பளபளன்னு ஒரு பவர் கட் ஸ்டார்! படத்துல மூணு ஜோடி தெரியுமா?

0

“பஸ்ல கூட்டமா இருக்கு, அடுத்த பஸ்சை பார்க்கலாம் என்பது அறிவு. அதனால என்ன? இடிக்கறதுக்கு வசதியா இருக்கும்ல? என்று நினைப்பது பகுத்தறிவு….!” -விட்டால் இப்படியும் பேசிவிடுவாரோ என்கிற அளவுக்கு திகில் கிளப்பினார் செந்தில் செல்.அம்!

திரு.வி.க பூங்கா என்ற படத்தை இயக்கி தயாரித்து அவரே நடித்தும் இருக்கிறார். பார்க்க பவர் ஸ்டார் போலிருக்கிறார். வேண்டுமென்றால் பவர் கட் ஸ்டார் என்று அழைத்தால் கூட கோபித்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், சொல்லும் செயலும் பாசிட்டிவ் பாசிட்டிவ் என்பதாகவே இருக்கிறார் மனுஷன். இப்படத்தின் பைனல் லுக் வெளியீட்டு விழா(?)வில்தான் செந்தில் செல்.அம்-ன் தரிசனம் கிடைத்தது நமக்கு. படத்தில் இவருக்கு மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட ஜோடிகள் இருக்கலாம் என்பது நம் யூகம். அவர்கள் அத்தனை பேரும் இவரை வளைத்து வளைத்து காதல் பிடி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘அழகா பொறந்துட்டேன். அதான் இப்படி’ என்றொரு தன்னம்பிக்கை மிகு டயலாக் பேசி அரங்கத்தை அதிர விட்ட செந்தில் செல்.அம் கடலூரை சொந்த ஊராக கொண்டவர்.

“நான் ஹீரோவா நடிக்கப் போறேன். அதுவும் சொந்தப்படம் எடுக்கப் போறேன் என்றதும் பலரும் என்னை டிஸ்கரேஜ் பண்ணினாங்க. அமிஞ்சிக்கரையில் இரண்டு தியேட்டர் இருந்திச்சு. இப்ப அது எங்க போச்சுன்னே தெரியல. அது தெரியுமா உனக்கு என்றார்கள். அதே அமிஞ்சிக்கரையில் ஸ்கை வாக் கட்டி, அதுல ஏழு தியேட்டர் வந்திருக்கே…. அது தெரியுமா உனக்குன்னு நான் திருப்பிக் கேட்டேன்”.

“இந்தப்படத்தை நம்பிக்கையா ரிலீஸ் பண்ணுவேன். ஜெயிப்பேன். இன்னைக்கு ஜெயிச்ச எல்லா ஹீரோக்களுமே நேரடியா அஞ்சாவது படத்தில நடிச்சுடல. எல்லாருக்கும் முதல் படம்னு ஒண்ணு இருக்கு. அதை தாண்டிதான் வர்றாங்க. நான் வருவேன்” என்றார் முழுக்க முழுக்க தன்னம்பிக்கை வெளிப்பட.

செந்தில் செல்.அம் மற்றும் ரசிகர்கள் யாரும் ‘என் தங்கை கல்யாணி’ காலத்திலோ, ‘மைதிலி என்னை காதலி’ காலத்திலோ இல்லை.

அது புரிந்தால் யாவும் புரிந்த மாதிரிதான்!

Leave A Reply

Your email address will not be published.