காணொளிகள் பொய் சொல்வதில்லை பிரகாஷ்ராஜ்!

1

சோறு போடுற கைய இழுத்து வச்சு கூறு போடுற வித்தை நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அசால்ட்! அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ்சினிமாவில் இவரை பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டால், இன்நேரம் என்னத்த கன்னையாவின் இன்னொரு வெர்ஷனாகதான் இருந்திருப்பார். அப்படி தமிழ்நாட்டில் விதையாக விழுந்து அதே தமிழ்நாட்டில் விளைச்சலும் பெற்று பின்பு ஊரெல்லாம் உயர்ந்த பிரகாஷ்ராஜ் தமிழக மாணவர்களுக்கு எதிராக ஒரு கருத்தை கூறியதால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரகாஷ். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “தமிழக மாணவர்கள் அதிகம் சேர்வதால் டெல்லி மாணவர்களுக்கு பல்கலையில் சீட் கிடைப்பதில்லை. உள்ளூர் மாணவர்களுக்கான இடத்தை தமிழர்கள் தட்டிப்பறிக்கிறார்கள்” என்று கூற, அதை ஆமோதித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் பெருத்த சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

இதையடுத்து பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,

“தமிழ் மாணவர்கள் குறித்து நான் பேசிய கருத்து திரிக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்” என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறேன் என்ற குற்றச்சாட்டு பச்சைப் பொய். என்னுடைய கருத்து அரசியல் ஆக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.

காணொளிகள் பொய் சொல்வதில்லை என்பது பொய் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு தெரியாமலா இருக்கும்?

பின்குறிப்பு- அவரது பேட்டியில் “நான் தமிழன் இல்லை. கன்னடன்” என்று சொன்னதற்காகவும் கோபித்துக் கொள்கிறது இங்கிருக்கும் உணர்வாளர் கூட்டம். அவர் தன்னை தமிழன் என்று சொல்லியிருந்தால்தான் தவறு. “ஆமாம்… நான் கன்னடன்” என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? பாதி பாதியாய் பொய் சொல்லி ஜீரணிக்க அவரென்ன ரஜினிகாந்தா?

1 Comment
  1. இளையராஜா says

    மனித புனிதர் ரஜினி அவர்களை பற்றி எழுதாமல் உன்னால் இருக்க முடியாதா ???
    தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தான் .
    வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள் .

Leave A Reply

Your email address will not be published.