விஜய் அஜீத் படங்கள்! மிதமான ஆவேசத்துடன் பார்த்திபன்

தாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று… இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும். அப்படியொரு நிலைமை வந்தால்தான் சினிமா பிழைக்கும். ஆனால் அதெல்லாம் நடப்பதற்குள், வேறு ஏதாவது மாற்றம் வந்து மண் பானையை கவிழ்த்துவிட்டால் என்னாவது?

இந்த நிலையில்தான் சின்னப்படங்களும் ஓடணும் என்கிற முக்கியமான விஷயத்திற்கு ஒரு தீர்வு கொடுத்திருக்கிறார் புதுமை இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். (அட நம்ம பழைய பார்த்திபன்தான்ப்பா)

“அஜீத் விஜய் மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்கள் பொங்கல் தீபாவளி டைம்ல தியேட்டர்களுக்கு வருது. அதை முதல்ல தடுக்கணும். அவங்க படம் எப்ப வந்தாலும் அதுதான் ரசிகர்களுக்கு பண்டிகை தினம். நானே அஜீத் படம் செவ்வாய் கிழமை வந்தால் கூட போய் பார்ப்பேன். ஆனால் அவங்க படங்கள் எதுக்கு குறிப்பிட்ட பண்டிகை நாளில்தான் வரணும்னு அடம் பிடிக்கணும்? இதுபோன்ற திருவிழா சமயங்களில் சின்னப்படங்களை வெளியிட்டால், படம் பார்த்தே ஆகணும் என்று நினைப்பவர்கள் இந்த சின்னப்படங்களையும் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் அல்லவா? அதனால் தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கும். கலெக்ஷனும் வரும். ஆனால் யாராவது கேட்டால்தானே?” என்றார் பார்த்திபன்.

சினிமாவை சீரமைப்பேன் என்று முழக்கமிடுகிறவர்கள், பார்த்திபனின் இந்த யோசனையை நிறைவேற்ற முன் வரலாம். இல்லை என்றால் போஸ்டர் காசு கூட கிடைக்காமல் வாழ்நாள் முழுக்க திண்டாடலாம்!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kanla Kaasa Kaattappa Press Meet Stills Gallery

Close