சர்கார் கதை திருட்டு! எப்படி ஏமாற்றினார் ஏ.ஆர்.முருகதாஸ்?

2

வழுக்கை தலையில் முடி நடுவதுதான் பேஷன் என்றால், வறண்ட தலைக்குள் இரவல் சிந்தனைகளை நட்டு வாழ்க்கை நடத்துவதும் கூட ஒரு பேஷன்தான் போலிருக்கிறது. இது குறித்து முழு விபரம் வேண்டுவோர் கதை திருட்டு புகழ் ஏ.ஆர்.முருகதாசை அணுகலாம். நீங்களும் வெகு சீக்கிரத்தில் முழுநீள திருடர் ஆகலாம்!

இவர் இயக்கிய ரமணா திரைப்படமே நந்தகுமார் என்பவரின் கதை. பிற்பாடு அந்த உண்மையை தெரிந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த், முருகதாசிடமிருந்து சில லட்சங்களை பிடுங்கி நந்தகுமாருக்கு கொடுத்த கதையை சினிமாக்காரர்கள் அறிவார்கள். அதற்கப்புறம் தனது நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க வாய்ப்பளித்து பாவத்தை கழுவிக் கொண்டார்.

‘கத்தி படமே என் கதைதான்’ என்று முடிந்தவரை போராடினார் கோபி நயினார். அப்புறம் கோர்ட்டும், வலுவான வக்கீல்களும் சத்தியத்தை கொன்று சட்டத்தை(?) நிலைநாட்டினார்கள். கட்… காலம் மீண்டும் ரிப்பீட்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் ‘சர்கார்’ என்னுடைய கதை என்று கோர்ட்டுக்கு போயிருக்கிறார் வருண் ஜெயராமன். முன்னதாக திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தனது செங்கோல் கதையை 2007 ல் பதிவும் செய்திருக்கிறார் வருண். இந்த தைரியத்தில் கோடம்பாக்கத்தில் நிறைய ஹீரோக்களிடம் கதை சொன்னவர், ஒரு சந்தர்ப்பத்தில் எஸ்.ஏ.சிக்கே சொன்னதாகவும் தகவல். ‘இவ்வளவு டெப்த் ஆன அரசியல் கதையில் விஜய் இப்போது நடிக்க முடியாது. சில காலம் பொறுங்க’ என்று சொல்லப்பட்டதாம். அதற்கப்புறம் அவரிடமே இரண்டு வருடங்கள் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார் வருண்.

சில பல மாதங்களுக்கு முன் விஷாலுக்காக இந்த கதையை சொல்லப் போயிருக்கிறார். அவரை அழைத்துப் போனவர், ஏ.ஆர்.முருகதாசின் ஸ்டில்கிராபர் விஜய். அருகிலிருந்து முழு கதையையும் கேட்ட விஜய், அப்படியே முருகதாசிடம் ஒப்பித்ததாக சந்தேகப்படுகிறது திரைப்பட எழுத்தாளர் சங்கம். இதுபோக, சர்கார் கதையும் வருணின் செங்கொடி கதையும் ஒன்றுதான் என்று தீர விசாரித்து தீர்ப்பும் அளித்துவிட்டார் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ்.

இந்த தீர்ப்பை அவரை தர விடாமல் தடுத்த சக்திகள் ஒருவர் இருவரல்ல. பலர். அத்தனை பேரும் தமிழ்சினிமாவின் முன்னணி இடத்தில் இருப்பவர்கள். திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குள்ளேயே பொறுப்பில் இருக்கும் நடிகர் ரமேஷ் கன்னாவின் மகன் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். நடவடிக்கை எடுக்க விடுவாரா ரமேஷ்கன்னா? குறுக்கே விழுந்து குமுறி குமுறி தடுத்தாராம். அதுமட்டுமல்ல, சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் நீங்க இனிமேல் எந்தப்படத்திலும் நடிக்க முடியாதளவுக்கு போய்விடும். பார்த்துக்கங்க என்றும் கே.பாக்யராஜிடம் செல்ல மிரட்டல் விடுத்தவர்களும் உண்டு.

கட்… நேர்மையை நிலைநாட்டிய கே.பாக்யராஜ் தன் விசாரணையையும் தீர்ப்பையும் எழுத்து பூர்வமாகவே வழங்கிவிட்டார் வருணிடம். அதை வைத்துக் கொண்டுதான் கோர்ட் படியேறியிருக்கிறார் வருண்.

சட்டம் ஏழைகளுக்கு எட்டா விளக்காக கூட இருக்கலாம். அது கொளுத்தப் போனவனின் கையையே சுட்டெறிக்கிற விளக்காக இருந்தால்….

அதுதான் நாக்கை பிடுங்கிக் கொள்ள வேண்டிய ஆன்ட்டிக் கிளைமாக்ஸ்!

2 Comments
  1. Nandu says

    Moolai illatha murukkudoss kathaiya thirudan thaanseivaan.

  2. பாரதிராஜா says

    விஜய் ஒரு கதை திருடன். முதலில் கத்தி, அப்புறம் மெர்சல், இப்ப சர்க்கார்.
    துரோகி விஜய் ஒழிக.

Leave A Reply

Your email address will not be published.