வந்தது ரெய்டு! வாய்க்கு பூட்டு போட முயற்சியா?

0

‘இங்கு 24 மணி நேரமும் பல் பிடுங்கப்படும்’ என்று எழுதி வைக்காத குறையாக மிரட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அப்போதைய தலைமை செயலாளர் ராம்மோகன் ராவே தப்பிக்க முடியவில்லை. நம்ம விஷால் எம்மாத்திரம்?

‘ஆன் லைனில் மெர்சல் பார்த்தேன்’ என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட ஹெச் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்புகிற முடிவில் இருந்தார் விஷால். விஷயம் கசிந்து ராசாவின் காதுக்கு போனதால் வந்த வினையோ என்னவோ? நேற்று விஷால் அலுவலகம் மற்றும் வீட்டில் ரெய்டு. வந்தது ஜி.எஸ்.டியா? அல்லது வருமான வரித்துறையா? என்று புரிந்து கொள்வதற்குள் கணக்கு வழக்கை பிரித்து மேய்ந்துவிட்டார்களாம். டிடிஎஸ் பிடித்தம் தொடர்பான விசாரணை என்பது பிறகுதான் தெரிய வந்தது. சுமார் 50 லட்ச ரூபாய் விஷால் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறது சம்பந்தப்பட்ட துறை. விசாரணைக்கு நேரிலும் அழைக்கப்பட்டிருக்கிறார் அவர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… மன நிலைக்கு அவர் வந்திருந்தாலும், மேற்படி ரெய்டு, இன்டஸ்ட்ரியில் இதற்கப்புறமும் வாய் திறக்கும் ஒரு சிலருக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

விஷயத்தை கேள்விப்பட்ட மீடியா, விஷாலை நேரில் சந்திப்பதற்காக துரத்திக் கொண்டிருக்க…. நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் விஷால். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொருத்தமான தலைப்பு இது என்று பொடி வைத்து பேசிய விஷால், அரசியல் ரீதியான மிரட்டல்தான் இது என்றால், அதை எதிர்கொள்ள தயார் என்று கூறியது வியப்பு.

சுமார் 30 கோடி ரூபாய் கடனில் இருக்கிறாராம் விஷால். அதை கருத்தில் கொண்டு, ரெய்டுக்கு வர்றவங்க ஏதாவது போட்டுக் கொடுத்துட்டு போனீங்கன்னா சவுக்யம்!

Leave A Reply

Your email address will not be published.