விஜய் படம் போட்டேல்ல? விட்டேனா பார்!

0

தொழில் செய்யுற இடத்தில் தொந்தரவு செய்யவும் ஒரு கூட்டம் கிளம்பும். அப்படிதான் கிளம்பி வந்து கழுத்தை அறுக்கிறார்களோ என்று அலறி தவிக்கிறது செங்கல் பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்கள். இவர்களின் அலறல் சவுண்டு, அமெரிக்காவிலிருக்கும் ரஜினிக்கு கேட்கிறதோ, இல்லையோ? அருகாமையிலேயே இருக்கும் தாணுவுக்காவது கேட்க வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள் பாதிக்கப்பட்ட அந்த பதினொரு திரையரங்கங்களின் உரிமையாளர்களும்.

பிரச்சனை என்னவாம்?

பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை பார்த்திருப்போம். படம் குடித்தும் பிலிம் குடித்தும் வளர்ந்த பிள்ளை தாணு. தமிழ்சினிமாவின் சந்து பொந்தெல்லாம் நன்கு அறிந்த அவரையே கதிகலக்கிவிட்டார்கள் சிலர். தெறி படம் வெளியான நேரத்தில், செங்கல்பட்டு ஏரியாவில் அந்த படத்தை திரையிட மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி தூக்க, “நீ என்ன வேணாங்கறது. நானே சொல்றேன்… நீ வேணாம்” என்றார் தாணு. இவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதலில் ஐயோவானது விஜய் ரசிகர்கள்தான். வாலிபத் தெம்புள்ளவர்கள் சென்னை லிமிட்டிற்குள் பஸ் ஏறியோ ரயில் ஏறியோ வந்திறங்கி தெறியை பார்த்துவிட்டுப் போனார்கள். மற்றவர்கள்? குடும்பம் குடும்பமாக ஏமாந்ததுதான் மிச்சம்.

அந்த நேரத்தில், “நாங்க தெறிக்கு சப்போர்ட்” என்று 11 தியேட்டர்காரர்கள் படத்தை தங்கள் தியேட்டர்களில் வெளியிட, அவர்களுக்குதான் படம் கொடுக்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களை தடுத்து, சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டது கலகக்குழு.

எங்கள் தொழிலை மீட்டுக் கொடுக்கணும். தடியெடுத்தவர்கள் எல்லாரும் தண்டல்காரர்கள் ஆகி பஞ்சாயத்து செய்வதையும் தடுக்கணும் என்ற கூக்குரலோடு தமிழக அரசிடம் முறையிட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட தியேட்டர்காரர்கள். இந்த தியேட்டர்களுக்கு கபாலி படத்தை கொடுத்து அவர்களை கொஞ்சமாவது மீட்டெடுப்பாரா தாணு?

Leave A Reply

Your email address will not be published.