றெக்க விமர்சனம்

0

‘ஐ ஆம் றெக்க… அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா? வாழ்ந்துட்டு போங்…. ஸாரி, உதைச்சுட்டு போங்க சேதுபதி!

ஊரில் யாருக்கு காதல் வந்தாலும் ஜோடிகளை சேதாரமில்லாமல் சேர்த்து வைப்பதையே தன் முழு நேர வேலையாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அப்படியொரு அசால்ட் பிரச்சனைக்காக ஹரீஷ் உத்தமனை பகைத்துக் கொள்ள நேரிடுகிறது. அவரோ படை நடுங்க வைக்குமளவுக்கு படு பயங்கர வில்லன். இவருக்கும் இன்னொரு முரட்டுக் கிடாவான துஹான் சிங்குக்கும் பட ஆரம்பத்திலேயே படு பயங்கர மோதல். நல்ல நேரம் பார்த்து நடு மடியில் கை வைக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

விஜய் சேதுபதியின் தங்கை திருமணம் மறுநாள். அதற்கு முதல் நாள்தான் இருவருக்கும் மீண்டும் ஒரு மோதலுக்கான சூழல் வருகிறது. “நாளைக்கு என் தங்கைக்கு கல்யாணம். அதனால் இப்போ பிரச்சனை வேணாம். உனக்கு நான் என்ன செய்யணும் சொல்லு?” என்று இவர் கேட்க, “உன் தங்கச்சி கல்யாணம் ரத்தம் சிந்தாமல் நடக்கணும்னா எனக்கு நீ இதை செய்யணும்” என்று ஒரு வேலை சொல்கிறார் ஹரிஷ். என்னய்யா அது? “மதுரையிலேயே பெரிய ரவுடி ப்ளஸ் அரசியல்வாதியான மாணிக்கவாசகத்தின் பெண்ணை தூக்கிட்டு வரணும். அவளை துஹான் சிங்கிடம் ஒப்படைச்சுட்டு போயிட்டே இரு!” அதுதான்.

அப்புறமென்ன? மதுரைக்கு கிளம்புகிறார் விஜய் சேதுபதி. அங்கே ஏதோ இவருக்காகவே காத்திருந்த மாதிரி, இவர் கையை இறுகப்பற்றிக் கொண்டு ஓடி வருகிறார் லட்சுமிமேனன். முன்னபின்ன தெரியாத வயசுப்பையன் கூட எப்படிய்யா ஒரு பொண்ணு ஓடிவரும்? இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஊர் காதலை சேர்த்து வைக்கறதே ஒரு பொழப்புன்னு திரியணுமா மனுஷன்? இப்படி ஜனங்க வயிறு பொங்க கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை சொல்லி, இருமிய தொண்டைக்கெல்லாம் தேன் தடவி அனுப்புகிறார் அறிமுக இயக்குனர் ரத்ன சிவா. (அவருடைய முதல் படமான வா டீல்தான் இன்னும் திரைக்கு வரலையே?)

படம் முழுக்க அமுக்கியே வாசிக்கும் விஜய் சேதுபதி, ஒரு இடத்தில் கொடுக்கிற பர்பாமென்ஸ் அப்படியே உள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறது. சிறு வயதில் பார்த்த அந்த மாலாக்காவை, பல வருஷங்கள் கழித்து பார்த்து அதிர்ச்சியாவதும், அதே அக்காவுக்காக நெருப்பு தெறிக்க ஒரு பைட் போடுவதும் கூட பெரிசில்லை. அப்படியே தரையில் அமர்ந்து தன் இரு கைகளையும் நீட்டி, மாலாக்காவை வாரி அணைத்துக் கொள்ளும் அந்த காட்சியில் மளக்கென்று விழியோரம் நீர் பூத்தால், அதற்கு விஜய் சேதுபதியின் நடிப்பு பெரும் காரணம். சமயங்களில் அவரையே சாப்பிட்டுவிடும் அந்த மாலாக்காவும்தான்!

சுமார் 240 பேர் சுற்றி வளைத்தும், தன் மூக்கு நுனியில் விரல் படாமல் கூட விஜய் சேதுபதி விளாசித் தள்ளுகிற பைட் காட்சிகளை எந்த ‘சென்ஸ்’ கொண்டு வடிவமைத்தார்களோ, அந்த உருட்டுக் கட்டைகளுக்கே வெளிச்சம்! சும்மா மல்லாக் கொட்டையை உடைத்துத் தள்ளுவது போல ஒவ்வொருத்தன் எலும்பையும் மளக் புளக் ஆக்குகிறார் வி.சே. அவ்வளவு களேபரத்திலும், மின் தடை நேரத்தை சரியாக உள் வாங்கி, கரண்ட் ஒயரை மிதித்தபடி கடக்கும் அவரது சாமர்த்தியத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

ஷகிலா மீண்டும் பிரஷ்ஷாக நடிக்க வந்துவிட்டார் என்று ஏமாற்றி, கேரளா பக்கமாக தள்ளிவிட்டுவிடலாம் லட்சுமிமேனனை! ஏர் பம்ப் கொண்டு காற்று நிரப்பியது போல எக்கச்சக்கமாக வீங்கிக் கிடக்கிறார். மேக்கப் வேறு மிரட்டுகிறதா… குளோஸ் அப் வைத்துவிடுவார்களோ என்கிற அச்சத்துடனேயே நேரம் செல்கிறது. தெரிந்தேதான் முதல் 50 நிமிடம் கழித்து திரையில் என்ட்ரி கொடுக்க வைத்தாரோ என்னவோ, நன்றி ரத்ன சிவா!

எல்லா படத்திலும் வில்லனாகவே வரும் கிஷோருக்கு இந்தப் படத்தில் அருமையான கேரக்டர். காதலியை பிரிந்து, நடு மண்டையில் அடிவாங்கி, பைத்தியம் பிடித்து, பல கோணங்களில் பரிதாபப்பட வைக்கிறார். இவரும் மாலாக்காவும் மீண்டும் இணையும் அந்த இடம், அருமை! அப்புறம்… யாருங்க அந்த மாலாக்கா. அவ்வளவு அழகு! நடிப்பும் அவ்வளவு ஈர்ப்பு!

விஜய் சேதுபதியின் அப்பாவாக கே.எஸ்.ரவிகுமார். “என் பையன் எதை செஞ்சாலும் சரியாதான் செய்வான். செஞ்சு முடிச்சுட்டு அவனே எனக்கு போன் பண்ணுவான். நீ வை” என்று விஜய் சேதுபதியின் போன் காலை ஏற்றுக் கொள்ளாத காட்சியில், கைதட்டல் தெறிக்கிறது!

அப்புறம்… படத்தில் சின்ன வயசு விஜய் சேதுபதியாக வரும் அந்த குட்டிப் பையனுக்கு தனி அப்ளாஸ். புள்ள என்னமா நடிச்சுருக்கான்!

டி.இமான் போட்டிருக்கும் அந்த ‘கண்ணம்மா…’ என்கிற தீம் பாடலை கண்களை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள். உயிரை தட்டி எழுப்பும். கண்ணோரத்தில் நீர் வழியும். அவ்வளவு இதம்! ராஜசேகரின் பைட் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது. உயிர் பயமில்லாது விழுந்து வாரும் அந்த ஒவ்வொரு ஸ்டன்ட் மேன்களுக்கும் தனித்தனி பாராட்டுகள்! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லட்சுமிமேனன் அழகில் தோற்றுவிட்டாலும், மற்ற மற்ற ஏரியாக்களில் அசரடிக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு இப்படியொரு ‘மடேர் மடேர்’ படம் தேவையா என்று கேட்டால், என்னவோ B அண்ட் C என்றெல்லாம் சொல்கிறார்கள். நமக்குதான் A-மாற்றமா இருக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

To listen audio click below:-

Leave A Reply

Your email address will not be published.