சதா நடித்த படத்திற்கு 87 கட்! விழி பிதுங்கிய இயக்குனர்!

0

‘அகண்ட ஏரி ஒன்று அகலம் குறைந்த குட்டையா மாறிடுச்சே’ என்கிற வருத்தம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால் ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத், அதே சோஷியல் அக்கறையோடு படம் எடுக்கிறாரே என்கிற ஆயின்மென்ட்டை போட்டு தேய்த்து அந்த வலியை மறக்கடிக்கலாம்.

மஜீத் இயக்கி, அவரே தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த படம் ‘டார்ச் லைட்’! தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகள் சிலரிடம் இந்த கதையை அவர் சொல்ல, தப்பித்தோம்… பிழைத்தோம்… என்று ஓடினார்களாம். கடைசியாக அந்நியன் புகழ் சதா, ஆஹா ஓஹோ என்று பாராட்டியதுடன் திறந்த(?) மனதுடன் இப்படத்தில் நடிக்க சம்மதித்தது ஆச்சர்யம்.

நிறைய மெனக்கெட்டிருக்கிறார் சதா. ஒரு காட்சியில் அவர் முட்டி இரண்டிலும் செம அடி. அப்படியும் காட்சி ஓகே ஆச்சா? என்று அக்கறையோடு கேட்டார் சதா என்கிறார் மஜீத். இவ்வளவு கஷ்டப்பட்டு இயக்கிய படத்தை சென்சாருக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தவருக்கு அங்கு தரப்பட்ட பதில்தான் சைனைடுக்கு ஒப்பானது. சார்… உங்க படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது. வேணும்னா ரிவைசிங் கமிட்டிக்கு போங்க என்று கூறிவிட்டார்களாம்.

கடும் வருத்தத்தோடு அங்கு போன மஜீத்திற்கு அடி மேல் அடி. சுமார் 87 கட் கொடுத்தார்களாம். முழு சட்டையில் முக்கால் வாசி நறுக்கிட்டா, வெறும் கர்சீப்தானே மிஞ்சும்? மிச்ச படத்தை வச்சுகிட்டு நான் என்ன பண்ணுறது என்று கவலையோடு கேட்ட மஜீத்திற்கு, நறுக்கிப் போட்ட காட்சிகளை வச்சு நிரப்பிக்கங்க என்று அலட்சியமாக பதில் சொல்லப்பட்டதாம்.

கொடிய வறுமையில் சிக்கி, குடும்பத்திற்காக தன்னையே எண்ணையாக்கி கரையும் சிவப்பு விளக்கு பெண்களின் கதையை ஏன் மனிதாபிமானத்தோடு அணுக மாட்டேன் என்கிறார்கள்? இதுதான் மஜீத்தின் கேள்வி.

ஏழை சொல் எப்போது அம்பலம் ஏறியிருக்கு? இதே படத்தை பெரிய பெரிய பேனர்கள் தயாரித்திருந்தால், சமூகத்தின் காவல் தெய்வங்கள் கண்மூடி இருக்குமோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.