அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்களுக்கு… இதையும் கொஞ்சம் பாருங்க!

0

கருத்தும் வேணாம்.. ஒரு குருத்தும் வேணாம். ஜாலியா புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா… என்று ரசிகர்கள் அலுத்துக் கொள்கிற அளவுக்கு மொக்கை போடுகிற இயக்குனர்கள், மெல்ல ஒழிந்துவிட்டார்கள். ஏனென்றால் மொக்கை படங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டுதான் தியேட்டரை விட்டு கிளம்புகிறார்கள் ரசிகர்கள். அப்படி வாரத்திற்கு நாலு படமாவது வந்து மண்ணை கவ்வுகிற நேரத்தில், சம்திங் டிபரண்ட் என்று வருகிற படங்களுக்கு மட்டும் நலங்கு வைத்து நம்பிக்கை தர தயங்குவதேயில்லை ரசிகர்கள்.

லேட்டஸ்ட் பிரமிப்பு ‘நான் செய்த குறும்பு’ என்ற படத்தின் துவக்கவிழா. வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு போஸ்டரே சொல்லிவிட்டது, இது வேற லெவல் படம் என்று. படத்தின் ஹீரேவான கயல் சந்திரன் வயிற்றை தள்ளிக் கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக நிற்கிறார். அவரது வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை கவனிக்கிறார் ஹீரோயின் அஞ்சு குரியன்.

ஆஹா… செம டீம் ஒண்ணு வந்திருக்கு போலவே என்று சந்தோஷத்தோடு உள்ளே போனால், துவக்கவிழாவே தூள்! இன்னும் சிறிது நேரத்தில் வளைகாப்பு நடைபெறும். கேமிரா தோழர்கள் கடைசி வரிசையில் காத்திருக்கவும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கயல் சந்திரனுக்குதான் வளைகாப்பு என்று பீதியோடு காத்திருந்தால், தப்பித்தோம். நிஜமாகவே ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினார்கள். வேத மந்திரங்கள் ஓத… படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுப் பெண்கள், தன் வீட்டு பெண்களுக்கு நடத்தி வைப்பது போல சந்தோஷமாகவும் பயபக்தியோடும் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மகா விஷ்ணு என்ற புதுமுக இயக்குனர்தான் இப்படத்தை உருவாக்கப் போகிறார்.

ஆரம்பமே அமர்க்களம். பத்தாவது மாசத்துல அழகா ஒரு படத்தை பெத்துக் கொடுங்க விஷ்ணு!

 

 

Leave A Reply

Your email address will not be published.