டாஸ்மாக் பாரில் ரகளை ? டைரக்டர் சாமிக்கு அடி உதையா?

0

‘சமரசம் உலாவும் இடமே…’ என்று சுடுகாட்டை சொன்ன காலம் போய், சுடுகாட்டுக்கு டோக்கன் போட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை சமரசம் உலாவும் இடமாக கருத ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம். இங்குதான் வாசலில் நின்று கூக்குரல் கொடுத்து நோட்டபிள் டைரக்டர் ஆகியிருக்கிறார் சாமி. உயிர், சிந்து சமவெளி என்ற இரண்டு படங்களின் மூலமாகவே நோட்டபிள் சினிமாக்காரர் ஆகியிருந்த சாமி, இன்று பிற்பகல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தன் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார். விளைவு? பத்துக்கும் மேற்பட்ட குண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்களாம். நல்லவேளை… அடி உதையிலிருந்து தப்பித்தார் சாமி.

குற்றம்… நடந்தது என்ன?

இன்று மாலை சுமார் நான்கு மணிக்கு வளசரவாக்கத்திலிருக்கும் ஜில் ஜில் ஒயின்ஸ் ஷாப்புக்கு சென்றாராம் சாமி. படத்திற்கு லொக்கேஷன் பார்க்கவா என்றால் அதுதான் இல்லை. தனது உள் மனசு லொக்கேஷன் ஒரு மாதிரியாக இருப்பதால், ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக சென்றாராம் அங்கு. ஏதோ ஒரு சரக்கு பெயரை சொல்லிக் கேட்டவருக்கு, கேட்ட சரக்குதான் கிடைத்திருக்கிறது. ஆனால் பாட்டிலில் போட்டிருந்த விலை ஒன்று. இவரிடம் கேட்ட தொகை ஒன்று. உடனே இதை ஆட்சேபித்த சாமி, வாக்குவாதம் முற்றியதால் பில் கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பில் தரப்படவில்லை. சரி போகட்டும் என்று வாட்டர் பாட்டில் வாங்கினால் அதுவும் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா. ஆம்லெட் கேட்டால், அடக்கவிலையை விட அநியாய காசு. பேப்பர் கப் ஆறு ரூபாய். இப்படி சாமிக்கு நைவேத்யம் செய்த ஜில் ஜில் ஒயின்ஸ், அவருக்கு சூடு காட்டி வெப்பம் ஏற்றியது.

காச் மூச் என்று கத்த ஆரம்பித்தாராம் சாமி. உடனடியாக அங்கிருந்த குண்டர்களை அழைத்த கடைக்காரர்கள், இவரை அப்புறப்படுத்துங்கள் என்று அன்புக்கட்டளையிட, ஏரியாவே ரணகளம். நாம் சாமியை தொடர்பு கொண்டோம்.

‘நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். நான் குடிக்கதான் போனேன். ஆனால் எல்லாம் அதிக விலை. ஓட்டல்ல ரெண்டு இட்லி வாங்குனா கூட பில் கொடுக்குறான். ஆனால் இங்க கேட்டா அடிக்க வர்றான். இதை நான் விடப்போவதில்லை. புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு இருக்கேன். அப்புறம் பேசுறேன்’ என்றார் சூடாக.

என்னடா… படம் ரிலீசாவப்போவுது. சாமிய பற்றி ஒரு தகவலும் இல்லையேன்னு பார்த்தோம்… புகை கிளம்பிருச்சு!

Leave A Reply

Your email address will not be published.