தொண்டன் / விமர்சனம்

0

“ஆம்புலன்ஸ் டிரைவரெல்லாம் ஆண்டவனின் அம்சம். அவனுக்கே பிரச்சனைன்னா ஆக்குவானா துவம்சம்?”

இந்த இரண்டே வரிக்குள் இக்கதையை அடக்கிவிடலாம். அன்பு, கருணை, பாசம், காதல், ஜீவகாருண்யம், என்று நாலாப்பக்கமும் சுழன்று அடிக்கிறார் சமுத்திரக்கனி. நல்லவருக்கு நல்லவராக, கெட்டவனுக்கும் நல்லவராக, கேடு-கெட்டவனுக்கும் கூட நல்லவராக இருப்பதால், வெளியே வரும்போது சமுத்திரக்கனியின் படம் போட்ட போஸ்டருக்கும் கூட விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறது கூட்டம். இனி வில்லேஜ் மற்றும் டவுன் சுனைனாக்களின் மனங்களிலெல்லாம் ஒரு சமுத்திரக்கனி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார்.

தானுண்டு. தன் ஆம்புலன்ஸ் சேவையுண்டு என்று வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி வழக்கம் போல குத்துப்பட்டு கிடக்கும் ஒரு அரசியல்வாதியின் உயிரை காப்பாற்றக் கிளம்புகிறார். அந்த வேன் ஆஸ்பிடல் போய்விடக் கூடாது என்று தடுக்கும் கொலைகார கோஷ்டி, வேனை துரத்த… அவர்களை மீறி மருத்துவமனைக்கு பறக்கிறது வண்டி. அப்புறமென்ன? மந்திரி நாராயணனின் நேரடி எதிரியாகிவிடுகிறார் ஆம்புலன்ஸ் சமுத்திரக்கனி. தொடர்ந்து அவனது அநீதிகளால் பெரும் துயரங்களை அனுபவிக்கிறது அவரும் அவரது குடும்பமும். கடைசியில், வன்முறைக்கு வன்முறையே தீர்வல்ல. அதையும் தாண்டி வேறொன்று இருக்கிறது. அதுதான் ராம்மோகன்ராவ்(?) வைத்தியம் என்று முடிவெடுக்கும் சமுத்திரக்கனி, மந்திரியின் சொத்து பத்து விபரங்களை ஐ-டி க்கு போட்டுக் கொடுக்க… அப்புறம் என்ன? க்ளைமாக்ஸ்!

எதிரியோ… நண்பனோ… உயிரு உயிருதான் என்கிற மகத்தான தத்துவத்தோடு முடிகிறது படம்.

தன் தங்கைக்கு டார்ச்சர் கொடுப்பது தன் நண்பனே என்று தெரிந்த பின்பும், அவனை அடிக்காமல் உதைக்காமல் அன்பு காட்டி, அவனுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, தங்கையின் மனதில் அவனுக்கு இடம் பிடித்து தருகிற காட்சிகளிலெல்லாம், ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று நினைக்க வைக்கிறார் கனி. அவ்வளவு ஏன்? ஆக்ரோஷமாக வெகுண்டு எழுந்து, நாடி நரம்பை புடைத்துக் கொண்டு கிளம்புகிற நேரத்தில் கூட, தன் ஆசானின் சொல் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமைதி நிலைமைக்கு திரும்புவதெல்லாம் சமுத்திரக்கனிக்கே சாத்தியம். ரசிகர்களின் மத்தியில் விரிந்து பரந்து கிடக்கும் கனியின் இமேஜ் மேற்படி காட்சிகளை ஒப்புக் கொள்ள வைப்பதுதான் அழகு!

அப்புறம்… தமிழ்நாட்டில் நிலவி வரும் அவ்வளவு பிரச்சனைகள் பற்றியும் ஆங்காங்கே போட்டு பொரித்தும் வறுத்தும் எடுக்கும் போதுதான், “கதையை விட்டுட்டு எங்கெங்கோ உங்க ஸ்டியரிங்கை திருப்புறீங்களே கனி சார்…” என்றாகிறது தியேட்டர்.

சுனைனா, திடீரென பேரழகியாக மாறியது எப்படி என்றே புரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அவரை காட்ட மாட்டார்களா என்றிருக்கிறது. தன் காதல் நிறைவேற அவர் பயன்படுத்தும் டெக்னிக், விநோதமானது. ஆமாம்… கடைசி வரைக்கும் ஒத்த செருப்பையும், உதவாத சவுரியையும் திருடுனது யாருண்ணே காட்டலையே சார்?

விக்ராந்துக்கு உருப்படியான கேரக்டர். நல்ல நடிப்பால், தத்தளிக்கும் எறும்புக்கு இலை கிடைத்தது போல இப்படத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கம்பீரமான ஒரு வில்லேஜ் அப்பாவாக கலகலக்க விட்டிருக்கிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. (இப்படியொரு மனுசனையா கொலகாரப் பாவியா காட்னீங்க இம்புட்டு நாளா? அடப்பாவிகளா…!)

மகா வில்லனாக நடித்திருக்கிறார் நமோ நாராயணன். பல படங்களில் டம்மி வில்லனாகவும் காமெடி ரோலிலும் பார்த்து பழகியதால், அவரது கொடூரத்தை ஏற்க நாம் ட்யூன் ஆவதற்குள் படமே முடிந்துவிடுகிறது.

சமுத்திரக்கனியின் தங்கையாக வரும் அர்த்தனாவை, இங்கேயே பிடித்து வைத்துக் கொள்ளலாம். அழகு ப்ளஸ் நடிப்பு அம்புட்டு கச்சிதம். ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து ரசிகர்களின் ஏச்சு பேச்சுக்கு ஆளாகிறார் சவுந்தர்ராஜன். சிறப்பு!

எதிர்பாராத நேரத்தில் நம்ம சூரியும் உள்ளே வருகிறார். ஒரே சீன்தான். மனுஷன் தியேட்டரை கலகலக்க விடுகிறார். கிட்டதட்ட இதே அளவு நேரம்தான் தம்பி ராமய்யாவுக்கும். கொஞ்ச நேரத்தில் மெடல் குத்திக் கொண்டு கிளம்பிவிடுகிறார். சூப்பர்ப்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எல்லா பாடல்களும் ரம்மியம். பின்னணி இசையும் ஸ்பெஷல்!

குமுதத்தையும் கோனார் தமிழ் உரையையும் சேர்த்து பைண்டிங் செய்தால் அதுதான் தொண்டன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.