விவசாயப் புரட்சிக்கு தயாராகும் நம்ம விவசாயம்!

0

சவலைப் பிள்ளை மீது கவலை கொள்ளும் தாய் போல, இன்று அகில உலகம் முழுக்க வாழும் தமிழுலகமே விவசாயிகளுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. அந்த கண்ணீரை சேமித்தாலே ஒரு போகம் விவசாயம் பார்த்துவிடலாம் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் அந்த கண்ணீர் ஊற்று பெருகிக் கொண்டேயிருப்பதுதான் தமிழனின் மனிதாபிமானத்திற்கு உதாரணம்.

வெறும் கண்ணீர் என்ன செய்யும்? ஆக்கபூர்வமான காரியத்தை செய்வோம் என்று ஆர்கே என்ற செல்வந்தர் தலைமையில் களம் இறங்கியிருக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அவர்களின் அபூர்வமான அறிவுபூர்வமான திட்டம்தான் ‘நம்ம விவசாயம்’. நிலமிருக்கும் விவசாயிகளுக்கு விதை கொடுத்து, தண்ணீர் கொடுத்து, இயற்கை உரம் கொடுத்து அவர்களை விவசாயம் பார்க்க வைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். விளைகிற பொருளை விவசாயி சொல்லும் விலைக்கே வாங்கிக் கொள்ளுமாம் நம்ம விவசாயம். இப்பவே காஞ்சிபுரம், ஆரணி, திருவள்ளூர், தஞ்சாவூர் என்று தன் உதவிக் கரங்களை நீள விட்டிருக்கிறது இந்த அமைப்பு.

முன்னதாக இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிட்டார்கள். அன்பரசன் இயக்கத்தில் சத்யா இசையமைக்க, கிருத்தியா எழுதிய அந்த பாடலில்தான் எவ்வளவு அழுத்தம்? பாடலின் காட்சியமைப்புக்கு தனி பாராட்டுகள் அன்பரசன்! மைம் ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருந்த அந்த பாடலில் தாத்தா காலத்தில் விவசாயம் இருந்ததையும், தந்தை காலத்தில் இருந்ததையும், மகன் காலத்தில் இருப்பதையும் அவ்வளவு லைவ்வாக புட்டு வைத்திருந்தனர் நடிகர் நடிகைகள்.

இந்த பாடலை இளையராஜாவின் கையால் உருவாக்க வேண்டும் என்று காத்திருந்தாராம் அன்பரசன். ஆனால் அவரால் நேரம் ஒதுக்க முடியாதளவுக்கு பரபரப்பாக இருந்த காரணத்தால், இசைஞானியால் பாராட்டுகளை பெற்ற சி.சத்யா இசையில் இப்பாடல் உருவானது என்றார் கிருத்தியா.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து, உடுத்தியிருக்கும் கோவணத்தையும் உருவப் பார்க்கும் அதிகார வர்க்கங்களை மீறி, ‘நம்ம விவசாயம்’ அமைப்பு தலை நிமிர்ந்தால் ஒவ்வொரு விவசாயியும் தலை நிமிர்வான். அந்த இனிய நாளுக்காக காத்திருக்கிறது உழவனை வணங்குகிற உலகம்!

Leave A Reply

Your email address will not be published.