500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்! மீண்டும் வாயை திறக்க அஞ்சிய ரஜினி!

0

கருத்து சொன்னால் போதும். பிலுபிலுவென பிடித்துக் கொள்ளத் தயாராக ஒரு கூட்டம் இருந்தால், ஐயோ பாவம். ரஜினிதான் என்ன செய்வார்? மோடியின் உத்தரவுக்குப் பின் வீட்டை விட்டுக் கிளம்பிய பல சாமானியர்கள், ஏடிஎம் எடிம்மாக சுற்றி வருகிறார்கள். சோறு தண்ணியில்லாமல் யாத்திரைக்கு போனது போல, தெரு தெருவாக திரியும் திருவாளர் பொதுஜனம், மோடியின் திட்டத்தை ஆதரித்து எவர் பேசினாலும் விழுந்து பிராண்டுகிற அளவுக்கு புண்ணாகிப் போயிருப்பதால், இந்தியா முழுக்க ஒரே குரல்தான் ஒலிக்கிறது. ‘ஐயய்யோ… செஞ்சிட்டாரே’ என்பதுதான் அது.

ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறியாத ரஜினி, ‘புதிய பாரதம் பிறந்தது’ என்று ட்விட் பண்ணப் போக, பிடித்தது பிரச்சனை. ‘நாலு நாளா கியூவுல நின்னு ரெண்டாயிரத்தை மாத்திட்டு வந்தவரு சொல்றாரு. கேளுங்கப்பா…’ என்று மீம்ஸ் அடித்தார்கள். டைரக்டர் அமீர், ரஜினியின் ஆதரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். எல்லாவற்றையும் அறியாதவரா ரஜினி? அவசரப்பட்டு பேசிட்டோம் போலிருக்கு என்று நினைத்திருக்கலாம்.

2பாயின்ட்0 படத்தின் விழாவை மும்பையில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார் அல்லவா? விமான நிலையத்தில் அவரை வரவேற்க திரண்டது பெரும் கூட்டம். அதில் பாதி பிரஸ். கேமிரா சகிதம் குழுமிய அவர்கள், வெளியே வந்த ரஜினியிடம் ஊர் பட்ட கேள்விகளை அள்ளி வீசினார்கள். இடைத்தேர்தலில் ஆரம்பித்து, ஜெயலலிதாவை பார்க்க திரும்பவும் போவீங்களா என்று நகர்ந்து, ரூபா நோட்டு பிரச்சனையில் அதே கருத்தோடுதான் இருக்கீங்களா என்பது வரைக்கும் கேட்டுத் தள்ளிவிட்டார்கள்.

எல்லாருக்கும் தனது தலையை ஒருக்களித்து ஸ்டைலாக ஒரு சிரிப்பு சிரிப்பாரே… அதையே திரும்பவும் செய்த ரஜினி, 2பாயின்ட்0 போஸ்டர் பார்த்தீங்களா, நல்லாயிருக்கா? என்று கேட்டுவிட்டு விறுவிறுவென நடையை கட்டினார்.

இனி தேன் கூட்டையல்ல, தேன் பாட்டிலை பார்த்தால் கூட, ரஜினி சாருக்கு நாக்கு இனிக்காது!

Leave A Reply

Your email address will not be published.