சதுர அடி 3500 விமர்சனம்

0

‘ஆவி’ங்கற அஸ்திவாரத்தில், ‘இன்வஸ்டிகேஷன்’ங்கிற பில்டிங் கட்டியிருக்கிறார் டைரக்டர் ஜாய்சன். மேஸ்த்ரியும் வீக். மேல் மாடியும் வீக்!

பல அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சியில், அந்த கட்டிடத்தின் முதலாளி தூக்கில் தொங்கிவிட, விசாரிக்க வருகிறார் அதிகாரி ரகுமான். எக்ஸ்பென்ஸ் எக்கச்சக்கமாக இருந்திருக்கலாம். அதிகாரியை அப்படியே கழட்டி விட்டுவிட்டு, அதே இன்வெஸ்ட்டிகேஷனை கையில் எடுத்துக் கொள்கிறார் படத்தின் ஹீரோ நிகில் மோகன். கொலையாளியை தேடி இவர் போகப் போக, செத்துப்போன கட்டிட முதலாளியும் ஆவியாக பின் தொடர்கிறார். சமயங்களில் அதிகாரி, வந்தவன் போனவன் என்று எல்லார் கண்ணுக்கும் அந்த ஆவி தெரியவர…. அப்புறம் என்னாச்சு என்பது செகன்ட் ஹாப். நடுவில் இனியா. அவரை காதலிக்கும் ஒரு மொக்கை பீஸ் என்று கதை நகர, இறுதியில் அடுக்குமாடி கட்டிடங்களாக குறி வைத்து மிரட்டும் பிரதாப் போத்தனை போலீஸ் என்ன செய்தது என்பது க்ளைமாக்ஸ்.

ரியல் எஸ்டேட் ஊழல்களையும், பரிதாபங்களையும், தந்திரங்களையும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஆறு கோடி கட்டிடத்தை ஐம்பது ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரை வைத்து ரிஜிஸ்த்தரே பண்ணி முடித்துவிட்டார் இயக்குனர் ஜாய்சன். அவ்வளவு சிம்பிள் மற்றும் அலட்சிய பிரசன்ட்டேஷன் (போங்கண்ணே… போங்கு)

படத்தின் ஹீரோ நிகில்தான் விசாரணை அதிகாரி. சுறுசுறுவென இருக்கிறார். நேரம் கிடைக்கும்போது மட்டும் லவ் பண்ணுகிறார். விசாரணை நேரம் போக, லவ் மூடுக்கு வரும் இவரை விடக்கூடாது என்று லபக்கென பிடித்துப் போட்டு டூயட் பாட விட்டிருக்கிறார் டைரக்டர்.

இனியாவுக்கும், அவரது அப்பா அம்மாவான எம்.எஸ்.பாஸ்கர் கோவை சரளாவுக்கும் கணிசமான பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். தம்பதிகளின் மொக்கை ஜோக் போக, மீதி நேரத்தில் இனியாவை ரசிக்க முடிகிறது. லவ் பண்ணியவன் ஆவியாகிவிட, அவன் சம்மதத்தோடு வேறொருவனை கைப்பிடிக்கும் இனியாவின் டேக் இட் பாலிஸியை என்னவென்று பாராட்ட? அந்த கடைசி காட்சியில், இனியா தன் லவ்வரை உணர்வது மட்டும் டச்!

ரகுமான் சட்டென அந்தர்தியானம் ஆகியிருந்தாலும், வந்து போன ரெண்டு சொச்சம் காட்சிகளில் செம தில்லான லுக்!

பயந்தாங்கொள்ளி போலீஸ் அதிகாரியாக தலைவாசல் விஜய். வித்தியாசமான கற்பனை.

அவ்வளவு தாட்டியான பெசன்ட் நகர் அன்பு, வில்லன் கோஷ்டிக்கு அஞ்சி ஓடிவருவதெல்லாம் பக்கா சொதப்பல். நடுவில் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அந்த பிணமும்தான். ஆனால் கதையை வளைத்து ஒடித்து திருப்ப வேண்டும் என்றால், இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்?

படத்தில் வரும் பாடல்களும், அது படமாக்கப்பட்ட ரிச்நெஸ்சும் ஆறுதல். குறிப்பாக நடன அமைப்பு. இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா கொடுக்கப்பட்ட வேலையை மெனக்கெட்டு செய்திருக்கிறார். தளபதி தினேஷின் பைட்டுகள் பல படங்களில் பார்த்த ரிப்பீட் ரகம் என்றாலும், சோர்வில்லாமல் முடிகிறது.

தலைப்பில் காட்டியிருந்த வித்தியாசத்தை, படத்திலும் காட்டியிருந்தால், சதுர அடி 10,000 என்றாலும் வொர்த்ஆக இருந்திருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.