சினிமா ஸ்டிரைக்! முடிவை நோக்கி ஒரு முக்கல் முனகல்!

0

கோலுக்கு அடங்குகிற குரங்காக இருந்தால் ஒரு கை பார்த்துவிடலாம். இது கோலையே பிடுங்கி அடிக்கிற குரங்காக இருக்கிறதே… என்று தயாரிப்பாளர்கள் விக்கித்துப் போயிருக்கிறார்கள். எந்தப்படம் எடுத்தாலும் தோல்வி. கோடிக்கணக்கில் நஷ்டம். இதற்கெல்லாம் யார் காரணம்?

முதல் குற்றச்சாட்டு, க்யூப் என்று சொல்லக்கூடிய ஒளிபரப்பு சேவை அமைப்பைதான். கட்டணத்தை குறைத்தாலே ஆச்சு என்று ஆரம்பித்த பிரச்சனை தியேட்டர்காரர்களின் கொள்ளை, அதிருப்தி பற்றி பேசி வேறொரு திசையில் வந்து நிற்கிறது. எதிர் தரப்போ ‘எங்க கட்டணம் ஒரு பிரச்சனையா? முதல்ல நடிகர்களின் சம்பளத்தையும் தயாரிப்பு செலவையும் குறைங்க’ என்கிறது.

மார்ச் 1 ந் தேதியிலிந்து தியேட்டர்களுக்கு புதுப்படங்கள் கிடையாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்க, மார்ச் 16 முதல் தியேட்டரே கிடையாது என்று தன் பங்குக்கு ஸ்டிரைக்கை அறிவித்துவிட்டது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இந்தப்பக்கம் சும்மாயிருப்பார்களா? பிரச்சனை முடியும் வரை, மார்ச் 16 முதல் படப்பிடிப்பு ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம் என்று முடிவெடுத்து ஸ்தம்பிக்க விட்டிருக்கிறார்கள்.

தியேட்டருக்கு மக்கள் வரத்து குறைந்து போகக் காரணமே தியேட்டர்களின் கொள்ளைதான். அதை களைய இன்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் ஒரு லிஸ்ட் போட்டு வலியுறுத்தி வருகிறது. சிறு படங்களுக்கு ஒரு ரேட், பெரிய படங்களுக்கு ஒரு ரேட் என்று டிக்கெட் கட்டணங்கள் மாற வேண்டும் என்பது அதில் ஒரு முக்கியமான கோரிக்கை.

இதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துழைக்கப் போவதில்லை. இதற்கு மட்டுமல்ல… தயாரிப்பாளர்கள் எங்களுக்கு அட்வைஸ் பண்ணுற வேலையை வச்சுக்கக்கூடாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த திருப்பூர் சுப்ரமணியம் போன்றவர்களால், இன்னும் குழப்பம்தான் கூடப் போகிறது.

சினிமாவுலகமும், இதை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் கதியும் என்னவாக போகிறதோ?

ரஜினிக்கும் கமலுக்கும் மார்க்கெட்டில் வேறு யாவாரம் தயாராகிவிட்டதால், இது குறித்து அவர்கள் பேசவும் விரும்பவில்லை. மிச்சமிருக்கிற அஜீத்தும், விஜய்யும் பேசி ஆகப்போவதுமில்லை. சூர்யா விக்ரம்களை யாரும் சட்டை பண்ணப் போவதில்லை.

ஐம்பது பைசா பவுடர் டப்பா, அடுத்தடுத்து கைமாறி ஐநூறு ஆயிரம் என்று மினுக்க ஆரம்பித்ததால் வந்த விநியோகக் கொடுமை இன்னொரு பக்கம். இவ்வளவு நெருக்கடிகளுக்கு நடுவில்…

சினிமா தன்னை தானே காப்பாற்றிக் கொண்டால்தான் உண்டு. அதற்கு தியேட்டர்களை நிரந்தரமாக மூடி, டி.வி., மற்றும் டிடிஎச்களையும், ஆன்லைன்களையும் நோக்கி ஓட வேண்டிய தேவையில் இருக்கிறது அதே சினிமா.

உயிர் பிழைக்கணும்னா ஓடு சினிமா ஓடு!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.