மக்கள் ஆதரவு இல்லை! பெரிய நடிகர்களும் சைலன்ட்! வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்?

1

ஆறுன சப்பாத்திய கூட ஆப்பம்னு விக்கிற அளவுக்கு வில்லங்கமான ஆட்கள்தான் தியேட்டர்காரர்கள். அதுவும் மால் தியேட்டர்களில் அடிக்கிற கொள்ளைக்கு நிகரான பகல் கொள்ளை உலகத்திலே வேறு எங்குமே இல்லை. பணம் போட்ட தயாரிப்பாளருக்கு பக்குவமாக நெற்றியில் பட்டை போட தெரிந்தவர்கள், இவ்வளவு பெரிய சிக்கலில் சிக்குவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். மக்களையும் ஏமாற்றி பிடுங்கி, தயாரிப்பாளர்களுக்கும் பொய் கணக்கு காட்டி, அதுவும் போதாதென பல வருஷங்களாக அரசாங்கத்தையும் ஏமாற்றி வந்த கதையெல்லாம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் விதத்தில், எடுத்த எடுப்பிலேயே ஸ்டிரைக் என்று அறிவித்த திரையரங்க உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் மீது கடும் எரிச்சலுற்ற அமைச்சர்கள், அவர்களை உட்கார வைத்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நா குழறினார்களாம்.

தியேட்டர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் என்றைக்காவது நீங்கள் டிக்கெட் விற்றிருக்கிறீர்களா? அப்படி வசூலித்த பணத்தில் அரசு நிர்ணயித்த சொற்ப விலைக்குதானே இத்தனை காலமாக வரி கட்டி வந்தீர்கள்? இப்படியொரு பொய் முகத்தோடு பல காலம் அள்ளிக்குவித்த நீங்கள் அரசிடம் பேசாமலேயே கதவடைப்பு செய்தது மட்டும் நியாயமா என்றெல்லாம் மந்திரிகள் மடக்க, பதில் சொல்ல திணறினார்களாம் இவர்கள். எப்படியோ பேசி சரிகட்டி(?)விடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், கமலின் அறிக்கை ஒன்று வர, படு அப்செட் ஆனதாம் அரசு. “ஊழலில் பீகாரை மிஞ்சிய தமிழகம்” என்ற பேச்சை ரசிக்கவில்லை அமைச்சர்கள்.

அதற்கப்புறம் தங்கள் பிடியை இன்னும் இறுக்கிவிட்டார்களாம். இதைதான் எதிர்பார்த்தார் கமல். ஏன்? அவருக்கு சுத்தமாகவே பிடிக்காத ஒருவர், அந்த தியேட்டர் அதிபர்கள் கூட்டத்திலிருந்தார். அவரை பழிவாங்கதான் அமைதியாக முடிய வேண்டிய விவகாரத்தில் ஆரவாரமாக கல் எறிந்தார் கமல்.

விட்டால் ஸ்டிரைக் ஒரு மாதமானாலும் முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்க… சட்டென்று முடிவுக்கு வந்துவிடுவதான் தங்கள் தொழிலுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

மக்கள் ஆதரவில்லாதது ஒருபுறம். அஜீத், விஜய் மாதிரி நடிகர்கள் வாயை திறக்கவே திறக்காது இன்னொரு புறம். சும்மா பேச்சுக்கு மட்டும் ஒரு ட்விட்டை போட்டு சைலண்ட்டாக ஒதுங்கிக் கொண்டாரே ரஜினி, அதுவும் ஒரு காரணம். இப்படி பல முனை தாக்குதல்களால் தங்கள் ரோசத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்கிக் கொண்டது தியேட்டர் வட்டாரம்.

அரசு தரப்பில் ஆறு பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் ஆறு பேரும் சேர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

இனிமேலாவது டிக்கெட்டையும் கேண்டீன் பண்டங்களையும் நியாயமான விலையில் விற்று மக்கள் மனசில் இடம்பிடிங்க. அப்புறம் எல்லா நல்லதும் தானா நடக்கும்.

1 Comment
  1. Rajii says

    Thiruppor subramani abiramy ramanathan dhannu intha 3 persiyum veliye anuppina tamil cinema oralavu oruppadum.

Leave A Reply

Your email address will not be published.