை பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளையை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சியும், “ஏன் நாஸ்மாக்குக்கு இடம் தர மாட்டே?” என்று வீட்டு ஓனர்களிடம் கட்டி ஏறுகிற காட்சியும், அவ்வளவு ரசனை பெண்ணே… (ஆனாலும் இவரும் இவர் அம்மாவும் கடை தேடுகிறேன் பேர்வழி என்று பாதி படத்தை அடைத்துக் கொண்டு நடக்கிறார்கள். உஸ்… மிடியல)

இவரது அம்மா கேரக்டர் ரொம்ப ஓவர். ஆன்ட்டியை லுக் விடும் அங்க்கிள்ஸ் நாட்டில் சகஜம்தான். அதற்காக வேலை மெனக்கெட்டு கிளம்பிவரும் ரவி மரியாவும், அதையே காரணமாக வைத்து அம்மாவையே மகள் கலாய்ப்பதுமாக, ஒரு பொறுப்பான டைரக்டர் செய்ற வேலையாங்க இது? அதே நேரத்தில் ரவி மரியாவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்காமலிருக்கவே முடியாது. மாவு பாக்கெட் வாங்க கிளம்பும் இவர், அதை பிச்சைக்காரனுக்குப் போட, அது அவர் வீட்டுக்கே வந்து சேர்கிற அந்த காட்சி, செம கற்பனை! இன்னொரு காமடியனாக பிரபல இயக்குனர் ஏ-வெங்கடேஷ். ஸாரிங்ணா…! எடுபடல.

டி.பி.கஜேந்திரன்தான் மதுபானத்துறை அமைச்சர். ஒரே நேரத்தில் அவர் மூன்று பெண்டாட்டிகளை மூன்று விதமாக சமாளிக்கிற வித்தைக்கு தியேட்டரே ‘கொல்’ என குலுங்குகிறது. அதிலும் மதத்திற்கு ஒரு மனைவியாக மெயின்டெயின் பண்ணும் அவரை வைத்து, பொலிடிஷியன்களை புரட்டி புரட்டி எடுத்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன். எல்லாம் சரி… ‘விவசாயம் பண்ணு விவசாயம் பண்ணு’ என்றால், அதற்கான தண்ணீர் வரத்து இல்லையே சாமீய்..?

புதுசாக ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டதற்காக பாராட்டுகளையும், அதை சீரியஸ்சாக அணுகாமல் மேலோட்டமாக சொன்னதற்காக குட்டுகளையும் வைப்பதை தவிர வேறு வழியில்லை இயக்குனரே… ஆனாலும் படத்தில் ஆங்காங்கே காட்டப்படும் மதுக்கடை தொடர்பான ஸ்டாக் ஷாட்டுகள், புத்தியை கிள்ளிவிட்டுப் போகிறது.

எதையாவது தட்டிக் கொண்டேயிருப்பதுதான் பின்னணி இசை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது இசையமைப்பாளர். கொடுமையிலும் கொடுமை!

கொஞ்சம் அசந்திருந்தால் வெறும் நியூஸ் ரீல் ஆகியிருக்கும். அந்த அபாயத்தை தன் வசனத் திறமையால் ‘ஸ்டடியாக’ கடந்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன். அடுத்த வெடிகுண்டோட எப்ப வர்றீங்கண்ணே…?

-ஆர்.எஸ்.அந்தணன்

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.