எல்லாத்துக்கும் வர்ற டிஆரு இப்ப எங்கய்யா போனாரு?

1

டி.ராஜேந்தருக்கும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் திடீர் நட்பு மலர்ந்தது. மலர்ந்த அந்த நட்பு ‘புலி’ பட ரிலீஸ் பிரச்சனையின்போது வளர்ந்தது. அதற்கப்புறம் அதே செல்வகுமார் ரிலீஸ் பண்ணிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் போது கிளர்ந்தது. இன்றைய நிலவரம் என்ன? ‘கடைசியில் உலர்ந்தது’ என்றுதான் இந்தக் கதையை முடிக்க வேண்டும். புலி படம் ரிலீஸ் ஆகிற நாளில் இருந்தே பெரும் தலைவலியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் பி.டி.செல்வகுமார். ரிலீசுக்கு முதல் நாள் வருமான வரி சோதனை நடத்தப்பட, ஒரு பண பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் தவிப்புக்கு ஆளானது தயாரிப்பு தரப்பு. ஒருவழியாக உருண்டு புரண்டு படத்தை வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் லேபில் வந்து படத்தை வெளியிட பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார் டி.ராஜேந்தர்.

அந்த நட்பு போக்கிரிராஜா ரிலீஸ் சமயத்திலும் கூட உதவியது. “புலி பட நஷ்டத்தை கொடுத்துவிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ங்க” என்று குறுக்கே விழுந்து தடுத்த விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து பஞ்சாயத்தில் தொண்டை கிழிய கத்தி படத்தை வெளியிட உதவினார் டி.ஆர். அதற்கப்புறமும் அவரை போகிற இடத்திற்கெல்லாம் கூப்பிட்டுக் கொண்டிருந்தால்? அவருக்கும் சுயபுத்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஸ்டாப் என்று அவரே சொந்த கால்களுக்கு பிரேக் போட்டு நிறுத்திய இந்த தருணம், செல்வகுமாருக்கும் சரி, இன்னபிற பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கும் சரி. ரொம்ப இக்கட்டான தருணம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்றக் கோரி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள் பி.டி.செல்வகுமார் தலைமையிலான வெகு சில தயாரிப்பாளர்கள். இந்த நிகழ்வுக்கு டி.ராஜேந்தர் வருவதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லப்பட்டது. டி.ஆரை அழைத்தவர் வேறு யாருமல்ல, செல்வகுமார்தான். முதலில் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்த டி.ஆர், கடைசிவரை அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் பெரும் சுவாரஸ்யத்துடன் திரண்டிருந்த மீடியாவுக்கும் பெருத்த ஏமாற்றம்.

இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரப்போகிறது சிம்பு நடித்து டி.ஆரே தயாரித்த இது நம்ம ஆளு. இந்த நேரத்தில் ஏன் விநியோகஸ்தர்களை பகைத்துக் கொள்வானேன் என்று நினைத்திருக்கலாம்.

படத்தை வெளியிட விடாமல் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் விநியோகஸ்தர்களை அடக்கி வைக்க தயாரிப்பாளர் சங்கம் முன் வர வேண்டும். அப்படி வராவிட்டால் சங்கத்தின் தலைவர் தாணு தயாரிக்கும் கபாலி படம் வெளியாகும் நேரத்தில் ரஜினி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். வேறு சில தயாரிப்பாளர்கள் பேசும்போது, விஜய்யை மட்டும் ஏன் விடணும்? அவர் வீட்டு முன்னாடியும் போராட்டம் நடத்துவோம் என்று ஆக்ரோஷம் ஆனார்கள்.

டி.ஆர் அங்கு வராததும் நல்லதுதான். வந்திருந்தால், அங்கு பேசியவர்களின் ஆவேச பேச்சு அத்தனையும் இவர் தலையில் விழுந்திருக்குமல்லவா?

1 Comment
  1. Dandanakka says

    காலையில சாப்பிட்டு வந்துட்டு மொபைல நோண்டிகிட்டு இருக்கிறதுக்கு பேரு உண்ணாவிரதமா?. இந்த காமெடிய மணிகணக்கா உக்கார்ந்து செய்தியா சேகரித்த உங்கள நினைச்சாதான் வருத்தமாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.