சிங்கம் 3 – விமர்சனம்

0

ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது. அப்புறமென்ன? ஆயிரம் கால் பாய்ச்சல் போட்டிருக்கிறார் ஹரி. கடந்த சில வருஷங்களாகவே காக்கியின் ஜாக்கியாக உலா வரும் ஹரி, இந்தப்படத்திலும் போலீசின் கம்பீரத்தைதான் நம்பியிருக்கிறார். ஆனால் ஒன்று… கலர் மாறாத காக்கியும், காக்கி மாறாத கதையும் சற்றே அலுப்பு தருவதால் மிஸ்டர் ஹரி… நடுவுல கொஞ்சம் பக்கத்தை மாற்றுங்க!

தூத்துக்குடி துரைசிங்கம், இப்போது ஆந்திரா கவர்மென்ட்டின் அழைப்பை ஏற்று அங்கே கிளம்புகிறார். போன இடத்தில் போலீஸ் அதிகாரியை போட்டுத் தள்ளிய ஆளை கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம். வால் பிடித்துக் கொண்டே போனால், முடிவு ஆஸ்திரேலியாவில் போய் நிற்கிறது. சிட்னி வரைக்கும் டிராவல் பண்ணி, எதிராளியை சட்னி பண்ணும் வேலை நம்ம துரை சிங்கத்திற்கு. எச்சில் முழுங்கினால் கூட, இடியை செரித்தது போலவே இருக்கிறார் சூர்யா. கடைசிவரை தன் கம்பீரத்தால் தியேட்டரை கட்டிப் போடுகிற அவரது ஆளுமைக்கு மொத்த தியேட்டரும் சரண்டர்! சண்டைக்காட்சிகளில் ‘புயல் விழுங்கி’ பூதலிங்கமாகி டெரர் கிளப்புகிறார். காதல் காட்சியை கூட கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளும் இயக்குனரால், வெளிநாட்டில் ஆடும் சில டூயட்டுகளில் மட்டும்தான் ரெஸ்ட் தரப்படுகிறது சூர்யாவுக்கு. மற்றபடி நாடி, நரம்பு, சதை, நகம் என்று அத்தனை பார்ட்களையும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார் சூர்யா.

இதில் அனுஷ்கா யார்? ஸ்ருதி யார்? என்பதுதான் நடுவே நுழைக்கவே சிரமப்படும் லவ் ஏரியா. சிங்கம் 2 வில் சூர்யாவுடன் கல்யாணம் ஆன அனுஷ்கா, இந்தப்படத்தில் கரெக்டாக வந்து பிட்டிங் ஆகிக்கொள்கிறார். சூர்யாவை டைவர்சி என்று நம்பி, மனசை பறி கொடுக்கும் ஸ்ருதி அப்புறம் அழையா விருந்தாளியாக இந்த அதிகாரியின் ஏரியாவுக்குள் நடமாடுவதும், வில்லன்களிடம் சிக்கி சிராய்ப்புக்கு ஆளாவதும் பெரிசாக நோக விடவில்லை. பட்… அவரது கவர் ஸ்டோரியால் கலங்கி, அதற்கப்புறம் சூர்யா நடத்தும் அந்த அதிரடி ஆபரேஷனில் புல்லட் வேகம். அப்படியொரு ஆபிசர் எப்பவும் எங்கும் வேணும் என்று தியேட்டரை ஏங்க விடுகிறார்.

அனுஷ்காவுக்கு கால் கட்டுப் போட வேண்டிய பருவம் தாண்டியாச்சு என்பதை இப்படம் பார்த்தபின்புதான் உணர்ந்து கொள்ளும் அவரது குடும்பம். சற்றேயல்ல…. சரியான புஷ்டி பூனையாகிவிட்டார் அவர். இருந்தாலும், காதலிப்பதற்கு கண் போதுமே? அநியாயத்துக்கு பேசுகிறது அது.

லொட லொட பேச்சும், தொள தொள ஷர்ட்டுமாக வந்து சூரியை காலி பண்ணுகிறார் ஸ்ருதிஹாசன். இவர் சீரியஸ்சாக அழுகிற காட்சிகளில், அதைவிட சீரியஸ் ஆக சிரிக்கிறது தியேட்டர். ஸ்ருதியை சொந்தக்குரலில் பேச வைத்த தைரியத்திற்காக தனியாக ஒரு மெடல் குத்தலாம் ஹரிக்கு.

சூரியும், ரோபோ சங்கரும் காமெடி என்றாலும், இருவருமே திக்கி திணறி திடுக்கிட வைக்கிறார்கள். ஆமா… படம் போற வேகத்தில இவங்களுக்கெல்லாமா முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்று நினைத்திருக்கலாம். வெட்டியா கிடக்கிற பனை ஓலையை லட்டியால தட்டுன மாதிரிதான் இருக்கிறது இவர்களின் எபிசோட்!

ராதிகா, ராதாரவி, ஜோ மல்லூரி என்று சுமார் ஒரு டஜன் பெரிய நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும், துளியூண்டு கேரக்டர்களில் வந்து போகிறார்கள். அந்த வில்லன் மட்டும் மதன்மித்ரா விளம்பர மாடல் போல சிலுப்பிக் கொண்டு நிற்கிறார். ஆஸ்திரேயாவுக்கே போய் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சூர்யா, எதிர்பாராத விதத்தில் வில்லனை அலற விடுவதும், அதே வில்லன் இந்தியாவுக்கே தேடி வந்து உதை வாங்குவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஏரியா.

இசை ஹாரிஸ் ஜெயராஜ். நல்லவேளை… டைட்டிலை கவனித்ததால் அறிய முடிந்தது. இவரது சம்பளத்தில் பாதியை பிடுங்கி இப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு கொடுத்தால், ஜெல்யூசிலுக்கு அவசியப்படாமல் செரிக்கும்!

திரைக்கதைதான் ஓட வேண்டுமே தவிர, திரை அல்ல என்கிற தத்துவத்தை சற்றே அலட்சியப்படுத்தி, திரையையும் ஃபார்ஸ்ட் பார்வேடு ஆக்குகிறார் ஹரி. கடந்த சில படங்களாக மன வேகத்தை விட வேகமாக ஓட வேண்டும் என்று நினைத்து அதையே ஒரு ஸ்டைலாக பின்பற்றுவது நல்லதா, கெட்டதா? புரியல சார். அப்புறம் அந்த கிராபிக்ஸ் சிங்கம்…? மிடியல!

சிங்கம் 4 வந்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்குள் வேறொரு திரைக்கதை ஸ்டைலை பழகிக் கொண்டால் ஹரியின் துரை சிங்கத்தை நாலாவது முறையும் தரிசிக்க நாங்க ரெடி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.