பட்டதாரி விமர்சனம்

0

ஊதறது சங்கு, ஓதுறது மந்திரம்னு ஒரேயடியா அட்வைஸ் பண்ற படங்களை, போஸ்டரில் கூட பார்க்க தயாராக இல்லை ஜனங்கள். வெட்டி அரட்டையா இருந்தாலும் பரவால்ல… கருத்து சொல்லாதே கந்தசாமின்னு ஒவ்வொரு டைரக்டரையும் பில்டரில் போட்டு வடிகட்டினால், இப்படத்தின் இயக்குனர் ஆர்.சங்கரபாண்டி மாதிரி நிமிஷத்துக்கு பத்து பேர் கூட கிடைப்பார்கள். பட்டதாரி அப்படியொரு ‘வெட்டி அரட்டை! ’

வேலை கிடைக்கல. நாங்க என்ன பண்ணுறதாம் என்று நினைத்துக் கொண்டு ஊர் சுற்றும் ஐந்து நண்பர்கள். இதில் நால்வருக்கு ‘காதலிக்கணும். எவளையாவது காதலிக்கணும்’ என்பதே லட்சியமாக இருக்கிறது. ஹீரோ அபி சரவணனுக்கு மட்டும், லேடீ என்றால் ‘போடி போடீய்…’ என்கிற அளவுக்கு வெறுப்பு. அது தெரியாத துளசி செடி ஒன்று அவரையே சுற்றி சுற்றி வர, அதன் மீது ஆசிட் ஊற்றாத குறையாக ஆத்திரப்படுகிறது சரவணன் மனசு. ஏன்? இன்னாத்துக்கு? என்பதுதான் கதையம்சம் கூடிய செகன்ட் ஹாஃப்! முதல் பாதி முழுக்க முட்டை ஓடு. செகன்ட் ஹாஃப் மட்டும் வெங்காயம் தூக்கலான ஆம்லெட்! நல்லவேளை இரண்டாவது பாதியும் முதல் பாதி போலிருந்தால், சங்கரபாண்டி சத்தியமாக சங்கர‘போண்டி’யாகியிருப்பார்!

ஹீரோ அபி சரவணன் பார்க்க ஸ்மார்ட். நடிப்பும் பாஸ் மார்க்கும் மேலே! காதலி இறந்த பின் அவள் பிணத்தில் விழுந்து புரளும் அந்த காட்சியில் நடிப்புக்காகவும் கைதட்டல் பெறுகிறார். லாங் ரன்னிங் ஹீரோவாக வரும் அறிகுறிகள் தெரிகிறது. ஆனால்… (கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொள்க)

இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். இதில் ராசிகா அழகில் சற்றே மங்குனிப் பழமாக இருந்தாலும், நடிப்பில் பின்னியிருக்கிறார். இவருக்கும் அபி சரவணனுக்கும் நிஜத்தில் காதல் வந்திருக்குமோ என்கிற அளவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அந்த ஏக்கப்பார்வை!

மற்றொரு ஹீரோயினான அதிதி, ஆரம்பகால சினேகா போல அவ்வளவு அழகு. புத்திசாலி இயக்குனர்களின் கண்ணில் சிக்கினால், இன்னும் பத்து வருஷத்துக்கு பசுமை புரட்சிதான்! தமிழ்சினிமாவின் விதி எப்படி எழுதியிருக்கோ?

ஐந்து இளைஞர்களும் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார்கள். அதிலும் அம்பானி சங்கரின் அந்த யூனிபார்ம் காதலை சற்றே ரசிக்க முடிகிறது. மற்றவர்கள் வருகிறார்கள். நிற்கிறார்கள். பேசுகிறார்கள். சமயங்களில் அறுக்கிறார்கள். நானும் கச்சேரிக்கு போனேன் கதைதான்.

அந்த டீக்கடை குண்டர், ரசிக்க வைக்கிறார். பருத்தி வீரன் கருப்புவை காப்பியடித்தாலும், அந்த கான்சப்ட் மட்டும் இரண்டாவது முறையும் ரசிக்க வைக்கிறது.

பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதம். இசை எஸ்.எஸ்.குமரன்! காதி கிராஃப்ட் கதர் வேட்டியில், காஞ்சிபுரம் பட்டுக் கோர்த்த மாதிரி இருக்கிறது இப்படியொரு படத்தில் எஸ்.எஸ்.குமரனின் இசை! அந்த டபுள் சிம் பாடல், இந்த வருடத்தின் ஆஹா…க்களில் ஒன்று!

சிம்பிளான கதை. அதை மேலும் சிம்பிளாக பிரசன்ட் பண்ணியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சங்கரபாண்டி. இவர் கையில் கிடைத்த பட்டதாரி சர்டிபிகேட், வெறும் பேப்பர் ஆகிவிட்டதே என்பதுதான் அதிர்ச்சி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.