அடியே சகுந்தலா… அடுத்த ஹிட்டுக்கு தயாராகு தமிழனே!

0

‘அட்றா அட்றா நாக்க முக்க’ பாடலை அண்டார்டிகாவில் ஒலிக்க விட்டாலும், அங்கேயும் பலர் எழுந்தாடுவார்கள். அப்படியொரு கொலகுத்துப் பாடல் அது. அப்படியொன்று அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி. வந்ததும் இல்லை. வரப்போவதும் இல்லை. அந்த பாடலை எழுதியவர், அந்த மெட்டு உருவாக காரணமாக இருந்தவர் என்று பற்பல புகழுக்கு காரணமான பி.வி.பிரசாத், அவரே இயக்கி அவரே தயாரித்து அவரே இசையமைத்து அவரே ஹீரோவாக நடித்தும் இருக்கிறார். அதுதான் ‘சகுந்தலாவின் காதலன்’.

‘அடியே சகுந்தலா’ என்று இந்தப்படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. ச்சும்மா போட்டு புரட்டியிருக்கிறார் பி.வி.பிரசாத். இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இப்பவே மார்க் குத்திவிடலாம் என்கிற அளவுக்கு அசத்திவிட்டார் அசத்தி! இந்த பாடல்களை கேட்ட மாத்திரத்தில், தனது வி மியூசிக் நிறுவனம் சார்பில் பாடல்களுக்கான உரிமையை வாங்கியிருக்கிறார் விஷால். ஒரு தலைக் காதல், அதனால் சிறைவாசம், கொலை வெறி துரத்தல் என்று படத்தின் கதையை சின்ன அளவில் சொன்னது அங்கே திரையிடப்பட்ட டீசர். இந்த டீசரும், அங்கு திரையிடப்பட்ட பாடல்களும் இந்த படத்தின் ரிசல்ட்டை இப்பவே எழுதி வைத்தாலும், படத்தின் வியாபாரம் குறித்த எவ்வித தகவலும் அந்த மேடையில் பகிர்வு செய்யப்படாதது ஆச்சர்யம்தான்.

சமீபகாலமாக அறிவாலயத்தின் க்ளிப்பிங்ஸ்களில் கூட அதிகம் அகப்படாத முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். விசாரித்தால், இந்த பி.வி.பிரசாத் வீராசாமியின் சித்தி மகனாம். “சின்ன வயசுலேர்ந்து அவனுக்கு இது மாதிரி விஷயங்களில்தான் அதிக ஆர்வம். இன்னைக்கு ஒரு ஹீரோவா வளர்ந்து நிக்கறதை பார்க்கும் போது பெருமையா இருக்கு” என்றார் ஆற்காட்டார்.

விஷாலின் பேச்சிற்கு நிறைய கவன ஈர்ப்பு இருந்தாலும், ஒரு விஷயத்திற்காக கைதட்டியது கூட்டம். “எங்க கம்பெனியில் இருக்கிற வி. மியூசிக் வெறும் வி இல்ல. வெஞ்சன்ஸ் மியூசிக்தான் அது. பாண்டிநாடு படத்தில் வரும் ஃபை ஃபை பாட்டு அவ்வளவு பேமஸ். ஆனால், அந்த மியூசிக்கை வாங்கிய நிறுவனம் நஷ்ட கணக்குதான் காட்டியது. அதனால்தான் நாமளே ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சேன். நிச்சயமா பி.வி.பிரசாத் பாடலுக்கு என்ன வருமானம் வந்திச்சோ, அது அப்படியே அவர் அக்கவுன்ட்டுக்கு போயிடும்” என்றார்.

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தில் தாமிரபரணி பானுதான் ஹீராயின். இந்தப்படம் தாறுமாறான ஹிட்டடித்தாலும், பானுவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் அவருக்குதான் கல்யாணம் ஆகிருச்சே மக்கா?

Leave A Reply

Your email address will not be published.