பாபநாசம் – விமர்சனம்

‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்… நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். முழு படத்தையும் தோளில் சுமக்கிற கமல், இதுபோன்ற தொந்தரவாளர்களையும் தோளில் சுமக்க துணிந்துதான் பாபநாசத்தில் முங்கியெழுத்திருக்கிறார்.

சந்தர்பவசத்தில் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை விழுகிறது. செத்தவன் ஐ.ஜியின் மகன். கொன்றது சுயம்புவின் மகள். பரபரவென வேலை பார்க்கும் சுயம்பு, பிணத்தை மறைத்து தடயங்களை அழித்து, சம்பவ நாளில் தானும் தனது குடும்பமும் ஊரிலேயே இல்லை என்பது போல சாட்சியங்களை தயார் செய்கிறார். புத்திசாலித்தனமான அவரது மூவ், போலீஸ் மூளையையே தூக்கி சாப்பிட்டு ஏவ் என்று ஏப்பம் விடுகிறது. கையறு நிலைக்கு தள்ளப்படுகிற போலீஸ் ஐஜி, காக்கி சட்டையை துறந்துவிட்டு என் பையன் வருவானா, மாட்டானா? என்று கதறியழ…. கமல் என்கிற சுயம்பு சொல்லும் பதிலோடு பாபநாசம் முடிகிறது.

நடிப்பை பொறுத்தவரை கமல் பெருந்தீனிக்காரர். அப்படி பார்த்தால் அவருக்கு இந்த படம் கூட அரை தீனிதான்! என்ன ஒன்று? கமல் தாத்தா வேஷம் போட்டால் கூட, யாராவது ஒரு பாட்டிக்கு கஷ்டம்தான் போல. ரொமான்ஸ் நேரங்களில் கமலும் கவுதமியும் சேர்ந்தே அந்த கஷ்டத்தை கொடுக்கிறார்கள். மற்ற எல்லா இடங்களிலும் பிரமிப்பு… பிரமிப்பு… முக்கியமாக போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மகள்களும் மனைவியும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அவர் ட்யூஷன் எடுக்கிற காட்சி! அவ்வளவு சீரியஸ் நிலைமையிலும், தியேட்டருக்குள் லேசாக சிரிப்பலையை ஏற்படுத்துகிற அளவுக்கு ‘முரண் சுவை’.

கமலின் ஒவ்வொரு படத்திலும், அவரது அடையாளத்தை சொல்வது போல ஒரு காட்சியாவது இருக்கும். ‘இந்த இடத்துல நீ கைதட்டியே தீரணும்டா’ என்று திட்டமிட்டே ஆளை கவிழ்ப்பார் அவர். இந்த படத்திலும் அப்படி ஒன்றல்ல, பல காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக, அவர் ஐஜியிடம் பேசும் கடைசி நேரக் காட்சி. கன்னம், உதடு, அவரது ஒட்டு மீசை எல்லாமே நடித்துத் தள்ளுகிறது. அது மிக நீண்ட வசனம். ஆனால் நிறுத்தி நிதானமாக அவர் பேசி முடிக்கிற வரைக்கும் கண்ணில் ‘ஜலம்’ வைத்து காத்திருக்கிறது ரசிகர் கூட்டம்.

வெகு காலம் கழித்து நடிக்க வந்திருக்கிறார் கவுதமி. தொடர்ந்து நடிங்க மேடம் என்று சொல்ல முடியவில்லை. ஸாரி…

ஒரு கொலையை எதிர்பாராமல் செய்துவிட்டு நிமிஷத்துக்கு நிமிஷம் பதறிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணாக நிவேதா தாமஸ். அசர வைத்திருக்கிறார். எங்கே சொதப்புவாரோ என்று தியேட்டரே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, தங்கு தடையில்லாமல் போலீஸ் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அவர் கிளம்புகிற போது அப்பாடா…வாகிறது மனசு. அந்த குடும்பம் முழுசுக்கும் போலீஸ் கொடுக்கும் அந்த டார்ச்சர், படு பயங்கரம். கடைசியில் அந்த குட்டிப்பாப்பாவின் மூலம் ஏற்படும் திருப்பமும், முடிவும் ஆஹா… ஆஹா…!

எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன்மணி (கொஞ்ச நாளைக்கு பாபநாசம் பக்கம் வந்துராதீங்க, அடி நிச்சயம்) அருள்தாஸ், பசங்க ஸ்ரீராம் என்று நடித்தவர்கள் அத்தனை பேரும் புள்ளி வைத்து கோலம் போட்டிருக்கிறார்கள்.

பல இடங்களில் கமலை பிரமித்த மாதிரியே, தனது நடிப்பாலும் பிரமிக்க வைத்திருக்கிறார் அந்த பெண் ஐஜி. பெயர் ஆஷா ஷரத். மலையாளத்திலிருந்து தமிழுக்கு முதன் முறையாகவாம். அப்படியே நம்ம ஊருக்கு ஷிப்ட் ஆயிருங்க மேம்! ஒரு புறம் மகன், இன்னொரு புறம் கடமை. தப்பு மகன் மீது என்று தெரிந்தும் அவர் காட்டும் போலீஸ் புத்தி என்று அசரடித்திருக்கிறார். அவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவனும் மனசில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

ஒவ்வொரு டீக்கடையும் மினி பாராளுமன்றம் போல. கமல் விவாதிக்கும் பல விஷயங்கள் போகிற போக்கில் இருந்தாலும், அதற்குள்ளும் அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்கிறது ஜெயமோகனின் வசனங்கள். மண்புழு அழிவது பற்றியும், விவசாயம் சாவது பற்றியும் கமல் பேசுகிற போது, ஜெயமோகனின் சமூகக் கவலை பிரவாகமெடுத்து வழிகிறது. ஆங்காங்கே குறும்புகளுக்கும் குறைவில்லை. ‘விளைஞ்சே பொறக்குதுங்க…’ ஒரு உ.தா! ‘பாவத்தை தொலைக்கறதுக்காக எங்கெங்கோயிருந்தோ இங்க வந்து குளிக்குதானுவோ…’ என்று பாபநாசம் ஊர் குறித்த பெருமையையும் பளிச்சென்று உணர்த்துகிறது அவரது பேனா. இந்த படத்தில் ஜெமோவின் பங்கு நிறைவு.

ஒரு பேப்பரை கசக்கி எறிந்தால் கூட, அதற்குள்ளும் ஒரு லாஜிக்கை வைத்திருக்கிறது ஜித்து ஜோசப்பின் திரைக்கதை. தன் வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களுடனும் ஏதாவது ஒரு படத்தை ஓட்டிப்பார்த்து, அதன்படி முடிவெடுக்கும் கமலின் சினிமா பைத்திய ரசனை அதில் ஒன்று. பிணம் கிடக்கிற அறையில் அப்படியே ஒரு படத்தை மனசுக்குள் ஓட்டிப்பார்க்கும் கமல், விறுவிறுவென வேலைகளை தொடங்கி முடிக்கும் காட்சி வெகு நீளமானது. டயலாக்குகள் கூட இல்லை. ஆனால் பின்னணி இசையாலும், காட்சிகளின் சுவாரஸ்யத்தாலும் நிமிஷத்தில் கடக்க வைக்கிறார்கள் டைரக்டர் ஜித்துவும், இசையமைப்பாளர் ஜிப்ரானும். பாடல்களில்தான் சுரத்து இல்லை பிரதர்.

எடிட்டிங் என்பது நீளத்தை குறைப்பது மட்டுமல்ல, அப்படியே நீளமாக இருந்தாலும் அதை உணராமல் செய்வது என்கிற உண்மையை நிரூபித்திருக்கிறார் எடிட்டர் அயூப்கான். சுஜீத் வாசுதேவின் ஒளிப்பதிவும் மனசுக்கு நெருக்கமாக இருக்கிறது.

கமலின் ஒட்டு மீசை ஒன்றுதான் உறுத்தலே தவிர, இந்த பாபநாசம்…. நல்ல சினிமா பிரியர்களுக்கு பன்னீர் வாசம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

4 Comments
  1. TAMILARASAN says

    இப்படிதான் உத்தமவில்லன் படத்துக்கும் சொன்னது. முடிவு படம் படு தோல்வி. உத்தமவில்லன் படம் வசூல் நிலவரம் என்ன ? எத்தனை திரைஅரங்கில் படம் ஓடுகிறது ? என்ற விவரம் தெரிய்வவில்லை. சரி போகட்டும். பாபநாசம் படம் பார்த்தவரையில் திரிஷ்யம் போல் படம் நன்றாக இல்லை என்பதே. தமிழகத்தில் படம் வெளியான நேற்று எந்த திரியாரன்கிலும் படம் HOUSEFULL ஆக வில்லை. படத்தின் வெற்றியை புரிந்து கொள்ளுங்கள்.
    வசூல் ராஜா என்றுமே எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் .
    வேறு எவனும் அதை நினைத்து பார்க்க கூட முடியாது.

    1. பிசாசுகுட்டி says

      தம்ப்றீ அப்படியே ஓடிடு..
      லிங்காவுல வாங்குன அடி இன்னும் பத்தல.. இந்த கதையை மொதல்ல ரஜினிய வச்சி பண்றதா தான் இருந்ததாம்.. ஆனா அவரு அடி வாங்க மாட்டாராமே.. வாங்கினா உங்களுக்கு பொருக்காதாமே.. அப்புறம் எப்படி நடிப்பு வரும் இல்ல நடிகன்னு ஒத்துக்குறீங்க.. உங்க லாஜிக்கே புரியலையே..

      1. குட்டி பிசாசு says

        பிசாசு குட்டி அண்ணே கொஞ்சம் இப்புடு சூடு கண்ணா

        Rajinikanth’s “Lingaa” has got a never-before opening at box office. Even though the official figures have not been released about its business, there are speculated trade reports on the Tamil movie’s performance.

        Based on those box office numbers, we bring you the top five collection records set by “Lingaa” at the box office.

        1) “Lingaa” got the biggest opening (first day) of the year in Tamil Nadu as the film made ₹12.8 crore and broke the record of “Kaththi”, which earned ₹12.5 crore.

        2) “Lingaa” has approximately grossed ₹32 crore on the first day worldwide in two versions and became the biggest Tamil opener of the year. It beat Vijay’s “Kaththi”, which had made ₹ 23.45 crore on the first day.

        3) “Lingaa” registered the highest collection for the year in Chennai in the first weekend by making ₹2.70 crore. It beat Suriya’s “Anjaan”, which had made ₹2.36 crore in the capital city of Tamil Nadu.

        4) “Lingaa” registered the biggest all time first weekend record as it grossed ₹86 crore (Unconfirmed). Once again, it has beaten “Kaththi”, which grossed ₹71 crore worldwide.

        5) “Lingaa” has got the biggest opening weekend of the year for a Tamil movie in international circuits like the US (₹8.41 crore) and Canada (₹4.24 lakh). It broke the records of “Kaththi” that had earned ₹3.42 crore and ₹3.55 lakh respectively.

  2. Girija Sundar says

    பாபநாசம் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படம் வெகு சுமார் தான். திரிஷ்யம் படம் சூப்பராக இருந்தது. கமல் நடிப்பதை நிறுத்தி கொள்வது சாலச்சிறந்தது.

Reply To TAMILARASAN
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
பாலகாட்டு மாதவன்- விமர்சனம்

மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ்,...

Close