சொந்தக்காரர் நிகழ்ச்சி! கொள்கை கோபம் போச்சி! புரட்சித் தமிழனின் பூட்டு?

0

எந்த மேடை கிடைத்தாலும் தோலை கிழித்து, மாலையாய் போட்டுக் கொள்கிற அளவுக்கு பொங்குவார் சத்யராஜ். ஆனால் எச்.ராஜாவைக் கிழிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் போனால் போகட்டும் என்று புரட்சித்தமிழன் ஒதுங்கிவிட்டாரே… ஏன்? என்ற கேள்வியோடு முடிந்தது ஒரு சினிமா நிகழ்ச்சி.

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற அட்டகாசமான படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா நடித்த தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம்தான் ‘நோட்டா’. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க, இருமுகன் புகழ் ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

தனது பேச்சை ஆரம்பிக்கும் போதே ஒரு அற்புதமான திருக்குறளை சொல்லி பேச ஆரம்பித்தார் விஜய் தேவரகொண்டா. தத்தி தத்தி தமிழ் பேசினாலும், அவரது கொச்சை தமிழின் அழகு கொஞ்ச நேரம் காதை விட்டே அகலவில்லை. அதுமட்டுமல்ல… ‘இந்தப்படத்தில் நானே என் சொந்தக்குரலில் தமிழ் பேசுவேன்’ என்று கூறிய அவருக்கு அங்கிருந்த பிரஸ் மானசீகமாக பாராட்டுகளை வழங்கியது.

‘இருட்டறையில் முரட்டுக்குத்து’, ‘பார்த்து… பல்லு படாம’ போன்ற பட இயக்குனர்களுக்கும் அந்த மேடை அன்பையும் ஆசிர்வாதத்தையும் வழங்கியது. அதே மேடையில் புரட்சிக்குரல் பா.ரஞ்சித்தும், நல்ல இயக்குனர் மவுனகுரு சாந்தகுமாரும் இருந்தது நறநற முரண்!

அநேகமாக மேடையில் பேசிய எல்லாருமே ‘நோட்டா’ என்றால் என்ன? இந்தப்படத்திற்கு அப்படியொரு பெயர் வைத்ததால் இது அரசியல் படமாகதான் வரும் என்றெல்லாம் பேசிவிட்டு அமர, ‘நோட்டா’ என்றாலே பளிச்சென
ஞாபகத்தில் வரும் பி.ஜே.பியையும், அக்கட்சியின் போர்வாள் எச்.ராஜாவையும் பற்றி துளி கூட டச் பண்ணாமல் உட்கார்ந்தார் சத்யராஜ். அதுதான் பலருக்கும் பலத்த ஏமாற்றம். சாவு வீட்டுக்குப் போனால் கூட, சாதி… பெரியார்… என்று பேச மறக்காத சத்யராஜ், இப்படியொரு மேடை கிடைத்த பின்பும் மவுன சாமியாராக இருந்தது ஏன்?

விசாரித்தால், பகீரென இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் சத்யராஜும் நெருங்கிய உறவினர்கள். உறவினர் நடத்துகிற நிகழ்ச்சியில் அரசியல் பேசி, அது சொந்தத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால் என்னாவது என்பதால்தான் மவுனம் காத்தாராம் புரட்சித்தமிழன்.

ஆஹா… எந்நேரமும் விழிப்போட இருக்கிற இந்த புரட்சிதான், இந்தியாவின் யுகப்புரட்சி!

Leave A Reply

Your email address will not be published.