கதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்
ஓவரா நடிச்சா சிவாஜி, ஒலக்கையேன்னு நடிச்சா பவர் ஸ்டாரு… இப்படிதான் நடிகர்களை எடை போட்டு வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரி. நகைக் கடை தராசு மாதிரி துல்லிய நடிப்பும், வல்லிய நுணுக்கமும் கொண்ட நடிகர்களைதான் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். டாப் டென் ஹீரோக்கள் வரிசை சுருங்கி விரிந்து சூட்சுமம் காட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில், படக்கென்று உள்ளே வந்து சடக்கென்று சப்பணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
நெஞ்சம் மறப்பதில்லை படம் காப்பாற்றப்பட்டதற்கு ஒரே காரணம், எஸ்.ஜே.சூர்யாதான். பின்னாலேயே வரப்போகிற மாநாடு, நெ.ம வுக்கு சற்றும் குறைச்சலில்லாமல் எஸ்.ஜே.சூர்யாவின் புகழ் தட்டில் மேலும் ஒரு லட்டுவை வைத்துவிட்டு போகும் என்பதிலும் டவுட் இல்லை.
இந்த நேரத்தில் அவரை லபக்கென அமுக்கி, லம்ப்பாக கொஞ்சம் அட்வான்சை கொடுத்து வைக்கலாம் என்று ஆலாய் பறக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எல்லாருக்கும் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் பதில் என்ன தெரியுமா? “அவசரப்படாதீங்க. எனக்கே சொந்தமா ஒரு நோக்கம் இருக்கு. அதை முடிச்சுட்டு வந்திடுறேன்“ என்பதுதான்.
அதென்ன சொந்த நோக்கம்? கில்லர் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் ரெடி. பேன் இண்டியா மூவியாக இதை கொண்டுவரப் போகிறார் அவர். அவரே நடித்து, அவரே இயக்கப் போகிறாராம். படா படா பாக்கெட் உள்ளவர்கள் எஸ்.ஜே.சூர்யாவை அணுகினால், இன்னும் ஆறேழு மாதத்தில் வல்லிய படம் ஒன்றை கொண்டு வருகிற யோகம் கிட்டும்.
பட்ஜெட்டுக்கு அஞ்சாத பாண்டிய மன்னர்கள், எஸ்.ஜே.சூர்யா வீட்டுக் கதவை எந்த நேரத்திலும் தட்டலாம்…