பழ.கருப்பையாவுக்கு ரஜினி ஆறுதல்!

2

கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திடீர் ஹீரோவாகி நிற்கும் அப்புச்சிக்கு (அப்படிதான் அழைக்கிறார்கள் பழ.கருப்பையாவை) போன் அடித்து ஆறுதல் கூறி அடுத்த இன்னிங்சை ஆரம்பித்திருக்கிறார் ரஜினி.

கடந்த ஒரு சில வாரங்களாக ‘பழ’ மேட்டர்தான் பலமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஊடகங்களில். பழத்தை நசுக்காம ஓய மாட்டோம் என்று ஒரு புறம் அதிமுகவினர் பல்லை கடித்துக் கொண்டிருக்க, தோலை உரிக்காமல் விட மாட்டேன் என்று நாச்சொல் ஆடிக் கொண்டிருக்கிறார் நம்ம பழைய எம்.எல்.ஏ. இந்த சர்ச்சை துவங்கிய இடம் சோவின் துக்ளக் ஆண்டுவிழா. ஒவ்வொரு முறையும் சோ நடத்தும் இந்த விழாவுக்கு போய் கலந்து கொள்ளும் ரஜினி இந்த முறை போகவில்லை. ஷுட்டிங்கில் பிசியாக இருந்ததால்தான் போக முடியவில்லையாம். ஆனால் அங்கு பேசிய பழ.கருப்பையா ஆளுங்கட்சியின் போக்கை தொங்க விட்டதை அறிந்து அந்த வீடியோ சி.டி யை வாங்கி வீட்டிலேயே போட்டு பார்த்தாராம். அடுத்த நிமிஷமே பழ.கருப்பையாவுக்கு போன் அடித்து, “பிரமாதம்” என்று பாராட்டினாராம்.

அதற்கப்புறம் வார ஏடுகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் அதே கருத்தை பழ.கருப்பையா வலியுறுத்த வீட்டிற்குள் பறந்தது கல். கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு பலத்த சேதாரம். தாக்கியவர்களை கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ். இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்தன. சில அரசியல் தலைவர்கள் நேரில் சென்றும் தொலைபேசியிலும் பழ.கருப்பையாவுக்கு ஆறுதல் கூறினர். கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா கிளம்புவதற்கு முன் அப்புச்சிக்கு போன் அடித்த ரஜினி, இந்த தாக்குதல் குறித்து விசாரித்ததுடன் ஆறுதல் கூறினாராம்.

அவர் தொலைபேசியில் விசாரித்த தகவலை ஊடங்களுக்கு ‘போட்டுக் கொடுத்து’விட்டார் அப்புச்சி. இனிமேல் நடக்கப் போவதை யாரறிவார்?

2 Comments
  1. அருணன் says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பெருந்தன்மை திரை உலகில் வேறு எவனுக்கும் வராது. வாழ்க தலைவர் ரஜினி அவர்கள்.

  2. Kumar says

    மனசாட்சி உள்ள எவனும், மனிதாபிமானம் உள்ள யாரும் பழ.கருப்பையா மீது நடத்தப்பட்டுள்ளள தாக்குதலை கண்டிப்பான். அதைத் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் செய்துள்ளார். இதற்கும் அரசியல் சாயம் பூசுவது கேவலமான மனநிலை உள்ளவர்களால் மட்டும் தான் முடியும்.

Leave A Reply

Your email address will not be published.