சிந்திய வார்த்தைகள்! சிக்கலில் நடிகர்கள்!

0

சிந்திய வார்த்தைகளை திரும்ப அள்ள முடியாது. அவையெல்லாம் வாயால் சிந்திய வார்த்தைகள் என்றால் கூட பரவாயில்லை. அதைவிட கேவலம்!

தினமலர் இதழில் வந்த ஒரு செய்திக்காக 2009 ம் ஆண்டு கூடிய நடிகர் சங்கம், வெளிப்படையாக ஒரு கூட்டம் போட்டது. அங்கு தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் கேமிரா வெப்சைட்டுகளுக்கும் கூட அனுமதி அளிக்கப்பட்டிருந்ததுதான் நடிகர் சங்கம் செய்த மிகப்பெரிய முட்டாள் தனம். இவர்களின் பேச்சுக்கள் யாவும் படமாக பதிகிற அச்சம் துளி கூட இல்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி தீர்த்தார்கள் நடிகர்கள். முக்கியமாக விவேக்கும், சூர்யாவும்.

லட்சுமிகாந்தன் காலத்திலிருந்தே பிரஸ்சுக்கும் நடிகர்களுக்குமான பஞ்சாயத்து இருந்து வருகிறது. லட்சுமிகாந்தன் மீது ஆத்திரப்பட்ட தியாகராஜபாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போய் களி தின்ற கதையை இன்னும் கூட புத்தக வடிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அடுத்தடுத்த தலைமுறை. அந்த காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜபாகவதர், அதற்கப்புறம் சிறையை விட்டு வெளியே வந்து பிச்சை எடுத்து வாழ்ந்தார்.

அதற்கப்புறம் பல லட்சுமிகாந்தன்கள் வந்தார்கள். நடிகர் நடிகைகளின் கோபம் அவர்கள் மீது இருந்து கொண்டேயிருக்கிறது. அவ்வளவு ஏன்? ஜெயமணி என்ற நிருபர், ரஜினியை பற்றி ஓயாமல் எழுதிக் கொண்டேயிருந்தார். கடும் கோபமுற்ற ரஜினி, அவர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றார்.

மாப்ளே… மச்சான் என்று அழைத்துக் கொள்கிற அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கும் ஹீரோக்களுக்கும் உறவுகள் உண்டு. ஆனால் சில சமயங்களில் அந்த உறவின் மீது சாத்தான் தன் கெட்ட புத்தியால் உரசும். அதிலிருந்து தப்பித்துவிட்டால் உறவு தொடரும். இல்லையேல் டமால்தான்.

தினமலர் நிருபரை திட்டுகிறேன் பேர்வழி என்று தரம் தாழ்ந்து பேசிய விவேக்கை பல மாதங்களாக புறக்கணித்தது ஊடகம். அவர் பற்றிய செய்தியை வெளியிடாமலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களை புறக்கணித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். ‘தெரியாம பேசிட்டேன். என் வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’ என்று ஜகா வாங்கினார் சூர்யா. சேரன், சத்யராஜ் உள்ளிட்ட மற்ற ஆறு பேர் மீதும் தங்கள் கோபத்தை மெல்ல மெல்ல வாபஸ் வாங்கிக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.

ஆனால் சினிமா நிருபர்களை விட, அரசியல் நிருபர்களுக்கு சுரணை அதிகம். அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதில் ஒருவர்தான் நீலகிரி நீதிமன்றத்தில் இவர்கள் எட்டு பேர் மீதும் வழக்கு தொடர்ந்தார். பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருந்தார். தங்கள் அநாகரீக ஸ்பீச் தொடர்பாக போடப்பட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு இடைக்கால தடை வாங்கி வைத்திருந்தார்கள் நடிகர்கள். ஆனால் அந்த தடை எக்ஸ்பயரி ஆனது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத இந்த ஆறு பேரையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி. எப்பவோ பேசிய வார்த்தைகள். இப்போது ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது இவர்களை.

வேடிக்கை என்னவென்றால், அதே விவேக் இப்போது ஒரு சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் கவுரவ உறுப்பினர். காலம் சினிமா நிருபர்களை பக்குவப்படுத்தியிருக்கிறதா? அல்லது…?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.