சிம்பு என்றொரு நட்பாளன்!

0

நேற்றொரு ‘அன் நோன்’ கால்! அசுவாரஸ்யமாக அட்டர்ன் செய்தால், எதிர்முனையில் கேட்ட குரல், எங்கேயோ கேட்ட குரல் அல்ல. எப்போதும் சினிமாவிலும் டி.வியிலும் கேட்கும் குரல்தான். சிம்பு…!

“அண்ணே… சிம்பு பேசுறேன். நல்லாயிருக்கீங்களா?”

சிம்பு அரை டிராயர் பையனாக இருக்கும் போது நான் பந்து போட, அந்த பெரிய காம்பவுன்ட் கேட்டுக்குள் அவர் கிரிக்கெட் விளையாடிய அந்த நாட்கள் சட்டென கண் முன் வந்து போனது. அதற்கப்புறம் சிம்பு டாப் டென் ஹீரோக்களில் ஒருவரான பின்பு, ஆங்காங்கே சில இடங்களில் சந்தித்திருக்கிறோம். அரை நிமிஷங்கள் தாண்டாத சந்திப்பு. வழக்கமான புன் சிரிப்புடன் “அண்ணே நல்லாயிருக்கீங்களா?” என்று கடந்து போயிருக்கிறார்.

ஆனால் ஒரு நிருபராக அவரை பலமுறை ‘தட்டி’ வந்திருக்கிறேன். அவருக்காக பலர் பலமுறை பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர் பேசியதில்லை.

“அண்ணே… உங்க வலைப்பேச்சு யூ ட்யூப் சேனல் பார்க்குறேன். நல்லாயிருக்கு” ( https://www.youtube.com/valaipechu ) என்றவர் அதுகுறித்து சில நிமிடங்கள் பேசினார். இவ்வளவு பிஸி(?) க்கு நடுவில் அவர் சேனலை பார்த்ததே ஆச்சர்யம். அதில் இப்படி செய்யலாம். அப்படி செய்யலாம் என்று ஆலோசனைகள் சொன்னது அதைவிட ஆச்சர்யம். கிட்டதட்ட எல்லா வீடியோக்களையுமே அவர் பார்த்திருக்கிறார் என்பது புரிந்தது.

அதற்கப்புறம் சிம்பு பேசியதுதான் அவரது தனி குணத்திற்கான அடையாளம். நிஜமாகவே பிரமித்துப் போனேன். “அண்ணே… என் மேல இருக்கிற கோவத்தை ஏன் சந்தானத்து மேல காட்றீங்க? அவன் நல்லவண்ணே. விட்ருங்க. என்னை பற்றி எவ்வளவோ எழுதியிருக்கீங்க. ஒருமுறை கூட நான் ஏண்ணே இப்படி எழுதறீங்க என்று கேட்ருக்கேனா? ஏன்னா என் மேலயும் தவறுகள் இருக்கு. என்னை பற்றி என்ன எழுதினாலும் அதை ஈஸியா எடுத்துக்குற அளவுக்கு மனப்பக்குவத்தை எனக்கு இறைவன் கொடுத்துருக்கான். ஆனால் சந்தானம் அப்படியில்ல. நிறைய கஷ்டப்பட்டு ஒரு இடத்தை பிடிக்க போராடிகிட்டு இருக்கான். அவன் நல்லா வரணும்” என்றார் உணர்ச்சி பொங்க.

“உங்க மேல எனக்கு கோபம் இல்லை. ஆனால் வருத்தம் உண்டு” என்றேன். அதே நேரத்தில் சந்தானம் பற்றி எழுதப்படுகிற விஷயங்கள் நிச்சயம் சிம்பு மீதுள்ள வருத்தத்தால் எழுதப்பட்டது அல்ல என்பதை அவருக்கு புரிய வைத்தேன்.

சட்டென புரிந்து கொண்டார். எனி வே… சந்தானத்தின் மீதான நட்புக்கு சிம்பு கொடுக்கிற மரியாதையை, அவரது தொலைபேசி அழைப்புக்கு நானும் கொடுக்க வேண்டுமல்லவா?

ஓடங்களின் வேலை கரை சேர்ப்பதுதான். சந்தானத்திற்கு சிம்பு, ஓடமாகவும் துடுப்பாகவும் இருப்பது ஆச்சர்யம் மட்டுமில்ல. சினிமா நட்புகளுக்கு ஒரு முன் மாதிரியும் கூட!

அந்த நட்புக்கு குறுக்கே ஒரு நயன்தாராவோ, ஹன்சிகாவோ வராத வரைக்கும் நல்லது! என் பிரார்த்தனையும் அதுவே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.