இப்படியெல்லாம் பேச மனசு வேணும்… ஈகோ இல்லாத சித்தார்த்!

0

அமெரிக்காவிலிருந்து ‘காவிய தலைவன்’ இசை வெளியீட்டு விழாவுக்காகவே ஸ்பெஷலாக வந்திருந்தாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். நிகழ்ச்சி முடிந்து வேறொரு இடத்தில் பிரஸ்மீட். அங்கும் வந்திருந்தார் அவர். அங்குதான் ரஹ்மானின் பொன்னான நேரத்தில், பெட்ரோலை ஊற்றி தீக்குச்சிக் கொண்டிருந்தார்கள் ஒவ்வொருவரும்! தயாரிப்பாளர்களில் ஒருவரான வொய்நாட் சசிகாந்த் மைக்கை பிடித்து சுமார் முக்கால் மணி நேரம் உரைய்ய்ய்ய்யாற்ற…. பாதி பேர் ‘உறக்கமும் கண்களை தழுவட்டுமே’ ஆனார்கள். நல்லவேளை… பின்னாலேயே வந்த சித்தார்த் கலகலப்பாக பேசி, பிரஸ்மீட் உறக்கத்திற்கு பேய் ஓட்டினார். பணம் போட்டோம்ங்கறதுக்காக ஷுட்டிங் ஸ்பாட்டிலேயேயும் போய் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சா, படம் படமா வந்திருக்காது. பாவம் வசந்தபாலன்!

சரி, ‘காவிய தலைவன்’ பாடல்கள் எப்படி? ஏ.ஆர்.ரஹ்மானாச்சே? நம்மை அறுபதுகளுக்கு அந்த பக்கம் கூட்டிச் சென்றாலும், அதிலும் ஒரு சுகம் இருந்தது. சங்கரதாஸ் சுவாமிகள்தான் நாடக கலையின் வேந்தர். அவரது பெருமையை சொல்லியதுடன் இந்த படத்தின் மூலமாக நாடக கிங் கிட்டப்பா காலத்தையும் மீண்டும் கண் முன் கொண்டுவர போராடியிருக்கிறார் வசந்தபாலன் என்பது ஸ்பஷ்டமாக தெரிந்தது. அவ்வப்போது பேஸ்புக்கில் ‘இப்ப வர்ற நாலாந்திர சினிமாவால ஜனங்களோட டேஸ்ட்டே மாறிகிட்டு வருதே…’ என்று அவர் புலம்பியதற்கெல்லாம் இந்த படம் விடை சொல்லும் போலிருந்தது.

சித்தார்த்துடன் இன்னொரு ஹீரோவாக ப்ருத்விராஜ் நடித்திருக்கிறார். ‘இப்பவே சொல்லிட்டேன். படத்துல என்னை விட அவனுக்குதான் நல்ல பேர் கிடைக்கும். என் நண்பன் அவன். அவனுக்கு புகழும் பேரும் போய் சேர்ந்தா எனக்கு சந்தோஷம்தான்’ என்றார் சித்தார்த். ஈகோ நிறைந்த இந்த சினிமாவுலகத்தில் இப்படியெல்லாம் ஒரு ஹீரோ பேசுவதே ஆச்சர்யமாக இருந்தது. முன்னதாக பேசிய நாசர், ‘சித்தார்த்தும், ப்ருத்திவிராஜும் ஞான கர்வம் மிக்கவர்கள்னு கேள்விப்பட்டிருக்கேன். அவங்களோட சேர்ந்து நடிக்கறது எப்படியிருக்குமோன்னு யோசிச்சேன். பட்… ரொம்ப அற்புதமா இருந்திச்சு’ என்றார். இந்த படத்தில் சங்கரதாஸ் சுவாமி கேரக்டர் இவருக்குதானாம்.

இதுபோன்ற பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் முதுகெலும்புக்கு மட்டும் ஆயிரம் ஐயோடெக்ஸ் டப்பாக்கள் தேவைப்படும். முதுகு ஒடிந்து முட்டி தேய்கிற அளவுக்கு உழைத்திருப்பார் போல… ஆனால் ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் பேச்சில் அந்த கர்வமும் களைப்பும் தெரியாவிட்டாலும், நமக்கு காட்டப்பட்ட மூன்று பாடல் காட்சிகளிலேயே அவரது உழைப்பு தெரிந்தது. அனைகா, வேதிகா ஆகிய இருவரும் சித்தார்த் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் காட்சிகளை விட பிரமிப்பான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார் டைரக்டர் வசந்தபாலன். வேறொன்றுமில்லை, காவிய தலைவன் படத்திற்கு வசனம் எழுதுவதற்காக ஜெயமோகனை சந்தித்தாராம். கதையை சொல்லிவிட்டு வந்த இரண்டாம் நாள் முழு ஸ்கிரிப்ட்டும் வந்து சேர்ந்ததாம் அவரிடமிருந்து. ‘நான் வியக்கும் எழுத்து ராட்சசன் அவர் ’ என்றார் வசந்தபாலன். இரண்டு நாட்களில் ஒரு படத்திற்கு வசனம்! ஒரு மணி நேரத்தில் ஒரு பெரிய நாடகத்திற்கு வசனங்களையும் பாடல்களையும் வடித்த சங்கரதாஸ் சுவாமிகளின் கதையை எழுத உட்கார்ந்தால், அந்த அசுர பலம் வந்து சேரும்தானே? அதிலென்ன வியப்பு!

Leave A Reply

Your email address will not be published.