தமிழக அரசின் விருதும், மானியமும்! கவரிமான்களும்… கரப்பான்பூச்சிகளும்!

1

ஆறு வருஷத்துக்கான விருதையும் ஒரே நேரத்துல சேர்த்து வச்சு கொடுத்தாலும் கொடுத்தாங்க. கவரிமான்கள் ஒரு பக்கமும் கரப்பான் பூச்சிகள் இன்னொரு பக்கமுமாக ஓட ஆரம்பித்திருக்கின்றன. ‘ஒழுங்கா கொடுக்கப்படல. சரியான தேர்வு இல்லே’ என்று ஒரு பிரிவும், ‘காலம் தவறினாலும் கொடுத்ததுக்கு நன்றிங்கோ’ என்று இன்னொரு பிரிவும் கருத்துக்களை தெரிவிக்க, கந்தர்கோலம் ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம்.

சிறந்த படமாக ‘அழகர்சாமியின் குதிரை’ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்கிறார் சுசீந்திரன். “உங்க கண்ணுக்கு நானோ, வைரமுத்துவோ தெரியலையா?” என்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். “இந்த ஆறு வருஷத்துல ஒரு நல்லப்பாட்டு கூடவா நாங்க எழுதல?” என்று திமுக காரரான பா.விஜய் கேட்பதற்கு அதிமுக ஆட்சி எப்படி பதில் சொல்லும்?

“ஏன்யா… கரண் சிறந்த நடிகர்னா கோடம்பாக்கத்துல ஏன் இடி விழாது?” என்று பெரும் கவலை பிடித்தாட்டுகிற விதத்தில் குமுறுகிறது இன்னொரு கூட்டம். “ரஜினி, கமல், அஜீத், (அப்படியே நேர்ல வந்து வாங்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு) விஜய், தனுஷ்னு ஒரு ஹீரோவை கூட இந்த அரசு மதிக்கவில்லை. “பேர் தெரியாத ஆளுங்கள்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள புகுந்த மாதிரியிருக்கேய்யா இந்த விருது பட்டியல்?” என்று குமுறுகிறது அதே கோடம்பாக்கம்.

“இந்த விருதை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுறது. விருதோட சேர்த்து ஒரு வீடு கொடுத்தாலாவது பிரயோஜனமா இருக்கும்” என்கிறார் டைரக்டர் வசந்தபாலன். விருது பெற்றவர்களின் மனநிலை இப்படியிருக்க, சிறுபடங்களுக்கான மானிய விவகாரம் இன்னும் சுத்தம். இந்த ஆறு வருஷத்துல கிட்டதட்ட 300 படத்துக்கு மேல வந்திருக்கு. ஆனால் 149 படங்களுக்கு மட்டும்தான் மானியத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கு. “அம்மா இருக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கு அப்படியே கொடுக்காமல், இவங்க இன்னொரு முறை வடிகட்டிக் கொடுத்தது அடுக்கவே அடுக்காது” என்று சிறுபட தயாரிப்பாளர்கள் பல கண்ணீர் வடிக்கிறார்கள்.

முக்கியமாக ‘வெங்காயம்’. சங்ககிரி ராஜ்குமார் இயக்கி, தமிழ்சினிமாவே கொண்டாடிய படம். மிக மிக சிறு தயாரிப்பு படம் என்றால் சத்தியமாக அதுவேதான். இயக்குனர் சங்கமே தனது உறுப்பினர்களுக்கு படத்தை திரையிட்டு மகிழ்ந்தது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த படத்தை மானியம் கொடுத்து கொண்டாடுவதுதானே முறை? மண்ணாங்கட்டி…. திரும்பிக் கூட பார்க்கவில்லை இந்த மானியத் தேர்வு கமி(—–)ட்டி.

“ஒண்ணுமே இல்லாம கிடந்தோம். கொஞ்சமாச்சும் சந்தோஷப்படுங்கப்பா. அந்தம்மா உசிரோட இருந்திருந்தா, பல்லி வாலு அறுந்த மாதிரி துள்ளந்துடிக்க கிடந்திருப்போம். ஒருத்தரும் சீண்டியிருக்க மாட்டாங்க. இந்த எடப்பாடி தேவலாம்ப்பா” என்கிறார்கள் அதே கூட்டத்திலிருந்து சிலர்.

இந்த விருதுகளும் மானியங்களும் வழங்கப்படுகிற தேதி இன்னும் முடிவாகவில்லை. “அந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி அசருகிற விதத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று இப்பவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சங்கப் பிரமுகர்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஐம்பது வருஷ திராவிட பாரம்பரியம் இப்போதும் ஒருமுறை சோப்புப் போட்டு சுத்தப்படுத்தப்படும். எடப்பாடி முகத்தில் அம்மாவின் புன்னகை ஒளிரும்.

மெல்ல மெல்ல இவரை(யும்) ‘சந்திரமுகி’யாக்காமல் சினிமா ஜால்ராக்கள் ஓயாது என்பதுதான் கடைசி கட்ட தகவல்.

“ஒரு நல்லது நடக்கணும்னா, நாலு கெட்டதுதான் நடந்துட்டு போகட்டுமே” என்கிறீர்களா? அப்படின்னா நீங்க விஷால் கோஷ்டிதான். வாங்க சோடியா நின்னு ஆடலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
 1. Rajii says

  Ungalukku nallathu nadakkanum endra ipadithan irukkanum, illatti onnume nadakkathu..
  Murandu pidichchittu iruntha cinema vukku than nastam. Namathu naattu nilamai appadi
  Atleast 149 padangalukku koduthangale..
  “ஒரு நல்லது நடக்கணும்னா, நாலு கெட்டதுதான் நடந்துட்டு போகட்டுமே” என்கிறீர்களா? அப்படின்னா நீங்க விஷால் கோஷ்டிதான் ???
  Vishal etho seikiraar, aana Ethai thitta oru koottam varume suresh kamatchi namma cheran anna…….
  Cheran annavukku viruthu illaiya- nalla iyakkunar unarchi vasapadama padam mattum eduththa nallathu.

Leave A Reply

Your email address will not be published.