மன்னர் திப்புசுல்தான் ஆவியுடன் தினந்தோறும் பேசுகிறாரா ராஜ்கிரண்?

0

சிலர் சொல்லும் சம்பவங்களை கேட்டால், தலை கிர்ரென சுற்றும். நடிகர் ராஜ்கிரண் சொல்லுவதை கேட்டால், தலை மட்டுமல்ல… விரல், காலெல்லாம் கூட சுற்றும் போலிருக்கிறது.

ராஜ்கிரணை சந்தித்தோம். சினிமாவை தாண்டி ஆன்மீகம் பேச ஆரம்பித்த ராஜ்கிரண் சொன்ன அந்த சம்பவத்தை எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது. அவர் சொன்னது அப்படியே இங்கே-

“அவுட்டோர் போகும்போதெல்லாம் அருகிலிருக்கும் மசூதிகளுக்கும் தர்காக்களுக்கும் போய் வணங்குவது என்னோட வழக்கம். அப்படியொரு முறை திப்புசுல்தான் மஜீத்துக்கு போயிருந்தேன். நம் முன்னோர்களை நினைச்சு வணங்கினா அந்த பலன் அவங்களுக்கு போகும்ங்கறது நம்பிக்கை. நான் திப்பு சுல்தானை மனசுல நினைச்சுகிட்டு பிரார்த்தனை பண்ணினேன். சில நிமிஷம் கழிச்சு வெளியில் வந்த நான் எதிரில் வந்த பெரியவர்களை வணங்கிக் கொண்டே நடந்தேன். அப்போதுதான் அந்த பெரியவரை பார்த்தேன். வயசு 150 இருக்கும். அப்படியொரு கலர். கண்களில் ஒரு தீட்சண்யம். என்னை நேருக்கு நேராக உற்று நோக்கியபடி என் அருகில் வந்தார்”.

“ம்…. திப்பு சுல்தானை நினைச்சு பிரார்த்தனை பண்ணியிருக்கே. உன் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார். நான் அப்படியே புல்லரிச்சுப் போய் நின்னுட்டேன். என்ன பேசுவதென்றே புரியாத என்னை மறுபடியும் அசர வைத்தது அவரது பேச்சு. “இன்னும் பதினைஞ்சு நாள்ல உனக்கு கல்யாணம் நடக்கும். போ” என்றார்.

“என் முதல் மனைவியால் பாதிக்கப்பட்டு, சொத்துக்களையெல்லாம் இழந்து மோசமான நிலையில் இருந்தேன். அம்மாவை தவிர வேறு எந்த பெண்ணும் நல்லவ இல்லை என்று மனசுல ஆணியடிச்சது போல நம்பவும் ஆரம்பிச்சுட்டேன். இந்த நேரத்தில் எனக்கு கல்யாணம். அதுவும் இந்த ஐம்பது வயசுல என்றால், நம்பவா முடியும்? இருந்தாலும் அவருகிட்ட எதுவும் சொல்லாம உங்க போன் நம்பர் தர முடியுமா என்றேன். பக்ரிக்கு ஏது போன்? தேவைப்படும் போது நானே உன்னை கூப்பிடுவேன் என்று கூறிவிட்டார். நான் கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன். அவர் பெயர் சையது பாபா என்று மட்டும் அறிந்து கொண்டேன்’.

நான் அடிக்கடி சந்திக்கும் தோழி ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது “சற்று நேரம் தொழுகை நடத்திக் கொள்ள இடம் கிடைக்குமா?” என்று கேட்டேன். நான் தொழுகை செய்வதை பார்த்துக் கொண்டேயிருந்த அந்த இலங்கையை சேர்ந்த இந்து பெண், தொழுகை முடிந்ததும் இஸ்லாம் பற்றி ஏராளமான சந்தேகங்களை கேட்டார். நானும் சொன்னேன். அப்புறம்தான், “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். இஸ்லாமியராக மாறவும் சம்மதம்”னு சொன்னார். சையது பாபா சொன்னது போலவே பத்து நாட்களில் நானே எதிர்பார்க்காத என் இரண்டாவது திருமணம் நடந்தது.

அதற்கப்புறம் அவரே என் நம்பருக்கு போன் செய்தார். “என்ன கல்யாணம் நடந்திருச்சா?” என்றார். என் நம்பர் அவருக்கு எப்படி கிடைச்சது? நான் கல்யாணம் பண்ணியது அவருக்கு எப்படி தெரிஞ்சுது? எதுவும் தெரியல எனக்கு. நான் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தேன். அப்ப சொன்னார்… “உனக்கு ஆண் பிள்ளை பிறப்பான். அவனுக்கு திப்பு சுல்தான் என்று பெயர் வை” என்று. அவ்வளவுதான் போன் கட். அதற்கப்புறம் அவர் எப்போது கூப்பிடுவாரோ… அப்போதுதான் பேசவேண்டும்.

அவர் சொன்ன மாதிரியே திப்பு பிறந்தான். மறுபடியும் போன் வந்தது. வாழ்த்தினார். அப்படியே காலம் ஓடியது. நடுவில் ஏதாவது இக்கட்டு நேர்ந்தால் அவரை நினைத்துக் கொள்வேன். அடுத்த நிமிஷம் அவரிடமிருந்து போன் வரும். பேசுவேன். இப்படியே நாட்கள் போய் கொண்டிருந்தன. ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஷுட்டிங். போயிருந்தேன். நள்ளிரவு நேரம். வீட்டிலிருந்து போன். “பொம்மையில் இருந்த பேட்டரி போய் மகன் மூக்கினுள் அடைத்துக்கொண்டது. நீங்க வந்தால்தான் டாக்டரிடம் போவேன்னு அடம் பிடிக்கிறான். முகமெல்லாம் வீங்கிப் போச்சு. உடனே வாங்கன்னு சொல்றாங்க மனைவி. நான் அந்த நேரத்தில் பிளைட் இல்லாம பதறிப் போய், விசாகப்பட்டினத்திலேர்ந்து கார்லேயே சென்னை வந்திட்டேன்.

மகனை அள்ளிப் போட்டுக் கொண்டு நுங்கம்பாக்கம் சைல்ட் டிரஸ்ட் ஆஸ்பிடலுக்கு போனேன். அதுக்குள்ள விசாகப்பட்டினத்திலிருந்து என் படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, டாக்டரிடம் பேசி ட்ரீட்மென்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டார். டாக்டரிடம், “ராஜ்கிரண் ஒரு மாதிரியான ஆளு. குழந்தைக்கு ஒண்ணுன்னா முரட்டுத் தனமா நடந்துப்பாரு. அதனால் ஆபரேஷன் அது இதுன்னு அவருகிட்ட பர்மிஷன் கேட்டுகிட்டு இல்லாம, நடக்க வேண்டியது என்னவோ, அதை பாருங்க”ன்னு சொல்லிட்டார். நாங்கள் போய் சேர்ந்ததுமே மகனை ஸ்டெச்சரில் போட்டுக் கொண்டு போய் கதவை மூடிட்டாங்க. என்னை உள்ளே அனுமதிக்கல.

நான் கலங்கிப் போய் நிக்கிறேன். அப்பதான் சையது பாபாகிட்டயிருந்து போன். நான் அழுகையும் கவலையுமா அவர்ட்ட பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே, உன் பையன் உயிர் பிழைக்கணும்னா நீ எழுத்தாளர் பால குமாரனுக்கு போன் பண்ணி அவரை பிரே பண்ணச் சொல் அப்படின்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார். எனக்கு பாலகுமாரன் பழக்கமில்ல. இருந்தாலும் சிலர்ட்ட கேட்டு அவர் போன் நம்பரை வாங்கி, நான் ராஜ்கிரண் பேசுறேன்னு பேச ஆரம்பிச்சேன். தெரியும். சையது பாபா பேசச் சொன்னாரான்னு கேட்கிறார் அவர். அது கூட பரவாயில்ல. என் நிலைமை, பதற்றம் எதுவும் புரியாமல், உங்க பையனுக்கு திப்புசுல்தான்னு பேர் இருக்கே. அதை மாற்றி வேற பேர் வைக்கலாமான்னு கேட்கிறார்.

எனக்கு கோவம்னா கோவம். மகன் சாகப் பிழைக்கக் கிடக்கிறான். இப்ப போய் பேர் மாத்தறதா முக்கியம்? நான் சரிங்க. மாத்திக்கலாம்னு சொல்லிட்டேன். அப்புறமும் விடாம, நீங்க முஸ்லீம். நான் வெங்கட் ராமன்னு பேர் வைக்க சொல்வேன். நீங்க செய்வீங்களான்னு கேட்கிறார். நான் ஆத்திரத்தில் போனை கட் பண்ணிட்டேன். அதற்குள் சையது பாபாவிடமிருந்து போன். என்ன சொன்னார் பாலகுமாரன்னு கேட்கிறார். இப்படி இவங்க ரெண்டு பேரும் மாற்றி மாற்றி பேசிகிட்டேயிருக்காங்க.

அதற்குள் என் மகனுக்கு ஆபரேஷன் இல்லாமலே சுவாசக் குழாய்ல இருந்த அந்த பேட்டரிய டாக்டர் நீக்கிட்டார். எங்கிட்ட அவங்க ரெண்டு பேரும் மாறி மாறி பேசி குழப்பாம இருந்திருந்தா, நான் மூர்க்கத்தமான நடந்திருப்பேன். அந்த பேட்டரி உள்ளே ஓப்பன் ஆகி, மூளை நரம்பு, கண் பார்வை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும். அந்த பேட்டரி வெடிப்பதற்குள் அதை அகற்றுவதற்கு இந்த அரை மணி நேரம்தான் ரொம்ப முக்கியமான நேரமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் அதற்கப்புறம் மருத்துவர் அந்த பயங்கரத்தை விவரித்த போதுதான் புரிந்து கொண்டேன்.

கடைசியா பாபா சொன்னார். “ நீ நினைக்கும் போதெல்லாம் எங்கிட்ட பேசணும்னு நினைச்சேயில்ல? இனிமே பாலகுமாரன்ட்ட பேசு. கஷ்டம்னு வந்தா அவர் மடியில் படுத்து அழு. நான்தான் அவர். அவர்தான் நான்! ”

நானும் பாபா வடிவில் பாலகுமாரனை பார்க்கிறேன். இப்போது என்னுடைய ஆன்மீக குரு அவர்தான் என்றார் ராஜ்கிரண்.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும்தான் எவ்வளவு எவ்வளவு மிராக்கிள்ஸ்?

Leave A Reply

Your email address will not be published.