எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகடமி விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா!

எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகடமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் இன்று மாலை 4 மணிக்கு (ஆகஸ்டு 19) நடந்தது. விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் 4 மாதங்கள் உழைத்து உருவாக்கிய 16 டிப்ளமோ குறும்படங்களில் சிறந்த படங்களை 7 ஜூரி மெம்பர்கள் தேர்தெடுக்க அவற்றிற்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
எல்.வி. பிரசாத் அவர்களால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி. அவரின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். 100 ரூபாயை எடுத்துக் கொண்டு மொழி தெரியாமல், வெறும் சினிமா ஆர்வத்தோடு மும்பைக்கு பயணமானார். இன்று அவர் பெயரில் பிரசாத் அகடமி உட்பட பல மில்லியன் சதுரடியில் கட்டிடங்கள் இருக்கின்றன என வரவேற்புரை ஆற்றினார் சிவராமன்.
இந்த ஆண்டு எங்கள் மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என கேட்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் சொன்னர் பெயர் ஹன்சல் மேத்தா. அவர் இங்கு வந்து சிறப்பித்தது எங்களுக்கு பெருமையான விஷயம். 2007ல் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதுவரை 219 பேர் பிரசாத் அகடமியில் பட்டம் பெற்று சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் ஒரு அகடமியில் இருந்து இவ்வளவு பேர் பட்டம் பெற்றிருப்பது எங்களுக்கு கிடைத்த  பெருமை. எங்கள் அகடமி மாணவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சினிமா துறையில் எங்களின் மாணவர்கள் பலர் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்களாக ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்றார் ரவி குப்தன்.
ஒரு ஜூரியாக சிறந்த பல திறமையாளர்களை என்னால் காண முடிந்தது. சமூக பிரச்சினைகளை படங்களில் உங்களால் சொல்ல முடியும். நடிகர்கள் மற்றும் குழந்தைகளை கையண்ட விதமும் சிறப்பாக இருந்தது. கற்றுக் கொள்வதற்கு முடிவே கிடையாது. சினிமாவில் இருப்பது என்பது பெருமையான விஷயம் என்றார் ஜூரி மற்றும் நடிகை ரோகிணி.
விருது வழங்கி பேசிய சிறப்பு விருந்தினர், இயக்குனர் ஹன்சல் மேத்தா, “ஒரு விருது வாங்க எனக்கு 15 வருடங்கள் ஆகியது. நீங்கள் இப்போதே வாங்கியிருக்கிறீர்கள். அந்த ஸ்பிரிட்டை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு எஞ்சினியர், இயக்குனரானது ஒரு விபத்து. ஷாகித் படத்துக்கு முன்பு 9 படங்கள் இயக்கியிருந்தாலும் ஷாகித் என் இரண்டாவது இன்னிங்க்ஸ். ஷாகித் என்னுடைய டிப்ளமோ திரைப்படம் போன்றது. ஷாகித் படத்தை நான் 35 லட்சத்தில், 11 மாதத்தில் எடுத்து முடித்தேன். டிஜிட்டல் யுகத்தில் கெனான் 5டி கேமராவில் தான் பெரும்பகுதி படத்தை படம் பிடித்தேன். சினிமாவில் கதை சொல்வது தான் முக்கியம். என்னுடைய கதை எப்படி பலரை போய் சென்றடையும் என்பதை தான் யோசிப்பேன். நேதாஜி பற்றி வெப் சீரீஸ் இயக்கி வருகிறேன். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைக்காக நான் படம் எடுப்பதில்லை. எதிர்காலத்துக்காக படம் எடுக்கிறேன். டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தால் நாம் நினைத்த கதையை எந்த இடையூறும் இன்றி சொல்ல முடியும். முதலில் உங்கள் படத்துக்கு நல்ல ரேட்டிங் வாங்க முயலுங்கள், நூறு கோடி வசூலை பின்பு பார்த்துக் கொள்ளலாம். சினிமா என்பது முற்றிலும் ஒரு கலை. அதில் நாமும் ஒரு பங்காக இருப்பது பெருமை” என்றார். மேலும் பிரசாத் அகடமி மாணவர்களின் சினிமா தொடர்பான  கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
கவிதா பிரசாத், ஜூரி உறுப்பினர்கள் விஜய் ரத்னம், வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ஃபிலோமின் ராஜ், செழியன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். கே.ஆர். சுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் பின்னால் பெரும் கூட்டம்! குழம்பிய ஏ.ஆர்.ரஹ்மான்

Close