போட்டோவா இது, போங்க போங்க! தயாரிப்பாளர்களை கதறவிடும் சென்சார்!

0

ஒன்பது கிரகங்களும் ஒரே இடத்தில் நின்று மிரட்டுவது சினிமா தயாரிப்பாளர்களைதான் போலிருக்கிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி, தியேட்டர் கொள்ளை, வீடியோ பைரஸி, கேளிக்கை வரி என்று கிடுகிடுத்துப் போயிருக்கும் இவர்களைதான் சென்சார் அமைப்பும் செவுளில் அறைந்து சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறது. அதிலும் தமிழ் படங்களுக்கென நேர்ந்துவிடப் பட்டிருக்கும் ஒரு அதிகாரி, என்ன காரணத்தாலோ இவர்களை நையப் புடைப்பதால் கண்ட இடத்திலிருந்தும் கண்ணீர் ஒழுக ஆரம்பித்திருக்கிறார்கள் புரட்யூசர்ஸ்.

முன்பெல்லாம் படத்தை பார்த்தவுடன் இதை நறுக்கு, அதை சுறுக்கு என்று டென்ஷன் கொடுத்து வந்தவர், இப்போது இன்னும் வசமாக கசக்குகிறாராம். காரணம் ஆதார். முன்பு போலில்லை இப்போது. சென்சாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், ஆன் லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் ஆதாரங்களில் முக்கியமானதாக ஆதார் அட்டையும் இருக்க வேண்டும். அப்படி வரும் ஆதார் அட்டைகளில் இருக்கும் போட்டோவை பார்க்கும் அதிகாரி, “இந்த படத்திலிருக்கிறது உங்கள மாதிரியில்லே. போய் வேற ஆதார் எடுத்துட்டு வாங்க” என்கிறாராம். (எடுத்தாலும் அடுத்த நாளே கிடைச்சுருமாக்கும்?)

மத்திய அரசும் சரி. மாநில அரசும் சரி. தருகிற போட்டோ அடையாள அட்டைகளின் லட்சணம் என்ன மாதிரி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கல்யாணத்திற்கு பெண் தேடுகிறவர்கள் ஆதார் அட்டையோ, வாக்காளர் அட்டையோதான் தர வேண்டும் என்று வருங்கால மாமனார்கள் கேட்டால், நாட்டில் ஒருவருக்கும் கல்யாணமே நடக்காது. அப்படியிருக்கும் அதிலிருக்கும் போட்டோக்கள். இந்த சின்ன உண்மை கூட புரியாமல் விரட்டும் இவரையெல்லாம் வைத்துக் கொண்டு எப்படிதான் கரையேறுவார்கள் தயாரிப்பாளர்கள்?

பின்குறிப்பு- சமீபத்தில் இந்த பிரச்சனையில் உச்சக்கட்ட கொதிப்புக்கு ஆளான ஒரு தயாரிப்பாளர் இவரை அடிக்கவே போய்விட்டாராம். சினிமா என்ன கதியை நோக்கி போய் கொண்டிருக்கு பாருங்க?

Leave A Reply

Your email address will not be published.