பத்து வருஷம் கழித்தும் அதே ஜோதிகா!

0

‘மொழி’ படத்தை பார்த்தவர்கள் ஜோதிகா ஃபேன் ஆகி பறக்க ஆரம்பித்துவிடுவார்கள். ‘இன்னும் கொஞ்ச காலம் கல்யாணத்தை தள்ளிப் போடும்மா…’ என்று திரையுலகமே ஜோதிகா வீட்டு வாசலில் போய் கெஞ்சுகிற அளவுக்கு அப்படத்தில் பர்மாமென்ஸ் கொடுத்திருந்தார் ஜோ. இருந்தாலும், கல்யாணம் கதவை தட்டினால், கை தானாக திறக்கும் அல்லவா? புகுந்த வீட்டுக்கு பறந்துவிட்டார் ஜோ. தாய் வீடான சினிமா, ‘அப்பப்ப வந்துட்டு போம்மா’ என்று வழியனுப்பியும் வைத்தது.

அந்த அப்பப்போ… இப்போது அடிக்கடி வருகிறது. வரட்டும். இன்னும் நிறைய முறை வரட்டும். கிட்டதட்ட பத்து வருடங்களுக்குப் பின் காற்றின் மொழி படத்தில் நடிக்க அழைத்த இயக்குனர் ராதாமோகனுக்கு சம்மதம் சொன்ன ஜோதிகா, அதே துறுதுறு, அதே குல்பி கண்களோடு பர்பாமென்ஸ் பண்ண வந்துவிட்டார்.

விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார் ஜோதிகா. இப்படத்திற்காக தனியாக ஒரு எப்.எம்.ரேடியோ ஸ்டேஷனை செட் போட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த ஜோதிகா, நிறைய பேசினார். கொஞ்சம் மட்டும் இங்கே-

ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன்.

சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.

பின்குறிப்பு- திரையுலகத்தின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு ‘காற்றின் மொழி’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. அனைவருமே சொல்லி வைத்தார் போல ஆஹா ஓஹோ என்கிறார்கள். ராதாமோகன், ஜோதிகா படம் என்றால் அப்படிதான். இதையெல்லாம் தனியா வேற சொல்லணுமா?

Leave A Reply

Your email address will not be published.