பேய்க்கு வாக்கப்பட்ட புது இயக்குனர்!

0

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிவிட்டார் கதாநாயகி டோனா சங்கர். நடிக்க வந்த இடத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் டைரக்டர் தீபக் நாராயணன். இந்த முந்தானை முடிச்சுக்கு காரணமான படம் எது தெரியுமா? ‘பேய் எல்லாம் பாவம்’

கேரளாவிலிருந்து தமிழ்ப்படம் எடுக்க வந்த குழுவை நேற்று பாராட்டுவது போல பாராட்டி, குட்டுவது போல குட்டியும் வைத்தார்கள். நீங்க எங்களை பட்டி, பாண்டின்னு ஏளனமா கூப்பிட்டாலும், நாங்க வந்தாரை வாழ வைப்போம் என்று பேசி பேசியே சம்பந்தப்பட்டவர்களை தர்ம சங்கடப்படுத்தினார்கள். யார் யாரெல்லாம்? நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்திருந்த சினேகன், ஜாகுவார் தங்கம், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட எல்லாரும். ஆனால் இயக்குனர் ராசி அழகப்பன் மட்டும் கவனமாக தவிர்த்தார் அந்த படால் திடீல் டயலாக்கை. (என்னதான் இருந்தாலும் கமல்ஹாசனின் காம்பவுன்ட் ஆச்சே!)

சரி… காதல் ஜோடி விஷயத்திற்கு வருவோம். படத்தில் பேயாக நடிக்கிறார் டோனா சங்கர். அவருக்கு காதலனாக நடிக்கிறார் அரசு. நடிப்பு சொல்லிக் கொடுக்கும் போதே, டோனாவின் மனதை திருடிவிட்டார் இயக்குனர் தீபக் நாராயணன். இருவருமே மலையாளிகள் என்பதால் சுலபமாக நிறைவேறிவிட்டது காதல். படம் வெளிவருவதற்கு முன்பே கணவன் மனைவியாகிவிட்ட இந்த ஜோடி, தங்களது முதல் திருமண பரிசு இப்படத்தின் வெற்றியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறது.

படத்தை பற்றி நாலு வார்த்தை நல்ல வார்த்தையாக பேச வந்த பலரும், இந்த ஜோடிக்கு ஆசிர்வாதமும் வழங்கியது கண் கொள்ளாக் காட்சி.

பேய் எல்லாம் பாவம்னு தலைப்பு வச்சிருக்காங்க. பேய் எல்லாம் பாவம் இல்ல. லாபம் என்று வாழ்த்தினார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

இந்த படத்தின் டைரக்டருக்கு மட்டும் டபுள் லாபம்!

Leave A Reply

Your email address will not be published.