பிரபுதேவா புதுப்படம்! அந்த கம்பீர மீசை எங்கேங்க?

0

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம்மனை நினைத்துப் பாருங்களேன்… அந்த பாஞ்சாலங்குறிச்சியே தூக்கு மாட்டிக் கொள்ளும். அப்படியொரு வரலாற்றுப் பிழை, பிரபுதேவா கெட்டப் விஷயத்திலும் வந்துவிட்டது.

‘பொன்மாணிக்கவேல்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. நேர்மையில் சகாயம் வகையறாவை சேர்ந்தவர் இந்த பொன்மாணிக்கவேல். அந்த அரசனாகவே இருந்தாலும், ‘தப்புன்னா டுப்புன்னு சுட்டுபுடணும்’ என்கிறளவுக்கு ஆத்திரக்காரர். நேர்மை, கடமை, கம்பீரம் என்ற மும் மந்திரத்தின் முதல் அம்புதான் இவர். இவரது நேர்மையை கண்டு அஞ்சிய பல போலீஸ் அதிகாரிகள், இவர் பொறுபேற்கிற துறை எதுவோ, அங்கிருந்து டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடிய கதைகள் பலவுண்டு.

நேர்மைக்காக பலமுறை பந்தாடப்பட்டாலும், ‘நான் பிறந்ததே உங்களுக்கு டென்ஷன் தர்றதுக்குதாண்டா’ என்று அதையும் சந்தோஷமாக எதிர்கொள்ளும் ஆண் மகன்! சமீபத்தில் சிலை திருட்டு பிரிவுக்கு வந்த பொன்மாணிக்கவேல், பல வருஷங்களாக ‘அந்தர் தியானம்’ ஆன பல அற்புத சிலைகளை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். அதுமட்டுமா… இன்னும் பல கோடி மதிப்புள்ள திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு ‘வெல்டன் சார், வெல்டன்’ என்று நிஜமான பக்தர்களை நெகிழ வைத்து வருகிறார்.

இந்த முறையும் அரசாங்கத்தால் பந்தாடப்பட்ட மாணிக்கத்திற்கு, கோர்ட்டே பண் நீட்டிப்பு செய்திருப்பது ஆறுதல்.

இப்படிப்பட்ட மாவீரனின் பெயரை தங்கள் படத்திற்கு தலைப்பாக வைத்தவர்கள், அதில் பிரபுதேவாவை நடிக்க செய்ததே பெரும் அநீதி. ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் சிபிராஜ் நடிப்பதற்கு ஒப்பான இந்த செயல், எப்படியோ மன்னிக்கப்பட்டாலும் இன்னும் இன்னும் என்று தப்பு செய்கிறார்களே. அதுதான் ஏனென்றே புரியவில்லை.

இப்படத்தின் முதல் லுக்கில் பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நிற்கிறார். சரி… நல்லது. பொன் மாணிக்கவேலின் அந்த கம்பீர மீசை எங்கே?

இந்த கேள்வியை கேட்காமல் அந்த விளம்பரத்தை கடப்பவர்கள் யாரும் இல்லை. ஷுட்டிங் போறதுக்கு முன்னாடியே கரெக்ட் பண்ணிக் கொண்டால் நல்லது. இல்லையென்றால் ரசிகர்கள் உங்களை கரெக்ட் பண்ணிவிடுவார்கள். ஜாக்கிரதை!

Leave A Reply

Your email address will not be published.