சத்யராஜ் தலையில் காலை வைக்கும்போது… பாகுபலி ஹீரோ பிரபாஸ் உருக்கம்!

இந்த வெற்றி உலகமே எதிர்பார்த்ததுதான். நினைத்த மாதிரியே வெளியிட்ட அத்தனை தியேட்டர்களிலும் கொள்ளாத கூட்டம். ஒரு வாரம் தாண்டி மறு வாரமும் டிக்கெட் வாங்குவதற்கு அடிதடி என்று பாகுபலியின் வெற்றியால் வேறொரு பரிணாமத்தை எட்டியிருக்கிறது சினிமாவுலகம். படத்தின் நிஜ ஹீரோ டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலிதான். குடும்பத்தோடு வெளிநாடு கிளம்பும் கோதாவில் அவர் இருக்க, ஆந்திராவிலிருந்து வந்தாலும் எங்களை வாழ வைத்த தமிழ் மக்களே… என்று நெஞ்சம் நனைவதற்காக சென்னை வந்தது பாகுபலி டீம்.

ராணா வருவார்… அனுஷ்கா வருவார்… தமன்னா வருவார்… என்றெல்லாம் ஆர்வத்தை கிளப்பினாலும், வந்தது என்னவோ படத்தின் ஹீரோ பிரபாஸ்-ம், முக்கிய ரோலில் நடித்த ரம்யா கிருஷ்ணனும்தான். சத்யராஜ் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் ஆப்சென்ட். இவர்கள் தவிர, இந்த படத்திற்கு சம்பந்தமேயில்லாத இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், டைரக்டர்கள் லிங்குசாமி, SMS ராஜேஷ் ஆகியோரும் வந்திருந்தார்கள்.

சம்பிரதாய பேச்சுகள் முடிந்து கேள்வி பதில் நேரம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர்களையே நடிக்க வைத்திருக்கலாம். ஏன் தமிழ் நடிகர்களை நடிக்க வைத்தீர்கள் என்று நடிகர் சுரேஷ் பேசியது சம்பந்தமாக கேள்வி. அந்த நேரத்தில்தான் பாகுபலி பிரபாஸின் பதில் எல்லாரையும் உருக வைத்தது. இந்த கதையை சத்யராஜ் சார்ட்ட சொல்றதுக்காக ராஜமவுலி சார் சென்னைக்கு கிளம்பினார். என்னிடம் போன் பண்ணி சத்யராஜ் சாரை பார்த்து கதை சொல்ல போறேன்னு சொன்னார். அந்த நேரத்திலிருந்தே எனக்கு படபடப்பாயிருச்சு. சத்யராஜ் என்ன சொல்லப் போறாரோ என்பதால்தான். அதே மாதிரி ஷுட்டிங்ல நான் அவர் தலையில் கால் வைக்கிற மாதிரி ஒரு சீன். என்னால அந்த காட்சியில் நடிக்கவே முடியல. இன்னைக்கு இதுதான் காட்சி என்று டைரக்டர் சொன்ன பிறகு, நாள் முழுக்க நான் நெர்வசாகவே இருந்தேன். அவர்தான் எனக்கு தைரியம் கொடுத்து என் காலை எடுத்து தன் தலையில் வைத்து நடித்தார். எவ்வளவு பெரிய நடிகர் அவர் என்று வியந்தார் பிரபாஸ்.

2016 ல் பாகுபலி செகன்ட் பார்ட் வந்துரும். இன்னும் 60 சதவீதம் ஷுட் பண்ணணும் என்ற பிரபாஸ், இந்த படம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று முன்பு கூறியிருந்தாராம். இப்போது அதை நினைவுபடுத்திய பிரஸ், கல்யாணம் எப்போ என்றது ஸ்டிராங்காக.

என்ன சொன்னார் பிரபாஸ்…? சிரித்து மழுப்பியபடியே எஸ்கேப்! எவ்வளவுதான் ராஜ்யம் வியக்குற மன்னனாக இருந்தாலும், கூச்சம் வரும்ல…?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்திரன் 2 ஷங்கருக்கு வந்த திடீர் சிக்கல்!

பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க...

Close