சாமி 2 / விமர்சனம்

0

கோபப்படுகிற எல்லாருமே குழாய் ரேடியோ ஆகிவிடுவதால், சாமி ஸ்கொயரை ‘சவுண்ட் ஸ்கொயர்’ என்றும் அழைக்கலாம்! எப்பவோ ஊறப்போட்ட உளுந்து. இப்பவும் வடை சுட பயன்பட்டிருப்பதால் உளுந்தை புகழ்வதா, வடையை மகிழ்வதா? என்கிற குழப்பமே வந்துவிடுகிறது. சமையல்கார சாமியே நம்ம ஹரிதான். ஒங்களை சும்மா சொல்லக்கூடாது. வாய் மணக்க ஒரு ‘வணக்கம்’யா!

செங்கல் சூளைக்குள் வைத்து எரிக்கப்பட்ட கட்டை பிரம்மச்சாரி பெருமாள் பிச்சைக்கு இலங்கையில் ஒரு ‘செட்டப்’ இருக்கிறது என்றும், அந்த செட்டப்புக்கு மூன்று கெட்டப் பிள்ளைகள் இருப்பதாகவும் கதையை நெய்த அந்த கற்பனைக்கே ஒரு சபாஷ். மேற்படி மூவரும் திருநெல்வேலிக்கு வந்திறங்க, அநியாயமாக செத்துப்போன ஆறுச்சாமியின் குழந்தை ஐ.பி.எஸ் ஆகி அதே ஊருக்கு வந்திறங்குவதெல்லாம் பூர்வ ஜென்ம போர்க்களம். அதை சரியாக பயன்படுத்தி தியேட்டரை தெறிக்க விடுகிற ஹரியின் மேஜிக் அமர்க்களம்! சண்டை பிரியர்களுக்கு இப்படம் சர்க்கரை பொங்கல்! சாதா பிரியர்களுக்கு சர்வரோக சவுக்கடி!

‘நான் பேய் இல்ல. பூ…தம்’ என்று ஸோல்டரை விரிக்கும் விக்ரம், இன்னமும் யங் பாய் போல தன்னை வைத்துக் கொண்டிருப்பது விஞ்ஞான அதிசயம். சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் சென்ட்டிமென்ட் சீன்களிலும் அவரது புடம் போட்ட தோள்கள் மீது மொத்த படத்தையும் இறக்கி வைக்கிறார் இயக்குனர் ஹரி. தாங்கு தாங்கென தாங்குகிறது விக்ரமின் புஜபலம்! என்னதான் இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் லிப் அருகில் இவரது லிப்பும் இடம் ஒதுங்குவதெல்லாம் மனசாட்சியை அடகு வைக்கிற ஏரியா.

நடமாடும் கடை பொம்மை போல அழகாக வந்து, அழகாக சிரித்து, அழகாக அழுது, அழகாக அடம் பிடித்து, அப்படியே மனசை அள்ளிக் கொள்கிறார் நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ். ஜி.வி.பிரகாஷுடன் ஆட வேண்டிய பொண்ணு, விக்ரமுக்கு ரூட் விடுவதுதான் வயிற்றில் பூச்சி பறக்க விடுகிறது. மற்றபடி, நடிக்க வேணாம். அப்படியே பார்க்கலாம்!

மெயின் வில்லன் பாபி சிம்ஹா. பசு வேஷம் போட்டா பால் கறந்துறணும். எருமை வேஷம் போட்டா சேறுல புரண்டுடணும் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். காட்சிகள் நகர நகர இவர் மீது வருகிற எரிச்சலே, கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று உணர்த்துதே! இலங்கை தமிழ் பேசும் ரவுடியாக வந்திறங்கி, 28 வருஷ இடைவெளியில் தமிழ்நாட்டு தமிழுக்கு மாறிவிடுகிற பாபி ஒரே நேரத்தில் கால இடைவெளிக்கும் லாஜிக் சொல்வது சபாஷ்.

மத்திய மந்திரியாக இருந்தாலும், லோக்கல் தாதாவை நினைத்து பம்முகிற கேரக்டரில் பிரபு. பெரிதாக ‘பில்லப்’ செய்திருக்கிறார். சுதா சந்திரனை புக் பண்ணும்போதே, அவர் வீட்டு மேக்கப் பெட்டியை நடு ரோட்டில் போட்டு உடைத்துவிட்டு வருவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது. (எல்லா படத்திலேயும் இப்படிதான் வர்றாங்க அந்தம்மா) ராஜபக்சேவை நினைவுபடுத்துகிறார் ஓ.ஏ.கே சுந்தர்.

எண்ணி வைத்த மாதிரி சில காட்சிகளே வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆஹா. மழை காலத்தில் கர்ப்பிணி பெண்ணை வில்லன்கள் சேற்றில் புரட்டி கொல்வதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்தில் கூட நடந்தது இல்லை. இந்த தமிழ்சினிமா இருக்கே, யோவ் யோவ்… ஏன்யா?

ராம்ப் ஷாட் என்று சொல்லப்படுகிற பார்ஸ்ட் பார்வேடு காட்சிகளை முக்கால்வாசி தவிர்த்திருக்கிறார் ஹரி. முந்தைய படங்களை ஒப்பிடும்போது, சாமி ஸ்கொயரில் அந்த எரிச்சல் இல்லை.

பின்னணி இசையில் சொதப்பினாலும், பாடல்களில் தப்பித்துக் கொள்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சில்வாவின் சண்டைக்காட்சிகள் அபாரம். குறிப்பாக கோவிலுக்குள் கதவை மூடிவிட்டு வில்லன்களை அரிவாளால் அறைந்தே கொல்கிறாரே விக்ரம்? அந்த பைட் மட்டும் இன்னும் ஆயிரம் காலத்திற்கு நடுங்க விடும்.

பழிவாங்கும் கதைக்குள் ஒரு போலீசும் பொறுக்கியும் இருந்தால் இப்படிதான் நடக்கும். ஆனால் கொடும் வெயிலில் கழுத்தை சுற்றி மப்ளர் கட்டியதை போல வியர்க்க விடுகிறார் ஹரி என்பதையும் மறுப்பதற்கில்லை.

சாமி ஸ்கொயர்… சத்தியமா ஃபயர்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.