தெய்வ மச்சானுக்காக தெருவுக்கு வந்த ஷங்கர்! தேவையா இந்த சிக்கல்?

0

மந்திரிகள் கூட அமைதியாக இருப்பார்கள். பக்கத்திலிருக்கிற ஜால்ராக்களுக்குதான் பல்லெல்லாம் சிங்கப்பல்லாக முளைக்கும். முறைக்கும்! அப்படிதான் “நான் டைரக்டர் ஷங்கரின் மச்சானாக்கும்” என்ற மிதப்பில் பத்திரிகையாளர்களை தாக்கி, சும்மா கிடந்த ஷங்கரை கொண்டு வந்து சூரைத்தேங்காய் உடைத்துவிட்டார் மிஸ்டர் பப்பு.

ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த பப்பு. முத்தெடுக்க மூழ்குகிறவன், கயிறை பிடித்து மேலே இழுக்கும் வேலையை எப்பவும் தன் மச்சான்களுக்கே கொடுப்பதுதான் தூத்துக்குடி முத்துக்குளியலின் ரகசியம். உள்ளே மூழ்கியவன் உரிய நேரத்தில் வெளியே வரணும் என்கிற பதற்றம் மற்றவர்களை விட மச்சான்களுக்கே அதிகம் இருக்கும் என்பதால்தான் இப்படி. ஆனால் ஷங்கரின் மச்சான், அவரை இன்னும் இன்னும் ஆபத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பார் போலிருக்கிறது.

திருவல்லிக்கேணி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கே? என்று தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்கள் இருவரை, படு பயங்கரமாக தாக்கி மேல் உதட்டை கிழித்துவிட்டாராம் இந்த பப்பு. அப்புறம் நிருபர்கள் புடைசூழ போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால், அங்கு புகாரை வாங்க தயங்கினார்களாம். மேலதிரிகாரியிடம் முறையிட்ட பின்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேற்படி பப்புவையும் இன்னும் சிலரையும் கைது செய்தது போலீஸ்.

அதற்குள் விஷயம் வீட்டுக்கு தெரியவர… வந்தா தம்பியோட வாங்க. இல்லேன்னா வரவே வராதீங்க என்று கட்டளை வந்ததாம் கிச்சன் கேபினெட்டிடமிருந்து. அப்புறமென்ன? டைரக்டர் ஷங்கரே சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்து பகிரங்க மன்னிப்பு கேட்டார். பெரிய மனதுடன் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள் மேற்படி பத்திரிகையாளர்கள். நல்லவேளை… சம்பவம் நடக்கும்போது அங்கு படத்தின் ஹீரோ ரஜினி இல்லை. இருந்திருந்தால்…? ஷங்கருக்கு ஏற்பட்ட சிக்கலில் பாதி அவர் தலையிலும் விடிந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.