கூத்தாடிகளின் கூடாரம் ஆகிறதா ரஜினி கட்சி?

2

ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை! ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே சொல்லிவிடுகிறது அவர்களின் அச்சத்தை!

இன்று தமிழ்நாட்டில் ரஜினி ரசிகர்கள் இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவுக்கு காற்று போல சூழ்ந்திருக்கிறார் ரஜினி. வீட்டுக்கொரு ஓட்டு என்கிற அளவுக்கு கூட அவரால் முன்னேற முடியும். ஆனால் இந்த ப்ளஸ் பாயின்ட் எல்லாம் பொசுக்கென்று தோற்று விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது கோடம்பாக்க குமாஸ்தாக்களின், அடர்த்தியான அன்பு.

ரஜினியை ஒருமுறை சந்தித்தவர்கள், இரண்டு முறை கை குலுக்கியவர்கள் என்று ஆரம்பித்து ரஜினியோடு நடித்த அத்தனை பேரும் சூப்பர் ஸ்டாரின் புதிய காரில் ஏறுவதற்கு தயாராகிவிட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, முதலில் வாலை நுழைத்து, அதற்கப்புறம் கொம்பையும் நுழைத்து அந்த போராட்டத்தின் பலனையே தனதாக்கிக் கொண்ட லாரன்சின் அரசியல், ரஜினியின் அரசியலோடு ஒன்றிணைய தயாராகிவிட்டது. லாரன்ஸ் மட்டுமல்ல… இன்னும் ஏராளமான சினிமாக்காரர்கள் ரஜினியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி உறுப்பினர் கார்டு பெற தயாராகி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர் திமுக விலிருந்து பிரிந்தபோது அவருடன் வந்தவர்களில் பலர் சினிமாக்காரர்கள் அல்ல. அவர் மட்டும் நினைத்திருந்தால் கோடம்பாக்கத்தை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து கட்சியில் இணைத்திருக்கலாம். அதை விரும்பவில்லை அவர். ஆர்.எம்.வீரப்பன் போன்ற தயாரிப்பாளர்களை தன்னுடன் வைத்துக் கொண்டாரே தவிர, நடிகர்களை அல்ல. தப்பித்தவறி வந்து சேர்ந்து கொண்டு குண்டுமணி மாதிரி ஆட்களை பாடி கார்டாக வைத்துக் கொண்டார். அதை தாண்டி பெரிய முக்கியத்துவம் இல்லை அவர்களுக்கு.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் இப்படி கூட்டம் கூட்டமாக வண்டியில் ஏற வந்தார்கள். மன்சூரலிகான் 100 அடி சாலையில் பேனர் எல்லாம் வைத்துப் பார்த்தார். அவரை கண்டுகொள்ளவே இல்லை கேப்டன். ஆனால் தனது ரசிகர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டார். மிதமிஞ்சிய கோபத்தையும் ஆத்திரத்தையும் பொது இடங்களில் காட்டியதாலேயே குப்புற விழுந்தார் விஜயகாந்த்.

ஆனால் இன்னும் கொடியோ, கட்சியோ முறையாக அறிவிக்கப்படாததற்கு முன்பே, மேக்கப் ஆசாமிகள் கட்சியை கபளீகரம் செய்யக் கிளம்பி வருகிறார்கள்.

ரஜினியை குப்புறத் தள்ள ஒரு பிஜேபி போதும். இவர்களும் எதற்கு தேவையில்லாமல்?

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. பாரதிதாசன் says

    நீங்கள் எவ்வளவு தான் திரித்து கூறினாலும், தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை தான் ஆதரிப்பார்கள். தமிழகம் முன்னேற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் சாத்தியம்.

    1. பிசாசு குட்டி says

      ரசிகரை விட தமிழக மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல

Leave A Reply

Your email address will not be published.