டிராபிக் ராமசாமி படத்தில் மதப் பற்றின் காரணமாக நாமத்தை அழித்தாரா எஸ்.ஏ.சி?

0

‘வரலாறு முக்கியம் தலைவரே’ என்று எத்தனை முறை சொன்னாலும், கல்வெட்டில் கத்தியை போட்டு சுரண்டி, ஆவணத்தை அழிப்பதில் நமக்கு நிகர் நாமே! அப்படியொரு கல்வெட்டில்தான், கத்தி போட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி.

எல்லாம் மதம் செய்யும் மாயம்.

ஒன் மேன் ஆர்மி டிராபிக் ராமசாமி, தமிழ்நாடே வணங்கும் ஈ.வே.ராமசாமியின் துணிச்சலுக்கு சற்றும் குறைவில்லாதவர். செயின் ஜார்ஜ் கோட்டையாகவே இருக்கட்டுமே, ஏதோ மல்லாக்கொட்டை ரேஞ்சுக்கு பிரித்து மேய்வதில், இவருக்கு நிகர் இவரே. வெளியுலகத்திற்கு ‘போஸ்டரை கிழிப்பார். வேறென்னத்தை கிழிப்பார்’ என்று தெரிந்தாலும், இவர் கிழித்தது நிறைய நிறைய.

இவரது வாழ்க்கை சம்பவங்களை கோர்வையாக்கி ஒரு படமாக்கி வருகிறார்கள். விக்கி என்பவர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஹீரோ, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. “என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களோடு ஒப்பிட்டால், டிராபிக் ராமசாமியும் நானும் ஒண்ணுதான். அநீதியை கண்டால் நானும் சும்மாயிருக்க மாட்டேன். பல இடங்களில் அடித்திருக்கிறேன். சில இடங்களில் அடியும் வாங்கியிருக்கிறேன்” என்றார் எஸ்.ஏ.சி.

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை முழுசாக படித்தது மட்டுமல்ல… அவரோடு பழகியும் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொண்டு இப்படத்தில் நடிக்கிறார் எஸ்.ஏ.சி.

அவரைப்போலவே கெட்டப். அவர் எப்படி பாக்கெட்டில் ஆவணங்களோடு திரிவாரோ, அப்படியே நடமாடும் கோர்ட்டாக காட்சியளிக்கிறார் எஸ்.ஏ.சி. அச்சு அசலாக டிராபிக் ராமசாமியாகவே மாறியிருக்கும் எஸ்.ஏ.சியிடம் ஒன்றே ஒன்று மிஸ்சிங்! அது?

இவர் நெற்றியில் இருக்கும் நீண்ட நாமம்!

அந்த நாமம், எஸ்.ஏ.சி.யின் நெற்றியில் இல்லை. ஏன்?

எஸ்.ஏ.சி ஒரு கிறிஸ்துவர் என்பதாலா? இந்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த எஸ்.ஏ.சி. “எனக்கு சாதி, மதம்னு எதுவும் இல்ல. என் மனைவியை நான் காதலிச்சு கல்யாணம் பண்ணும்போது அவர் என்ன சாதி, என்ன மதம்னு கூட எனக்கு தெரியாது” என்றார்.

அப்படின்னா இந்த நாமத்தை ஏன் சார் மிஸ் பண்ணீங்க? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அது ஏசு குற்றமாகிவிடும் என்பதால் ஸ்டாப் ஸ்டாப்!

நெற்றி சும்மாயிருக்கேன்னு நினைச்சதையெல்லாம் போட்டுக்க முடியுமா என்ன?

Leave A Reply

Your email address will not be published.