ஒரே விஷயம்! சீனு ராமசாமி, சமுத்திரக்கனி எண்ணங்கள் என்ன?

0

மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பெயரில் ஒரு நினைவு மண்டபமோ, அட்லீஸ்ட் சென்னையின் ஏதாவது ஒரு தெருவுக்கோ அவர் பெயரை வைக்கவில்லையே? அவரது உண்மையான சிஷ்யர்களில் ஒருவரான நீங்க கூட அது பற்றி கோரிக்கை வைக்கலையே? என்று சமுத்திரக்கனியிடம் விசாரித்தால், வந்த பதில் வேறாக இருக்கிறது. “ஒரு படைப்பாளியை நினைவு கொள்ளணும்னா ஏதாவது ஒரு தெருவுக்கு பேர் வச்சா மட்டும் போதுமா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் எழுதி வச்சுட்டு போன கதைகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் படமாக்கி அவரது பெயரை அழியாமல் வச்சுருப்போம். ஒரு கலைஞனா என்னால் இதுதான் செய்ய முடியும். அதை விட்டுட்டு, அரசாங்கத்துகிட்ட மனு போடுவது எனக்கு சரிவராத ஒன்று” என்றார்.

கிட்டதட்ட இதே மாதிரி மனநிலையில்தான் இருக்கிறார் பாலுமகேந்திராவின் சிஷ்யரான சீனு ராமசாமியும். பாலுமகேந்திராவின் பயிற்சி பட்டறையை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடி கட்டிடம் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அவரது கனவாக துவங்கப்பட்ட பயிற்சி பட்டறை இதனால் என்னாகுமோ என்ற அச்சம் அவரது சிஷ்யர்களில் சிலருக்கு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்துக்கள் உலா வரும் நிலையில், சீனு ராமசாமி என்ன சொல்கிறார்?

“அவரது சொத்துகளை கையாள்கிற உரிமை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே உண்டு. அதில் தலையிடுகிற உரிமை வேறு யாருக்கும் இல்லை. அதே நேரத்தில் அவரது புகழையும் பெருமையையும் சிஷ்யர்களாகிய நாங்கள் எங்கள் படைப்புகளில் காண்பிப்போம். அதுதான் அவருக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன்” என்கிறார்.

சிஷ்யர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. குருவின் ஆத்மாக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

Leave A Reply

Your email address will not be published.