விஜய்யை சுற்றி புகை மூட்டம்!

வில்லுக்கு விஜயன்! விவகாரங்களுக்கு விஜய்!!

இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பித்தால் அந்த விஜய் ரசிகர்களே கூட கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ‘பிடறி சிங்கம் இடறி விழுமா?’ என்று காத்திருப்பது யார்? அது போகிற வழியில் புதைகுழியை தோண்டி வைத்திருப்பது யார் யார்? என்றெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.

தமிழகத்தில் இதற்கு முன் எந்த சினிமா ஹீரோவுக்கும் நடந்தேயிராத தொடர் அழுத்தம் விஜய்க்கு மட்டுமே தரப்படுகிறது. தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் விஜய் படம் வெளிவருகிற போதெல்லாம் வழியெங்கும் ஸ்பீட் பிரேக்கர்கள். ஒவ்வொன்றும் சீனப் பெருஞ்சுவரையே சின்னதாக்குகிற அளவுக்கு என்றால், அந்த விஜய்தான் என்ன செய்வார்?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தமிழகத்தின் பார்வை ‘சர்கார்’ படத்தின் மீதுதான் குவிந்து கிடக்கிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் புகைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். அது வெளியான சில மணி நேரத்திலேயே முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்தார். உடனடியாக அந்த போஸ்டரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கப்புறம் நடந்த கதையைதான் நாடு அறியுமே?

படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ், அதில் நடித்த விஜய், இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மூவரும் தலா பத்து கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு இன்னும் வரவில்லை.

‘அழகிய தமிழ் மகன்’ படத்திலும் இதே போலொரு பிரச்சனை வந்து அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு அறிக்கையை வெளியிட்டார் விஜய். அதில் “இனி நான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். வார்த்தை தவறி விட்டார் விஜய் என்றாலும், முப்பது கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு இது முற்றிப்போன குற்றமல்ல!

இந்த பிரச்சனை ஸ்டார்ட் ஆன நாளிலிருந்தே சோஷியல் மீடியாவில் குமுறி வரும் பல்லாயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள், “நாங்கள் விஜய் ரசிகர்கள்தான். ஆனால் சிகரெட் குடிப்பவர்கள் அல்ல” என்று தன்னிலை விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

விஜய்யின் அதி தீவிர ரசிகர்கள் மட்டும், ‘குடிசை கொளுத்தி’ என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி அதில் மருத்துவர்கள் இருவரையும் இயன்றளவுக்கு ‘டேமேஜ்’ பண்ணிய அதிர்ச்சியும் நடந்தது.

இந்த நிமிஷம் வரைக்கும் இது தொடர்பாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை விஜய். இதுதான் அவரது வயதுக்கு மீறிய அறிவு முதிர்ச்சி என்கிறார்கள் திரையுலகத்தில். இந்த படத்திற்கு மட்டுமல்ல… இதற்கு முன் அவர் சந்தித்த எந்த பிரச்சனைக்கும் அவர் பெரிதாக எதிர்ப்பு காட்டியதில்லை. இன்று ‘சர்கார்’ படத்தை தயாரித்து வரும் இதே சன் பிக்சர்ஸ், முன்பு விஜய்யின் படம் ஒன்றை வெளியிடுவதற்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது. பொறுமையை சோதிக்கிற அளவுக்கு நிகழ்த்தப்பட்ட அந்த கால தாமதத்தின் போது கூட, அமைதி காத்தாரே ஒழிய ஆவேசப்பட்டதில்லை விஜய்.

‘தலைவா’ பட வெளியீட்டின் போது ‘டைம் டூ லீட்’ என்ற ஒரு சப் டைட்டிலுக்காக அந்தப்படம் சந்தித்த கொடுமை, வேறு எந்த ஹீரோக்களின் படங்களுக்கும் நிகழக் கூடாத அபாயம். தமிழகம் தவிர உலக நாடுகள் முழுக்க படம் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மட்டும் சில நாட்கள் கழித்துதான் வெளியிட முடிந்தது. யாருடைய தூண்டுதலின் பேரில் நாலாபுறத்திலிருந்தும் நசுக்கப்பட்டார் விஜய் என்கிற விபரம் அறிந்தும் வேறு கட்சிகள் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ‘தலைவா’ தியேட்டருக்கு வருவதற்குள் முக்கால்வாசி தமிழர்கள் அப்படத்தை பைரஸியில் கண்டு களித்திருந்தார்கள். படம் அவுட்! கலெக்ஷனும் அவுட்! அப்போதும் வாய் திறக்கவில்லை விஜய்.

விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனை! அதில் ‘கத்தி’ படம்தான் லட்டு போல சிக்கியது எதிராளிகளுக்கு. “இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் தொழில் பார்ட்னருக்கு சொந்தமான நிறுவனம் லைக்கா. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட விட மாட்டோம்” என்று ரவுண்டு கட்டினார்கள். விஜய்க்கு மட்டுமல்ல… ஒட்டு மொத்த தமிழகத்திற்கே தெரியும்… பிரச்சனை லைக்கா அல்ல என்று! அதற்கப்புறம் லைக்கா ஏராளமான படங்களை தயாரித்தது. எதற்கும் வாயை திறக்கவில்லை திடீர் போராளிகள்.

தமிழகத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களில் விஜய்யின் விலங்குகள் தானாகவே அகன்றுவிட்டன என்று நினைத்த அவரது ரசிகர்களுக்கு… பெருத்த ஏமாற்றமே! மெர்சலில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனங்கள் மத்திய அரசின் கோபத்தை கிளறியது. நாடெங்கிலும் அப்படத்தை வெளியிட்ட தியேட்டர்காரர்களே அரண்டு போகிற அளவுக்கு போனது அச்சுறுத்தல். அப்போதும் வாய் திறக்கவில்லை விஜய். மாறாக அவர் செய்ததும்… செய்து வருவதும் ஒன்றே ஒன்றுதான்!

மக்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வது! அதை அவர் ஆத்மார்த்தமாக செய்கிறாரா? அல்லது வருங்கால அரசியல் வளர்ச்சிக்காக செய்கிறாரா? என்கிற பெரும் கேள்வி எழுந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் விஜய்யின் செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆரவார ஆரத்தியே!

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட பின் ஒரு அதிகாலை நேரத்தில் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் அனிதாவின் வீட்டுக்குப் போய் நின்றார் விஜய். நீட் தேர்வுக்கு எதிரான விஜய்யின் மன நிலையாகவே பார்க்கப்பட்டது அந்த சம்பவம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதே நள்ளிரவில் அவர் போய் நின்றது உலகம் முழுக்க வாழும் விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. துக்கம் தழுவிய முகத்தோடு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பண உதவியும் செய்துவிட்டு திரும்பினார் விஜய். துப்பாக்கி சூட்டுக்கு அவர் செலுத்தும் கண்டனமாகவே பார்க்கப்பட்டது அந்த தூத்துக்குடி வருகை!

இந்த இரு நிகழ்விலும் அவர் துளி கூட கூட்டம் சேர்க்கவில்லை. கோஷங்களை அனுமதிக்கவில்லை. நாடே நேரில் பார்க்க ஆசைப்படுகிற ஒரு ஸ்டார், நள்ளிரவில் தகுந்த பாதுகாப்பு கூட இல்லாமல் போவது எவ்வளவு பெரிய ரிஸ்க்? அதற்கு துணிந்த விஜய், இதையெல்லாம் அரசியலுக்காக மட்டுமே செய்கிறார் என்றால், அந்த கருத்து முற்றிலும் சரியல்ல என்பதே பலரது பார்வையாக இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தன் ரசிகர்களை ஒன்று திரட்டி இயக்கமாக மாற்றிய விஜய், அதற்கப்புறம் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் கூட அந்த அமைப்பை சப்தமின்றி வலுவூட்டிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் இவ்விரு தலைவர்களும் வழிவிட்ட பின், பகிரங்கமாக இறங்கிவிட வேண்டியதுதானே?

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனே அதற்கு விரும்பிய போதும், ‘இது நேரமில்ல…’ என்று விஜய் தள்ளிப் போடுவதன் ரகசியம் என்ன?

விஜயகாந்த், சரத்குமார் போன்ற சினிமா ஹீரோக்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரது ‘சினிமா டூ அரசியல்’ பயணம் ‘கைடு’ ஆக இருந்தது.

அதற்கப்புறம் ரஜினியும் கமலும் புயல் வேகத்தில் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார்கள். கண் எதிரே ஓடுகிற ட்ரெய்லரே இப்போது இவ்விருவரும்தான். விஜய் தினந்தோறும் இந்த ட்ரெய்லரை கவனித்து வருகிறார். இவருக்கு ‘முன் பாடமாக’ இருக்கப் போவதே இவ்விருவரும்தான்.

இவர்களுக்கு மக்கள் தரப்போவது பரிசா, பாடமா என்பதை வைத்துதான் விஜய்யின் அரசியல் மூவ் இருக்கும்!

அதுவரைக்கும் எந்த ‘சர்க்கார்’ வந்தாலும் விஜய்யை சுற்றியே ‘புகை’ மூட்டம் இருக்கும்!

நன்றி- கல்கி வார இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை

1 Comment
  1. சீலன் says

    Super,

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Seethakaathi – The Making Video of Ayya

https://www.youtube.com/watch?v=up340-rLgAU&feature=youtu.be

Close