தியேட்டர் அமைப்புகள் திடீர் ஸ்டிரைக்! முறியடிப்பாரா விஷால்?

0

ஒருமித்த கருத்து இல்லாத தயாரிப்பாளர்கள் தானும் செயல்படாமல், செயல்பட முன்வரும் தலைவர்களையும் செயல்பட விடாமல் தடுத்து தடுத்தே தமிழ்சினிமா வியாபாரத்தை உருப்படாமல் ஆக்கிவிட்டார்கள். இன்று படம் எடுக்கிற எந்த தயாரிப்பாளரும் நிம்மதியாக இல்லாமல் போனது சில பழம் பெருச்சாளிகளால்தான். இப்போதும் கூட பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற விஷாலை செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அதன் விளைவைதான் குழப்பம் என்ற பெயரில் சில தினங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் ஏழு படங்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற நோக்கத்தில் திடீர் ‘தியேட்டர் மூடல்’ நாடகத்தை அரங்கேற்றிவிட்டது அபிராமிராமநாதன், திருப்பூர் சுப்ரமணியன் தலைமையிலான அமைப்பு. இந்த தன்னிச்சையான முடிவுக்கு பின் தயாரிப்பாளர் சங்க அவசரக்கூட்டத்தை கூட்டிய விஷால் எடுத்த முடிவுகள் பழம் பெருச்சாளிகளுக்கு வைக்கப்பட்ட பொறி. அதில் சந்தேகமேயில்லை.

ஜுலை 3 ந் தேதி அபிராமி ராமநாதன் அறிவித்த ஸ்டிரைக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு தராது. மீறி ஸ்ரைக்கில் கலந்து கொள்ளும் திரையரங்கங்களுக்கு படங்கள் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. இதுதான் அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்தாலோசித்து இன்னொரு நாளில் ஸ்டிரைக் நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் அபிராமி தரப்பு.

ஒவ்வொரு முறையும் தியேட்டர்காரர்களின் மிரட்டலுக்கும், அவர்கள் காட்டும் பொய் கணக்குக்கும் தலையாட்டியே பழக்கப்பட்டது போதும். அதிரடியாக ஒரு திட்டம் வகுப்போம் என்று சில அதிதீவிர முடிவுகளை எடுத்து வருகிறாராம் விஷால். அது மட்டும் நடந்துவிட்டால், ஆதிக்கம் செலுத்துவோரின் பல் பிடுங்கப்படும். சினிமாவும் பிழைக்கும். சீக்கிரம் செய்ங்க விஷால்!

Leave A Reply

Your email address will not be published.