234 தொகுதியிலும் தனித்துப் போட்டி! சீமான் அறிவிப்பு

0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும். இந்தப் போட்டி தனிப் போட்டியாக இருக்கும். சட்டசபைத் தேர்தலுக்காக திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.

சட்டசபைத் தேர்தலில் பெண்கள், திருநங்கைகளுக்கு எங்கள் கட்சியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். வரும் 24ம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்படும். திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று மக்கள் நினைத்ததால் தேமுதிகவுக்கு 8 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. 2016 சட்டசபைத் தேர்தல் எங்களுக்கான ஒரு தகுதி தேர்வு. எனினும் 2021 சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் தன் தம்பி மகனின் திருமண அழைப்பிதழை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வழங்கிவருகிறார். இதை அரசியல் பண்பாடாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதையே சட்டசபைத் தேர்தலுக்கான ஒரு கூட்டணியாக எடுத்துக் கொள்ளவே முடியாது. அரசியல் பண்பாடு என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தபோது அதையும் வரவேற்றோம். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதையும் நாங்கள் வரவேற்கிறோம். கோர்ட் நடவடிக்கையை நாங்கள் விமர்சிப்பது இல்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.