கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரணுக்கே மொட்டை? கறைபட்ட ஐங்கரன் கருணா!

காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த ரூபா மாதிரிப்பா… என்று பலரும் அவரது பணபலம் குறித்து பரவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கத்தி தயாரிப்பாளருக்கு போட்ட பணம் போனா கூட பரவாயில்ல. ஆனால் அல்லிராஜாவை புள்ளிராஜா ரேஞ்சுக்கு ஏமாத்துறாங்களே,… என்கிற குரல் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.

என்னவாம்? அவ்வளவு பிசியான நபரான அல்லிராஜா, தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் சென்னைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயமே தனக்கும் கத்திக்கு எதிராக இருப்பவர்களையும் ‘ஒரேயடியாக அமுக்குவது’தான்! அவர் நினைத்தபடியே முக்கியமான சந்திப்புகள் நிகழ்ந்தன. கத்திக்கு ஏதிரான கூர் மழுங்க வேண்டும் என்றால் எதிர்ப்பவர்கள் மயங்க வேண்டும். அதற்கான விஷயத்தை செய்யுங்க என்று இங்கிருக்கும் அவரது பார்ட்டனரான கருணாமூர்த்தி ஐடியா கொடுத்தாராம்.

கோடிக்கணக்கான பணத்தை அவருக்கு டிரான்ஸ்பர் செய்தாராம் அல்லிராஜாவும். ஆனால்…. மொத்த பணத்தையும் தன் சிஷ்யகோடிகளுடன் சேர்ந்து அடித்துவிட்டாராம் கருணா. (ஹ்ம்ம்… பார்ட்னரிடமே பகல் கொள்ளை) இப்படியொரு உர்ஜிதமில்லாத தகவலை வெளியே பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில். அதை நிருபிப்பது போலவே கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறின.

இது ஒரு புறமிருக்க, சுபாஷ்கரணுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே இருக்கும் தொடர்புகளை மீண்டும் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அதில் சில புதிய ஆதாரங்களும் அடக்கம். (அந்த ஆதாரங்கள் கீழே) ‘ஏம்ப்பா… அவ்வளவு கொடுத்தேனே, மொத்தத்தையும் முழுங்கிட்டீங்களா? பிறகு ஏன் இப்படி மறுபடியும் பூதம் கிளம்புது?’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் சுபாஷ்கரண். அவரு இதெல்லாம் ஃபாலோ பண்ண மாட்டாருப்பா என்று அலட்சியம் காட்டிய கருணாவும் சிஷ்ய கோடிகளும் இப்போது என்ன பதில் சொல்வதென திகைக்கிறார்களாம்.

இதற்கான ஆதாரங்கள்:

ராஜபக்சேவின் சகோதரி ஜெயந்தி ராஜபக்சேவின் மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி. இவர் ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். 2007ஆம் ஆண்டு ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் 95% பங்குகள் லைக்கா குழுமத்தின் தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் 5% பங்குகளை வைத்திருக்கும் ராஜபக்சேவின் மைத்துனரே ஸ்கை நெட் வொர்க்கின் இயக்குநராகவும் நீடிக்கிறார். அதன் பின்னர் ஸ்கை நெட் ஒர்க் குழுமத்தின் போர்டு மெம்பர்களாக் ,

லைக்காவின் மிலிந்த் காங்லி (சி.இ.ஓ லைக்கா), கிறிஸ்டோபர் டூலே, ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி ஆகிய மூவர்தான் இடம்பெற்றுள்ளனர். அதாவது ஸ்கை நெட் ஒர்க்கும் லைக்காவும் 2008ஆம் ஆண்டே ஒரே நிறுவனமாகிவிட்டது. இதை இலங்கையில் இருந்து வெளியான சண்டே லீடர் பத்திரிகை 2008ஆம் ஆண்டு ஆதாரங்களுடன் வெளியிட்டது இதன் பின்னரே இந்த சண்டே லீடரின் ஆசிரியர் படுகொலை செய்யப்படுகிறார்.

2009ஆம் ஆண்டும் சண்டே லீடர் பத்திரிகையில் லைக்கா- ராஜபக்சே குடும்ப உறவு பற்றிய கட்டுரை வெளியானது அப்போது அதை எழுதிய செய்தியாளர் மர்ம நபர்களால் மிரட்டப்பட்டனர். இதன் பின்னர் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பது குறித்த சர்ச்சையின் போது லைக்கா- ராஜபக்சே குடும்ப உறவுகுறித்து சர்ச்சை வெடிக்கிறது. அப்போது கார்ப்பரேட் வாட்ச் என்ற இங்கிலாந்து அமைப்பு சண்டே லீடர் கட்டுரைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடுகிறது. அப்போது இங்கிலாந்தின் ஹப்பிங்டன்போஸ்ட்டிலும் லைக்கா – ராஜபக்சே குடும்ப உறவு தொடர்பான கட்டுரை வெளியானது. இதைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. டோம், அந்நாட்டு பிரதமர் கேமரூனுக்கு கடிதம் அனுப்பினார். அப்போது ஒட்டுமொத்த தமிழகமே காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தது. இதை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் ராஜபக்சே நடத்திய காமன்வெல்த் மாநாட்டுக்கு முட்டுக் கொடுத்தது இந்த பினாமி லைக்கா நிறுவனம்தான்.

காமன்வெல்த் மாநாட்டின் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சர் பெற்ற ஒரே ஒரு நிறுவனம் “ஈழத் தமிழர்” ஒருவரை தலைவராகக் கொண்ட லைக்கா நிறுவனம் என்பதுதான். இதே காமன்வெல்த் மாநாட்டில் ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பர்களில் ஒருவரும் லைக்காவின் சி.இ.ஓவுமான காங்லி பங்கேற்றார். தற்போது லைக்கா குழுமத்தின் சி.இ.ஓவாக இருப்பவர் கிறிஸ்டோபர் டூலே. அதாவது ராஜபக்சே மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பராக இருந்த நபர்தான் இப்போது லைக்காவின் சி.இ.ஓவாகிறார். ஒரே குழும நிறுவனம் என்பதாலே ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கில் இருந்த இருவரே இதுவரை லைக்காவின் சி.இ.ஓக்களாக நியமிக்கப்பட முடிகிறது. இதை அறிவித்ததும் இதே லைக்கா சுபாஷ்கரன். அத்துடன் டூலே குறித்து தனது லைக்கா இணையப் பக்கத்தில் குறிப்புகளை எழுதும் போது 2005-06ஆம் ஆண்டு காலம் வரை மட்டுமே அவரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்துடன் அவர் இணைந்தது குறித்து திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் லைக்காவின் சுபாஷ்கரன் ஒப்புக் கொண்ட ஒருவிஷயம் இலங்கை ஏர்லைன்ஸுடன் தமக்கு வர்த்தக தொடர்பு இருக்கிறது என்பதுதான். இலங்கை ஏர்லைன்ஸில் போர்டு ஆப் மெம்பர்களில் ஒருவர் சசீந்திர ராஜபக்சே. இவர் வேறுயாருமல்ல.. ராஜபக்சேவின் சகோதரர் சமல் ராஜபக்சசின் 2வது மகன். ஒட்டுமொத்தமாக ராஜபக்சே குடும்பத்தின் பினாமியாக மட்டுமே லைக்கா நிறுவனம் செயல்படுகிறது என்பதையே இவையெல்லாம் ஆதாரங்களாக காட்டுகின்றன தமிழர் அமைப்புகள்.

இதனால்தான் சுபாஷ்கரனால் இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் பயணிக்க முடிகிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானத்தை மீறும் வகையில் இலங்கையுடனும் ராஜபக்சே குடும்பத்துடனும் அனைத்து வர்த்தக உறவுகள் வைத்திருக்கும் லைக்காவின் தயாரிப்பான கத்தியை தடை செய்ய வேண்டும் என்று கோருவதாக கூறுகின்றனர் தமிழர் இயக்கங்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விதார்த்தை மகிழ வைத்த ஆள்

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான...

Close